எழுதுகோலை நேசித்த செங்கோல் மன்னர்கள்
அந்தக் காலத்தில் நிறைய அரசர்கள் பாடல் எழுதும் திறமை பெற்றவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சில அரசர்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்:சேரமான் கணைக்கால் இரும்பொறைசோழ அரசன் செங்கணான் என்பவரோடு போரிட்டுத் தோற்றவர். இதனால் சோழ அரசன் இவரை சிறையில் அடைத்தான். சிறையில் வாடியபோது தாகம் எடுக்கவே காவலனிடம் தண்ணீர் கேட்டார். அவனோ 'தோற்ற உனக்கு தண்ணீர் ஒரு கேடா' என்பது போல் தாமதமாக தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தான். மானம் கருதி அதை வாங்காமல், பாடல் பாடி உயிர் துறந்தார். புறநானூற்றில் (74) 'குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்' எனும் பாடல் இவர் எழுதியது. அக்காலத்தில் குழந்தை இறந்தால், வீரத்திற்கு அடையாளமாக வாளால் கீறி, அடக்கம் செய்வர் என்னும் செய்தியைக் கூறுகிறது இப் பாடல்.சேரமான் கோட்டம்பத்து துஞ்சிய மாக்கோதைபுறநானூற்றில் 245ம் பாடல் இவருடையது. தம் மனைவி இறந்தபொழுது, பிரிவுத்துயர் தாளாமல் எழுதிய பாடல் இது. 'யாங்குப் பெரிது ஆயினும்' என்னும் அப்பாடலில், அரசியோடு சேர்ந்து தாமும் உயிர்விடவில்லையே என்று வருந்துகிறார். துஞ்சிய என்பது இறந்ததைக் குறிக்கும். கோட்டம்பத்து என்னும் இடத்தில் இவ்வரசன் இறந்துள்ளார்.பாலை பாடிய பெருங்கடுங்கோபுறநானூற்றில் 282ம் பாடல், கலித்தொகை பாலைத் திணையில் 30 பாடல்கள், குறுந்தொகையில் 10, நற்றிணையில் 10, அகநானூற்றில் 12 பாடல்கள் இவர் எழுதியவை. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைதான் (அதியமானைத் தோற்கடித்தவர்), இலக்கியத்தில் பெருங்கடுங்கோ என்று அழைக்கப்படுகிறார்.சேரமான் இளங்குட்டுவன் சேரன் செங்குட்டுவனின் தம்பி. அந்தக் காலத்தில் மன்னருக்குப் பிறகு மூத்த மகன்தான் அரசனாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற மரபு இருந்தது. கணிக்கர் (ஜோதிடர்) ஒருவர் இளையவனுக்கு அரசனாகும் வாய்ப்பு அதிகம் என்று கூறிய காரணத்தால், அண்ணன் தலைமை ஏற்க வேண்டி, இவர் துறவு பூண்டார். துறவுக்குப் பிறகு, இளங்கோவடிகள் என்று பெயர் பெற்றார். சிலப்பதிகாரம் என்னும் காவியத்தையும் படைத்தார். கோப்பெருஞ்சோழன் புறநானூற்றில் மூன்று, குறுந்தொகையில் நான்கு பாடல்கள் இவர் பாடியவை. இவரது இரண்டு பிள்ளைகள் கூடா நட்பினால் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் மன்னர் மனம் வருந்தி வடக்கிருந்து உயிர் நீத்தார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்இவர் பாடிய பாடல் ஒன்று மட்டுமே (புறம் 173). உழவர்களின் சிறப்பைப் போற்றும் பாடல். 'பசிநோய் போக்கும் மருத்துவன்' என, உழவரைப் புகழ்கிறார். சோழன் நலங்கிள்ளி புறநானூற்றில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். 