இயற்கை கொடை அல்ல, மூலதனம்!
மதிப்பு''என்ன ரொம்ப வருத்தமா இருக்கே கதிர்?” வீட்டுக்கு நடந்து வரும்போது உமா மிஸ் கேட்டார்.“நம்ம ஸ்கூல் பக்கத்துல ஒரு பூங்கா இருந்துச்சு இல்ல மிஸ். அதுல பல மரங்களை வெட்டிட்டாங்க. சாலையில் போற பஸ், லாரிக்கெல்லாம் இடைஞ்சலா இருக்குன்னு, காம்பவுண்டு சுவர் ஓரம் இருந்த மரக்கிளைகளை வெட்டினாங்க. அப்புறம் பார்த்தா, மரங்களையே வெட்டிட்டாங்க. ரொம்ப கஷ்டமா போச்சு மிஸ்.”“ஓ! அப்படியெல்லாம் சுலபமா வெட்ட மாட்டாங்களே! நம்ம அரசாங்கத்துக்கு 'இயற்கை மூலதனம்'னா என்னன்னு தெரியுமே? அதையும் மீறி வெட்டினாங்களா?”“இயற்கை மூலதனமா? அப்படின்னா என்ன மிஸ்?”“ஓ! இன்னிக்கு உலகமே அந்த வார்த்தைக்குப் பின்னாடிதான் நிக்குது. பவன் சுக்தேவ்வைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கியா?”“இந்த ஆண்டு டைலர் விருது வாங்கனவரா மிஸ்? சுற்றுச்சூழல் துறையில் நோபல் பரிசுன்னு சொல்றாங்களே, மிஸ்?”“இவ்வளவு கரெக்ட்டா சொல்றீயே! அடுத்த முறை ஒழுங்கா, 'பட்டம்' இதழ் நடத்துற 'பதில் சொல், அமெரிக்கா செல்' நிகழ்ச்சிக்குப் போ. நிச்சயம் உனக்கு வாய்ப்பு கிடைக்கும்.”“தேங்க்யூ மிஸ். பவன் சுக்தேவ் பத்தி சொன்னீங்களே...”“ஆமாம். அவர் தான் 'இயற்கை மூலதனம்'ங்கற சொல்லோடு உண்மையான அர்த்தத்தைச் சொன்னவர்.”“ஓ! அப்படின்னா என்ன மிஸ்?”“கடல்ல ஒரு சுறா இருக்குன்னு வெச்சுப்போம். அதுக்கு ஏதேனும் மதிப்பு உண்டா?”“நீங்க என்ன கேக்கறீங்கன்னு புரியலை, மிஸ்?”“சரி, விவசாய நிலத்து பக்கத்துல தேனீக்கள் இருக்கும். அதனோடு மதிப்பு என்னன்னு தெரியுமா?”“இதுக்கெல்லாம் எப்படி மிஸ் மதிப்பு சொல்ல முடியும்? இதெல்லாம் இயற்கையா இருக்கறது. வாழறது. நம்மைப் போலவே அதுவும் இந்த உலகத்துல வாழக்கூடிய உயிரினங்கள்.”“கரெக்ட். நம்மைப் போலவே அவையெல்லாமும் இங்கே வாழக்கூடியவை தான். ஆனால், அவை ஒவ்வொண்ணும் ஒரு வேலையைச் செய்யுது. அந்த வேலைகள் நம்ம கண்ணுக்கே தெரியாது. உதாரணமாக, சுறா மீன்களை எடுத்துக்கோ. அது நமது சூழல்லே இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிச்சு சேமிச்சு வெச்சுக்குது. ஒருசில சுறாக்கள் 200 ஆண்டுகள் கூட வாழும். அவை செத்துப் போகும்போது, அந்தக் கார்பனை , கடலின் தரைக்கு கொண்டுபோயிடும். ஒவ்வொரு சுறாவும் சராசரியா 33 டன் கார்பன் டை ஆக்ஸைடைப் பிரிச்சு எடுத்துடுது. இதனோட மதிப்பு என்ன தெரியுமா? 14.30 கோடி ரூபாய். அதாவது ஒரே ஒரு சுறாவின் மதிப்பு இது. இதுபோல உலகெங்கும் இருக்கும் சுறாக்களோட பங்களிப்பு எவ்வளவுன்னு கணக்கு போட்டுக்கோ.”“அப்படின்னா, ஒரு சுறா அழிஞ்சுபோச்சுன்னா, 14.30 கோடி ரூபாய் நஷ்டமா மிஸ்?”