நாடக உலகை செழுமையாக்கிய பாவலர்
தமிழக நாடக வரலாற்றில் கிருஷ்ணசாமிப் பாவலர் மிகவும் முக்கியமானவர். பன்மொழியில் (தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம்) புலமைப் பெற்று, ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதையடுத்து, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று பல ஆண்டுக்காலம் நீடித்தார்.தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர், சென்னையில் கூரையில் பள்ளிகள் நடத்தப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக சிந்தாரிப்பேட்டை நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காகப் போராடினார். அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக, நாடகங்கள் எழுதி, இயக்கினார். அதில் ஆசிரியர்களை நடிக்க வைத்து, அவரும் நடித்து நிதி திரட்டினார். அவர் எழுதிய பல நாடகங்களில் 'வேதாள உலகம்,' 'பொன் விலங்கு,' 'போஜன்,' 'மனோகரா,' 'சபாபதி' போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலமானவை.சென்னையில் நாடகங்களை வளர்த்த ஆன்றோர்கள்அன்றைய காலகட்டத்தில் சென்னையில் ஏராளமான நாடகங்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் (Victoria Public Hall) நடைபெற்றன. தமிழ் நாடகத்தின் தந்தை என்ற பெருமைக்குரியவரான பம்மல் சம்பந்த முதலியார், 'சுகுண விலாச சபை' என்பதை நிறுவினார். அதில் பாவலர் முக்கிய அங்கத்தினர் ஆவார். அவரது நடிப்பைப் பலரும் கண்டு வியந்தார்கள். குறிப்பாக பம்மல் சம்பந்த முதலியார், நடிப்புத்திறனைப் பற்றி பாராட்டி பேசியுள்ளார். நாடகம், இயக்கம், பக்தி என பலவிதங்களில் ஒழுக்கநெறியோடு வாழ்ந்து வந்தார் பாவலர். நினைவாற்றலில் இவரை யாராலும் தோற்கடிக்க முடியாது. அவருடைய நினைவாற்றல் திறனை கெளரவிக்கும் வகையில் 'சதாவதானி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல் பிரசங்க சிந்தாமணி, பாவலர் என எண்ணற்ற பட்டங்களைப் பெற்றார்.அரசியலில் ஆசிரியர் நாடகங்கள் மூலம் சமூக பிரச்னைகளை வலியுறுத்தி வந்த பாவலருக்கு, அன்னி பெசன்ட் அம்மையாரின் கருத்துகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவருடைய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பள்ளி ஆசிரியராக இருந்தவர், விடுதலைப் போராட்ட வீரராக மாறினார். தமிழகத்தில் விடுதலைக்காக போராடிய ராஜாஜி, திரு.வி.க, தி இந்து நாளிதழின் ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார் என பல தலைவர்களோடு தோழமையோடு இருந்தார். அதேபோல், தேசிய தலைவர்களான காந்திஜீ, தேசபந்து தாசர், லோகமான்ய திலகர் ஆகியோரோடும் நட்புறவு பாராட்டினார். கருத்துப் புரட்சிக்கான காலம்!விடுதலைப் போராட்ட உணர்வு மக்களிடையே பரவத் தொடங்கியதற்கு நாடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அதன் வீச்சை அதிகரிக்க 'பால மனோகரா சபா' என்ற பெயரில் சபையை நிறுவினார். நவீன சாதனங்களைக் கொண்டு, நாடகக் குழுக்கள் அமைத்து பாமர மக்களிடம் நாடகங்களைக் கொண்டு சேர்த்தார். நாடகங்களுள் கருத்துப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் கிருஷ்ணசாமி பாவலர் முக்கியமானவர். சுகுணவிலாச சபை, பால மனோகரா சபை போன்றவை சமூக நலனுக்கு பயன்படும் கருத்துகளை கொண்டு நாடகங்களை மேடையேற்றின.சமூகப் பிரச்னைகளான மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, குதிரைப் பந்தய ஒழிப்பு, கலப்பு திருமணம் ஆகியவற்றின் அவசியத்தை மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் நாடகங்களை எழுதி மக்களுக்கு கருத்துகளை திணிக்காமல், உணர்த்தினார். பாவலர் பாய்ஸ் கம்பெனிதேசிய கருத்துகளை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்து, 'பாவலர் பாய்ஸ் கம்பெனி' தொடங்கினார். சிறுவர்களை நாடக உலகில் சரியான முறையில் வழிநடத்தவும், சமூக கருத்துகளை தெளிவாக புரிந்துக்கொள்ளவும் உதவினார். தொழில்ரீதியான நாடகங்களை அறவே வெறுத்த பாவலர், சீர்திருத்த நாடகங்களை தமிழகம் முழுவதும் பரப்ப, சிறுவர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று அவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்தார். பத்திரிகைத் துறையிலும் ஆளுமையோடு திகழ்ந்தார். மாத பத்திரிகை, வார இதழ், நாளிதழ் என அனைத்தையும் நடத்தி, விடுதலை கருத்துகள் மக்களுக்கு போய் சேர ஓயாமல் முயற்சியெடுத்தார். மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை செலவழித்து நீடித்த புகழைப் பெற்றார் பாவலர்.