மனதைக் கவரும் மதுபனி
ஓவியக் கலை பாரம்பரியமானது. ஓவியம் வரைதல் நாட்டுக்கு நாடு வேறுபடும். அந்தந்த பகுதியின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும், மக்கள் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாகவும் ஓவியங்கள் விளங்குகின்றன. நம் தஞ்சாவூர் ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. அதுபோலவே பீஹார் மாநிலத்தில் உள்ள மதுபனி மாவட்டத்தில் தோன்றிய பாரம்பரியம் மிக்க ஓவியக்கலைதான் 'மதுபனி' (Madhubani). 'மதுர் பன்' என்பதற்கு 'செழிப்பான காட்டுநிலம்' என்று பொருள். இவ்வகை ஓவியங்கள் மிதிலா ஓவியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தனித்துவமான ஓவியக் கலையான இவை மதுபனி பகுதியில் உள்ள பெண்களால் உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது. கலை நுணுக்கம்கொண்ட மதுபனி ஓவியங்கள் கலை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை. புரராணம், வரலாற்றுக் கதைகள் இவற்றை அடிப்படையாக வைத்து மதுபனி ஓவியங்கள் வரையப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்களில் கிருஷ்ணர், பிள்ளையார், சிவன் போன்ற உருவச்சித்திரம் இடம் பெற்றிருக்கும். காவி, கரி எனப் பல வகையான வண்ணங்களைப் பயன்படுத்தி வரையப்படும் இவ்வகை ஓவியங்கள் பார்ப்பவர் கண்களைக் கவர்ந்திழுக்கும். முற்காலத்தில் மதுபனி ஓவியங்கள் சுவர்களில் வரையப்பட்டன. இன்றும் சுவர் போன்ற பின்னணியைத் திரையாக வைத்து வரையப்படுகிறது. இதற்காக காகிதத்தை பசும் சாணம் கரைத்த நீரில் தோய்த்துக் காய வைத்து அதன் மீது வண்ணம் தீட்டுகிற வழக்கமும் உண்டு. அரிசி மாவை உபயோகித்து தரையில் ஓவியம் வரைகிற முறையும் மதுபனியின் ஒரு வகைதான். இதை 'ஆரிபனா' என்கிறார்கள். புராணக் கதைகள் மட்டுமின்றி மரங்கள், பூக்கள், பறவைகள், மிருகங்கள் போன்றவை நுணுக்கமாக வரையப்பட்டு ஓவியத்தின் பின்னணியில் இடம் பெறுவது மதுபனி ஓவியங்களை மேலும் அழகூட்டுகிறது.