“கரெக்ட். நாம இதுவரைக்கும் இயற்கையைப் பார்த்த விதத்துக்கும் பவன் சுக்தேவ் பார்த்த விதத்துக்கும் இதுதான் வித்தியாசம். சதுப்பு நிலங்கள், பவளப் பாறைகள், காடுகள், மலைகள் என்று இயற்கையில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு மதிப்பைக் கொடுத்தார். அதாவது இயற்கையை அழிச்சுத் தான், நாகரிகம் வளர்ந்தது, வளர்ச்சி ஏற்படுதுன்னெல்லாம் பேசுறோம் இல்லையா? அதுக்கு மாறாக, பவன் வேறொரு கருத்தை முன்வைச்சார். அழிக்கப்படக்கூடிய ஒவ்வொரு இயற்கை வளத்துக்கு ஒரு மதிப்பு இருக்கு. அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு எவ்வளவுங்கறதைக் கணக்கிட்டுச் சொன்னார்.”“ஓ! எவ்வளவு இழப்பு மிஸ்?”“ஒவ்வொரு ஆண்டும், 14.3 லட்சம் கோடி ரூபாய் முதல், 32.18 கோடி ரூபாய் வரை இழப்பு.”“ஐயோ, அவ்வளவா?”“ஆமாம், கதிர். இப்படி இயற்கைக்கு ஒரு மதிப்பு போடுவதைத் தான் 'இயற்கை மூலதனப் பொருளாதாரம்'னு சொல்றோம். அதாவது, தொழில் மூலதனம், நிதி முதலீடுன்னெல்லாம் பேசறோமில்லையா? அதுபோல், இயற்கையே ஒரு மூலதனம். அதுக்கு மதிப்பு போட்டுச் சொன்னவர் தான் பவன் சுக்தேவ்.”“இதனால என்ன பலன் மிஸ்?”“இதுதான் முக்கியமானது. நம்மால இனிமேல் இயற்கையை புதுசா உருவாக்க முடியாது. கடலையோ, மலையையோ, காட்டையோ படைக்க முடியாது. அதைப் பாதுகாக்கத்தான் முடியும். அப்போ, அரசாங்கத்துல உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் இனிமேல் சுற்றுச்சூழல் சார்ந்து எந்த முடிவுகளை எடுத்தாலும், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு எடுப்பாங்க. வெறுமனே இயற்கையை அழிக்காதேன்னு சொல்றதுக்கும், அழிச்சா எவ்வளவு இழப்புன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?”“ஆமாம், மிஸ். அப்போ பவன் சுக்தேவ் கொண்டுவந்தது, பெரிய மாற்றமா மிஸ்?”“கண்டிப்பா. முற்றிலும் புதிய சிந்தனை. அவர் இந்தியாவுல பிறந்தவர். 25 ஆண்டுகள் வங்கித் துறையில வேலை பார்த்தவர். லாபத்துக்கும் நஷ்டத்துக்கும் வித்தியாசம் தெரிந்தவர். ஒவ்வொரு விஷயத்துக்கும் உள்ள மதிப்பை உணர்ந்தவர். அப்படிப்பட்ட பேங்கர், இயற்கையைப் பார்த்து கணிக்கும் போது, அது வேறொரு கோணத்தையே கொடுத்துச்சு. இயற்கைங்கறது ஏதோ நெகிழ்ச்சியான, உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமல்ல, அது நம் பொருளாதார வளத்தோடு சம்பந்தப்பட்டது. இதை நாம் உணர்வதில்லை. எதை ஒண்ணை அழிக்கறதுக்கு முன்னாடியும் இதை யோசிச்சுப் பாரு. இதைத்தான் பசுமைப் பொருளாதாரம்னு சொல்றாங்க.இயற்கையா ஒரு வளம் இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன, அதை அழிப்பதால் ஏற்படும் லாபம் என்ன? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தா, ஒரு விஷயம் புரியும். புதுசா எதைக் கொண்டுவந்தாலும், அதனால் கூடுதல் வளம் எதையும் உருவாக்க முடியாது. இந்த உண்மையைப் புரிஞ்சுக்கிட்டு, சமச்சீர் முறையில் திட்டங்களைத் தீட்டணும்ங்கறதுதான் பவன் சுக்தேவோடு பரிந்துரை.”அதற்குள் வீடு வந்துவிட்டது. பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அதன்மூலம் நாம் இழந்தது எவ்வளவு என்பதைக் கணிக்கவேண்டும் என்றும் முடிவுசெய்துகொண்டேன்.