உள்ளூர் செய்திகள்

தோனி இல்லை!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில்தான் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக்கோப்பைகளையும் (50 ஓவர், 20 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி) இந்திய அணி வென்றது. இத்தகைய மூன்று கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் இவரையே சாரும். மேலும், இவர் ஆசிய கோப்பைகளையும் வென்று தந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் தன் திறமையை நிரூபித்துள்ளார். இதனால், இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதன்பின் ஒரு நாள், டி20 தொடர்களின் வீரர்கள் பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இதனால், ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளின் கீழ் இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. தோனி ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பே ஒப்பந்தப் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !