பெருகும் மயில்களின் எண்ணிக்கை!
புலிகள், யானைகள், சிங்கங்கள் போன்ற பெரிய உயிரினங்கள் பூமிக்கு முக்கியமானவை. அதேபோல் பறவைகளும் முக்கியமானவையே! அந்த வகையில் நம் நாட்டில் மொத்தம் 1,300 பறவை இனங்கள் உள்ளன.சமீபத்தில் பறவைகளின் நிலைமை பற்றி அறிந்து கொள்ள கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 15,000 பறவை நோக்கர்கள் (Bird watchers) இந்தப் பணியில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட முதல் பறவைக் கணக்கெடுப்பு இது. காடுகள், கிராமங்கள், நகரங்கள் என எங்கெல்லாம் பறவைகள் காணப்படுமோ அங்கெல்லாம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இதில் சேகரிப்பட்ட தகவல்கள், பறவைகளின் தரவுத்தளமான இ- -பேர்டு (E Bird) என்ற இணையதளத்தில் சேமிக்கப்பட்டன. இறுதியில் அவை தொகுக்கப்பட்டு, முடிவுகள் வெளியாயின.கடந்த ஐந்து ஆண்டுகளில் 162 பறவை இனங்களில், 80% இனங்கள் அழிவைச் சந்தித்துள்ளன. புல்வெளிக் காடுகள், கரைப் பறவைகள், வலசைப் பறவைகள், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் வாழும் ஓரிட வாழ்விகள், முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்ணும் பறவைகள் ஆகியவை இதில் அடங்கும்.தொடர்ச்சியாகப் பறவைகள் அழிவதற்கு பல காரணங்கள் உண்டு. வாழ்விடம் அழிதல், வேட்டையாடுதல் (உணவுக்காக), கடத்துதல் (செல்லப் பிராணிகளாக வளர்க்க சட்டவிரோதமாக விற்பனை செய்தல்), சுற்றுப்புறத்தில் காணப்படும் நச்சுப்பொருட்களை உண்ணுதல் (மருந்து, மாத்திரைகள், பிளாஸ்டிக் குப்பைகள், ஊசிகள்) என பறவைகளுக்கு எதிராகப் பல ஆபத்துகள் காணப்படுகின்றன.இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால், ஆபத்தில் இருக்கும் என நினைத்த நம் தேசியப் பறவையான மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளாக சிட்டுக்குருவி அழியும் நிலையில் உள்ளதாக செய்திகள் படித்திருப்போம். ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், நகரங்களில் இன்னும் அதிகரிக்கவில்லை. பல ஆண்டுகளாக காட்டு ஆந்தைகளை அதிகம் பார்க்க முடியவில்லை. ஆனால், பல இடங்களில் இப்போது இதைக் காண முடிகிறது.இந்தக் கணக்கெடுப்பில் பல பறவைகள் பற்றிய சரியான கணக்குகள் தெரிந்தாலும், இன்னும் பல பறவைகளுக்கான தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். இதற்கு இன்னும் பல ஆர்வலர்கள் தேவை. இன்னும் பலர் இணைந்தால், இந்தியாவின் பறவைகளின் நிலைமையை முழுவதுமாக புரிந்துகொள்ள இயலும். எனினும், இந்தக் கணக்கெடுப்பு ஓரளவுக்குப் பறவைகளின் தற்போதைய நிலைமையைக் குறித்து தெரிந்துக் கொள்ள உதவும். சதுப்பு நிலங்கள், புல்வெளிக் காடுகள் சீரமைப்பு, தீவிர கண்காணிப்பு, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்குதல் மூலம் பறவைகள் அழிவைத் தடுக்க முடியும்.- சு.சந்திரசேகர்