என் மனம் கவர்ந்தவர்!
உலகில் உங்களுக்குப் பிடித்த ஆளுமை யார்? என்று கேட்டிருந்தோம். உலக அளவில் என்று அழுத்திச் சொன்னாலும், நம் மாணவர்களில் பலருக்கு இன்னும் இந்தியர்களே பிடித்த ஆளுமைகளாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ: அன்புச்செல்வன் (9ஆம் வகுப்பு)மைக்கேல் ஜாக்ஸன். கருப்பினத்தில் பிறந்தாலும் தனது திறமையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நடனப்புயல் அவர். எவ்வளவு வெற்றி பெற்றாலும் அமைதியாகவும், அடக்கமாகவும் இருந்த அவரது பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். இசை மூலம் உலக அமைதி, அன்பு குறித்து வலியுறுத்தியவர்.பார்த்திபன் (9ஆம் வகுப்பு)இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் என் மனம் கவர்ந்த தலைவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியால் உயர்ந்தவர். மாணவர்களை எப்போதும் கனவு காணுங்கள் என்று உற்சாகப்படுத்தியவர். குடியரசு தலைவராக மாணவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டியவர். லோக மஞ்சு (12ஆம் வகுப்பு)இன்று நாம் பார்க்கும் நாடு அல்ல பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த அமெரிக்கா. நிறவெறியும் ஏற்றத்தாழ்வுகளும் மிக்கதாக இருந்த அந்நாட்டில், சமூக உரிமைகளுக்காகப் போராடிய மாபெரும் தலைவர் மார்ட்டின் லூதர் கிங். அவர்தான் என் மனம் கவர்ந்தவர். ஆப்பிரிக்க-, அமெரிக்கத் தலைவர் அவர்.நந்தகுமார் (9ஆம் வகுப்பு)இந்தியராக இருந்தாலும் உலகிலே எனக்குப் பிடித்தவர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்தான். உலகமே வியந்து பார்க்கும் பல சாதனைகளைச் செய்த பின்னும், ஒவ்வொரு போட்டியிலும் முதல் போட்டி போல கடுமையாக உழைத்தவர். அவரது எளிமை என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும். ஷில்பா (8ஆம் வகுப்பு)நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா என் மனம் கவர்ந்தவர். காந்தியடிகள் மீது பற்றுக்கொண்ட அவர், வன்முறையற்ற அறப்போரையே வழிநடத்தினார். இதனால் 28ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். காந்தியைப் பின்பற்றியவர்.சந்தோஷ் (11ஆம் வகுப்பு)'கே.எப்.சி' உணவகத்தின் நிறுவனரே எனக்குப் பிடித்த தலைவர். இவரது அம்மா சிக்கன் கடையில் பணியாற்றி வந்தாராம். அவர் இறந்த பின், சிக்கன் சுவையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, 100 முறை முயற்சி செய்து தோற்ற பின்னரும் விடாமுயற்சி மேற்கொண்டார். பின்னர் வெற்றி கண்ட இவர், அதனை விற்க முயற்சி மேற்கொண்டார். இவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது; உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. 40வது வயதில் தான் அவரது வெற்றிப் பயணம் தொடங்கியது என்பதை படித்தபோதே அவரைப் பிடித்துப்போனது. பிரணவ் சஞ்சய் (9ஆம் வகுப்பு)அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா எனக்குப் பிடித்த தலைவர். ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களில் இருந்து, விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் அமெரிக்க அதிபராக உயர்ந்தார். எல்லா மக்களிடமும் குறிப்பாக மாணவர்களிடம் எளிமையாகப் பழகும் அவரது குணம், தொலைநோக்குத் திட்டம் ஆகியவை எனக்கு பிடித்தமானவை.செளந்தரி (10ஆம் வகுப்பு)எழுத்தாளர் ஜே.கே. ரெளலிங், என் மனம் கவர்ந்தவர். 'ஹாரிபார்டர்' சீரிஸ் உட்பட பல நாவல்களை எழுதினார். அவரது சொந்த வாழ்க்கையில் பிரச்னைகளை எதிர்த்து நின்று போராடிய விதம் கவர்ந்தது. தன் அம்மா இறந்த பின்னரும் மனம் தளராமல் நாவல் எழுதினார். கணவர் பிரிந்து சென்றாலும், வீடு இல்லாமல் பெண் குழந்தையுடன் தனியாகப் போராடி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தார்.