உள்ளூர் செய்திகள்

இந்திய மல்யுத்த வீரர்களின் ஒலிம்பிக் கனவு

இந்த ஆண்டில் 'ரேங்கிங்' சீரிஸ் (ஜன. 15-18, ரோம்), ஆசிய சாம்பியன்ஷிப் (பிப். 18-23, டில்லி), ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று (மார்ச் 27-29, சீனா) என அடுத்தடுத்த தொடர்களில் இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களைத் தேர்வு செய்ய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எஃப்.ஐ.) டில்லியில் தகுதிப் போட்டியை நடத்துகிறது. 74 கி.கி. பிரிவில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார், காயத்தால் பங்கேற்கவில்லை. 74 கி.கி. பிரிவு ஃபைனலில் ஜிதேந்தர் குமார் 5-2 என்ற கணக்கில் அமித் தான்கரை வீழ்த்தினார். அடுத்து 'ரேங்கிங்' சீரிஸ் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ளார். இவற்றில் பதக்கம் வென்றால் நேரடியாக ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாடுவார். இது, சுஷில் குமாரின் டோக்கியோ ஒலிம்பிக் கனவுக்கு தடையாக அமையலாம்.தீபக் புனியா (86 கி.கி.), ரவி தாகியா (57 கி.கி.) உள்ளிட்டோரும் மற்ற போட்டிகளில் வெற்றி பெற்றனர்.இது தொடர்பாக டபிள்யு.எஃப்.ஐ. தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், “தற்போது வெற்றி பெற்றுள்ள நட்சத்திரங்கள் முதலிரண்டு தொடர்களில் சிறப்பாகச் செயற்பட வேண்டும். இதில் எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு புதிதாகப் போட்டி நடத்தப்படும்.தகுதிப்போட்டியில் வெற்றி பெறாமல் சுஷில் உள்ளிட்ட எந்த ஒரு வீரரும் இந்த ஆண்டு நடக்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !