கற்க வேண்டும் தற்காப்பு!
இன்றைய உலகில் பாதுகாப்பு என்பது, நம்மை நாமே பார்த்துக்கொள்வதுதான். பரபரப்பான சூழலில் பிறரின் உதவிகள் எப்போதும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆணோ, பெண்ணோ ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்வது நல்லது. இன்றைய மாணவர்களின் நிலையறிய, நீங்கள் கற்றுவரும் தற்காப்புக் கலை என்ன? ஏன் அதைத் தேர்வு செய்தீர்கள்? என கேட்டிருந்தோம். சிவகாசி, ஹயக்ரீவாஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களை நேரில் சந்திந்தோம்.பாரதிஸ்ரீ, 9ஆம் வகுப்புகொரியாவில் உருவான தற்காப்புக் கலை, டேக்வாண்டோ. கைகளைவிட கால்கள் உங்களுக்குச் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்றால், உங்களுக்குச் சரியான தற்காப்புக் கலை டேக்வாண்டோ தான். எதிரியின் தலையில் உதைத்தல், குதித்து உதைத்தல், சுழன்று உதைத்தல், பறந்து உதைத்தல் போன்ற வேகமான உதைக்கும் பல டெக்னிக்குகளைக் கொண்ட கலை இது. இதைக் கற்றுக்கொண்டால், இப்பயிற்சிபெற்ற கால்களால் எதிரிகளை எளிதில் வீழ்த்தி விடலாம்.மதுகிருஷ்ணா, 9ஆம் வகுப்புதமிழர்களிடம் பல தற்காப்புக் கலைகள் இருந்தாலும், நான் சுருள் வாள் கற்று வருகிறேன். சுருள் வாள் என்பது, வளையக்கூடிய மெல்லிய இரும்புத் தகடுகளால் ஆனது. ஆபத்துக் காலத்தில் இதைச் சுற்றும்போது, எதிரியின் சதையை வெட்டும் அளவுக்குக் கூர்மையானது. இதை இடுப்புப் பட்டையாக அணிந்து கொண்டு செல்லலாம். தீபிகா, 8ஆம் வகுப்புபெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் தற்காப்புக் கலையை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும். தன்னை விடவும் அதிக பலம் கொண்டவர்களைத் திறமையாக வீழ்த்துவதற்கு, கராத்தே உதவுகிறது. அதனால் நான் இதையே கற்று வருகிறேன். கொஞ்சம் தைரியமாக உணர்கிறேன்.சஞ்சய் கிருஷ்ணா, 8ஆம் வகுப்புதற்காப்புக் கலையான கராத்தே கற்றுக் கொள்வதால் உடல்பலம், மனபலம் ஏற்படுகிறது. மனமும் ஒருநிலைப்படுத்தப் படுகிறது. நினைவாற்றல் மேம்படுகிறது. மிகுந்த தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு மாணவரும் கராத்தே கலையைக் கற்றுக் கொள்வது அவசியம்.தீபஷிகா, 8ஆம் வகுப்புமுன்பு ஆண்கள் மட்டுமே கற்றுக்கொண்ட தற்காப்புக் கலைகளை தற்சமயம் பெண்களும் கற்று வருகின்றனர். பெண்களுக்கு டேக்வாண்டோ தற்காப்புக் கலை சிறப்பான ஒன்று. குறிப்பாக கால்களுக்குத்தான் 'டெக்னிக்' அதிகம். இதனால் எதிரிகளை எளிதில் எதிர்கொள்ளலாம்.நிஷாந்த், 9ஆம் வகுப்புபொதுவாக, தற்காப்புக்கலை என்பது போராடும் குணத்தையும் பொறுமையையும் கூர்மைத்திறனையும் வளர்க்கிறது. சிலம்பத்தை நான் கற்றுக் கொள்வதோடு நின்றுவிடாமல் எனது ஊரில் உள்ள நண்பர்கள், உறவினர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். எல்லோரும் ஏதாவது ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பார் எனது ஆசிரியர்.