உள்ளூர் செய்திகள்

மகாகவி பாரதி சுவைத்த வேப்பம்பழம்

(பாரதியார், அவர் மனைவி செல்லம்மாள் இருவரும் வீட்டின் அறையில் அமர்ந்திருக்கிறார்கள். செல்லம்மாள் பனையோலை விசிறியை சரி செய்தபடி பேசுகிறார்)செல்லம்மாள்: கவிஞர் ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறார்? என்ன சிந்தனை?பாரதியார்: ஒன்றும் இல்லை செல்லம்மா. இன்று தெருவில் நான்கைந்து சிறுவர்களைப் பார்த்தேன். அவர்கள் வேப்பம் பழங்களை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.செல்லம்மாள்: பொறுக்கட்டுமே! அதிலென்ன தவறு? விளையாட்டுக்கு எடுத்து இருப்பார்கள். பாரதியார்: இல்லை செல்லம்மா! விளையாட்டுக்கு எடுக்கவில்லை. வறுமையால், பசியால் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாள்: அது எப்படி உங்களுக்குத் தெரியும்?பாரதியார்: அவர்களிடம் கேட்டபோது, பசியாற பொறுக்கியதாகச் சொன்னார்கள். கூடவே புளியங்காய்களையும் வைத்திருந்தார்கள். செல்லம்மாள்: இரண்டையும் சாப்பிட்டால் பசியாறி விடுமா?பாரதியார்: நானும் சில பழங்களையும், காய்களையும் சாப்பிட்டுப் பார்த்தேன் செல்லம்மா. கடவுள் படைத்த பொருள்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. 'வேப்பங்காய் கசக்கும்' என்று மனத்தில் எண்ணினால் கசக்கிறது. 'அமிர்தம்' என்று நினைத்தால் தித்திக்கிறது...(சிரிக்கிறார்)செல்லம்மாள்: (தயங்கியபடியே) வீட்டில் அரிசி.... இல்....லை...! உங்களிடம் சொல்வதற்கு தயக்கமாக இருக்கிறது....பாரதியார்: உனக்கு நான் எத்தனை முறை கூறி இருக்கிறேன். அரிசி இல்லை என்று சொல்லாதே. அகரம் இகரம் என்று சொல் என்று...செல்லம்மாள்: சரி, வீட்டில் அகரம், இகரம் இல்லை.பாரதியார்: அகரம் இல்லா விட்டால் என்ன? வாழைப்பழங்கள் இருக்கிறதல்லவா! அதை சாப்பிட்டு பால் குடித்தால் போயிற்று.செல்லம்மாள்: இந்த நிலை எப்போதுதான் மாறும்?பாரதியார்: நாடு விடுதலை பெறட்டும்; யாவும் மாறும் என்றவர், (பேச்சை மாற்ற விரும்பி) உனக்கு நிவேதிதை பற்றி சொன்னேனா? நினைவிருக்கிறதா?செல்லம்மாள்: ஆமாம் சொன்னீர்கள்! கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு போனபோது, விவேகானந்தரின் சீடர் நிவேதிதையை சந்தித்தது பற்றி. அது பழைய கதை. அதற்கென்ன இப்போது?பாரதியார்: அவரை சந்தித்த பிறகுதான், என் பார்வை விசாலமானது செல்லம்மா! உன்னை ஏன் கொல்கத்தா அழைத்து வரவில்லை என்று நிவேதிதை கேட்ட கேள்வி, இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. செல்லம்மாள்: நீங்கள் சொன்னது சரிதானே! நான் வந்து என்ன செய்யப் போகிறேன்? கட்சி மாநாடெல்லாம் எனக்கு எதற்கு?பாரதியார்: அதைத்தான் நானும் சொன்னேன் செல்லம்மா. ஆனால், நிவேதிதை என்னிடம் கோபித்துக்கொண்டார். நீ மட்டும் வந்து என்ன சாதித்து விட்டாய்? என்று, முகத்தில் அறைவது போல் கேட்டார்.செல்லம்மாள்: ஐயோ! அப்புறம்?பாரதியார்: தேச விடுதலை, பெண் விடுதலை பற்றி எழுதும் நீங்கள், உங்கள் மனைவியைக் கூட்டிட்டு வராதது தப்பல்லவா? என்றார். அவரின் கேள்வி சரியென்றே பட்டது. என்னை நிறைய சிந்திக்க வைத்தது. நாடு விடுதலை அடைந்தால் மட்டும் போதாது, பெண்களுக்கும் விடுதலை வேண்டும் செல்லம்மா! எல்லாம் மாறும், யாவும் மாறும் என்றவர்,'ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்றவிந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்'தான் எழுதிய கவிதையின் வரிகளை, சத்தமாக அவர் பாட ஆரம்பிக்கவும்,செல்லம்மாள், சரி செய்த விசிறியால், அவருக்கு விசிறி விட ஆரம்பித்தார்.- இ.எஸ். லலிதாமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !