ராகங்களின் அரசி
பெங்களூரூவில் இசைக் கச்சேரி. சென்னையிலிருந்து அம்மாவுடன் மகள் செல்கிறாள். கச்சேரியன்று ஆஸ்துமாவால் மூச்சுத்திணறல் அதிகரித்து அம்மாவால் பாட முடியாமல் போகிறது. உடனடியாக மகளை இசைமேடையில் ஏற்றினார் அம்மா. பின்னாளில் மிகப்பெரிய இசை கலைஞராக உருவான அந்த இளம்பெண். எம்.எல்.வசந்தகுமாரிதான். மெட்ராஸ் லலிதாங்கிக்கும், கூத்தனூர் அய்யாசாமிக்கும் மகளாக பிறந்தவர் வசந்தகுமாரி. 1920ன் தொடக்கத்தில் பெண்கள் மேடைக் கச்சேரி செய்யத் தொடங்கினர். கலைத்துறையான இசை, நடனம் போன்றவற்றில் பெண்களின் அடையாளம் மெல்ல மெல்ல மெருகேறத் தொடங்கியது.. இந்தியாவில் முதன்முதலில் சுதந்திர முழக்கப் பாடலை ஒலிநாடாவில் பாடியவர் மெட்ராஸ் லலிதாங்கி. வசந்தகுமாரி, சிறுவயதிலேயே புரந்தரதாசர் கீர்த்தனைகளுக்கு ஸ்வரங்கள் எழுதியிருக்கிறார். புகழ்பெற்ற கலைஞராக இருந்த ஜி.என்.பாலசுப்பிரமணியம், வசந்தகுமாரியின் திறமையைப் பார்த்து முழு நேர பாடகியாக உருவெடுக்க பயிற்சி வழங்கினார். சிறுவயதிலேயே வசந்தகுமாரி அம்மாவோடு பல கச்சேரிகள் செய்திருக்கிறார். நன்கு பயிற்சி பெற்றபின் தனியாக பாடத் தொடங்கியதும் 'மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி' என்று அறியப்பட்டார். சுருக்கமாக எம்.எல். வசந்தகுமாரி என்று அழைக்கப்பட்டார்.வசந்தகுமாரியின் கச்சேரியை நேரில் பார்த்தவர்களுக்கும், அவருடன் சேர்ந்து மேடையில் வாத்தியங்களை வாசித்தவர்களுக்கும் ஒவ்வொரு நாளும் புதுவித அனுபவங்களே. ராகங்களையும், ஆலாபனைகளையும் மேடையில் எப்படி கற்பனை விரிகிறதோ அதற்கேற்றாற் போல் மெருகேற்றி, மேல் கட்டையில் சிறப்பாக பாடும் திறன் கொண்டவர். மேடையில் இசையில் புதிய பரிசோதனைகள் செய்ய தயங்கியது இல்லை. அவருடன் வாத்தியங்கள் வாசிப்பவர்களுக்கு தினம் தினம் சவால்கள் காத்திருக்கும். பலரது இசையை ஆழ்ந்து கேட்டாலும், அவருக்கென்று தனியொரு பாணியை கடைப்பிடிப்பது தான் எம்.எல்.வியின் தனிச்சிறப்பு என்று அவருடைய குரு ஜி.என்.பி குறிப்பிட்டுள்ளார். அம்மா லலிதாங்கியைத் தொடர்ந்து வசந்தகுமாரி புரந்தரதாசர் கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்தினார். பேசும் திரைப்படங்கள் வந்த சமயத்தில் எம்.எல்.வி திரைத்துறையில் பல நல்ல பாடல்களை பாடினார். 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்ற பாரதியாரின் பாடல், 'மணமகள்' படத்தில் இடம்பெற்ற 'எல்லாமே இன்ப மயம்' என பல பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்பாடல்கள் மூலம் தனிக்கவனம் பெற்றதோடு, பொருளாதாரத்திலும் உயர்ந்தார். புதிய இசை, மொழி என எப்போதுமே கற்றுக்கொள்ளும் ஆர்வம் சிறுவயது முதலே எம்.எல்.வி.க்கு இருந்தது. அதனால்தான் மராத்தி மொழியின் பக்திப் பாடல்களான அபங்கங்களையும் முறையாகக் கற்றுக்கொண்டார். அவருடைய இறுதி நாட்கள் வரை கற்றுக்கொள்வதையும், பிறருக்கு கற்றுக் கொடுப்பதையும் பெரிய கடமையாக வைத்திருந்தார்.