இரவில் சுறுசுறுப்பான பறவை
புள்ளி ஆந்தைஆங்கிலப் பெயர்: 'ஸ்பாட்டட் அவ்லெட்' (Spotted Owlet)உயிரியல் பெயர்: 'ஏதென் பிரமா' (Athene Brama)கண்ணைச் சுற்றி மஞ்சள் நிற வளையமும், வெள்ளை நிறப் புருவமும் உடைய சிறிய ஆந்தை. தலை, வட்ட வடிவில் இருக்கும். 'ஸ்ட்ரிகிடே' (Strigidae) குடும்பத்தைச் சேர்ந்தது. பழுப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும். ஆந்தையின் உடல் பகுதி முழுக்க, சிறு சிறு புள்ளிகள் காணப்படும். வயல்வெளிகள், தோட்டங்கள், குடியிருப்புகளே இவற்றின் வசிப்பிடங்கள். மரப்பொந்துகளிலும், பாறை இடுக்குகளிலும் தங்கும். பாழடைந்த கட்டடங்களிலும் வசிக்கும். வண்டு, பூச்சி, சுண்டெலி, பல்லி, ஓணான் போன்றவையே இவற்றின் உணவு. ஆண் பறவையைவிட பெண் பறவை அளவில் சற்றுப் பெரியதாக இருக்கும். சூரியன் மறையும் அந்திப் பொழுதிலும், இரவு வேளையிலும் மட்டும் இவை சுறுசுறுப்பாகச் செயல்படும். இரை தேடுவதும், வேட்டையாடுவதும் அந்த நேரத்தில்தான். இந்தியாவில் இவற்றின் இனப்பெருக்கக் காலம், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை. தெற்கு பகுதிகளில், நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. இயற்கையாக உருவாகிற மரப் பொந்துகளையே இவை இனப்பெருக்கத்தின்போது பயன்படுத்துகின்றன. பொந்துகளில், சருகுகள், காய்ந்த புற்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மீது ஐந்து முட்டைகள் வரை இடும். குஞ்சுகள் 30 நாட்களில் முழு வளர்ச்சி அடையும். விவசாயப் பயிர்களை அழிக்கும் எலி, வண்டு, பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இவை விவசாயத்திற்கு உதவுகின்றன. தெற்கு ஆசியாவில் பரவலாக காணப்படுகின்ற புள்ளி ஆந்தைகள், இந்தியா, வியட்நாம், ஈரான், தாய்லாந்து, மலேசியா போன்ற பகுதிகளில் அதிகம் உள்ளன. இலங்கையில் இந்தப் பறவைகள் காணப்படுவதில்லை.நீளம் - 21 செ.மீ.இறக்கை நீளம் - 17 செ.மீ.வால் நீளம் - 9 செ.மீ.எடை - 120 கிராம்- கி.சாந்தா