'மெல்ல வந்து என் நல்லடிப் பொருந்தி' என்னும் பாடலில், பணிந்து வந்து, என் நாட்டையும் உயிரையும் கேட்டால் தருவேன் என்கிறார். சோழன் நல்லுருத்திரன் இவர் எழுதியது ஒரே ஒரு (புறம்190) பாடல் மட்டுமே. கதிர்கள் விளைந்திருக்கும் காலத்தில், கதிர்களை எலி கடித்துச் சென்று தன் வளையில் பதுக்கி வைத்துக்கொள்ளும். எலியைப் போன்று சுயநலமிகளின் நட்பு அமையாதிருக்கட்டும் என்பது இவர் பாடிய பாடலின் கருத்து. பாண்டியன் அறிவுடை நம்பி இவரது இன்னொரு பெயர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். அகநானூற்றில் 188ம் பாடல் இவருடையது. 'படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்' என்னும் அப்பாடலில், கைகளை நீட்டி, உணவைக் கீழே இட்டு கைகளால் தொட்டு உடலெங்கும் படுமாறு உணவைச் சிதறி மனத்தை மயக்கும் சிறு குழந்தைகள் இல்லாதோர்க்கு, வாழும் நாட்களால், எந்தப் பயனும் இல்லை என்கிறார்.பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறநானூற்றில் 72ம் பாடல் இவருடையது. 'நகுதக் கனரே' என்று தொடங்கும் அப்பாடலில், நான் எதிரியை வெல்லா விடில், நாட்டு மக்கள் என்னை கொடிய மன்னன் என்று தூற்றட்டும் என்று வஞ்சினம் கூறியிருக்கிறார்.ஒல்லையூர் பூதப்பாண்டியன்சீறிவரும் பகைவரை புறங்காண வைப்பேன். அப்படித் தோற்கடிக்காவிடில் அழகிய கண்களை உடைய என் மனைவியை நான் பிரிந்தவனாவேன் என்று வஞ்சினம் கூறுகிறார். இவரது பாடல் புறநானூற்றில் ஒன்று (71) அகநானூற்றில் ஒன்றுமாக (25) இடம்பெற்றுள்ளது.கோப்பெரும்பெண்டுஒல்லையூர் பூதப்பாண்டியன் மனைவி இவர். புறநானூற்றில் 246ம் பாடல் இவர் எழுதியது. தம் கணவர் போரில் இறந்த பிறகு, உயிர் வாழ விரும்பாது தீயில் விழுந்து இறந்தவர். 'பல்சான்றீரே பல்சான்றீரே' என்பது இவர் எழுதிய பாடல். கல்வியில் சிறந்த பெரியோர்களே என்பது அந்த வரியின் பொருள். அதிவீரராம பாண்டியர்எழுத்தறிவித்தவன் இறைவனாகும்', 'கல்விக்கு அழகு கசடற மொழிதல்' (ஐயம் இன்றி கற்க வேண்டும். பிறருக்கும் கற்பிக்க வேண்டும்)போன்ற நீதிக்கருத்துகளைச் சொல்லும் வெற்றிவேற்கை (நறுந்தொகை) என்னும் நூலை எழுதியவர். திருநெல்வேலி பகுதியை ஆட்சி செய்த பிற்கால பாண்டிய அரசர்களுள் ஒருவர். நைடதம் இவர் எழுதிய நூல்களில் மற்றொன்று. தொண்டைமான் இளந்திரையன்இவர் புறநானூற்றில் 185ம் பாடலை எழுதி இருக்கிறார். நற்றிணையில் 96, 99, 106 என மூன்று பாடல்கள். வண்டியை ஓட்டுபவன் திறமை உடையவனாக இருந்தால், அது இடையூறு இல்லாமல் செம்மையாகச் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால், வண்டி சேற்றில் சிக்கிக்கொள்ளும். அதுபோல், மன்னன் மாண்புடையவனாக இருந்தால், நாடு நலம் பெறும் என்பது புறநானூற்றுப் பாடலின் கருத்து.போரில் புகழும், நாடும் கிடைத்தாலும், தமிழை உயிராக நேசித்தார்கள் மன்னர்கள். அதனால் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தார்கள். தாங்களும் பாடல்கள் இயற்றினார்கள். மன்னர்களின் ரத்த வாசனை வீசும் வாட்களை விட, தமிழ் மணம் பரப்பும் எழுதுகோலின் முனை அழகும் அறிவும் உடையது.