நாசாவின் புதிய விண்வெளி உடை
பொதுவாக விண்கலங்களுக்குள் கழிவறைகள் இருக்கும். ஆனால், விண்வெளியில் விண்வெளிக்கான உடை அணிந்து வீரர்கள் இறங்கிப் பணிபுரியும்போது, அந்த உடையிலேயே கழிவுகளைச் சேகரிக்கும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. நாசா வடிவமைத்துள்ள ஓரியன் விண்வெளி உடைகள் (Orion Crew Survival Systems Suits - OCSSS), அவசர காலங்களில் 6 நாட்கள் வரையிலான கழிவுகளைச் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிலவுக்கும் செவ்வாய் கோளுக்கும் மனிதர்களை அனுப்பி ஆய்வுசெய்யும் முயற்சிகள் நடைபெற்றுவரும் இந்தச் சமயத்தில், இத்தகைய ஆடைகள் பெருமளவில் உதவக்கூடும். இப்போது புழக்கத்தில் இருக்கும் விண்வெளி உடைகளில் டயப்பர்கள் உள்ளன. இவற்றை 10 மணிநேரம் வரை மட்டுமே அணிந்திருக்க முடியும். எனவே, புதிய ஓரியன் உடைகள் விண்வெளி வீரர்களுக்கு கூடுதலான சௌகரியத்தைத் தரும்.