உள்ளூர் செய்திகள்

சேதுபதியின் உதவியை மறுத்த தமிழ்த் தாத்தா

இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரை உலக சமய மாநாட்டிற்கு தன் செலவில் அனுப்பி வைத்தவர். மாநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, விவேகானந்தர் கப்பலில் இருந்து இறங்கியதும், அவர் பாதங்களை தன் சிரசில் வைக்கும்படி வேண்டியவர். இப்படித்தான் பாஸ்கர சேதுபதியை அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், அவர் வாரிவாரிக் கொடுத்த வள்ளல். யாரெல்லாம் தமிழுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வலியச் சென்று உதவியவர். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் தமிழ்த் தொண்டினை பாஸ்கர சேதுபதி அறிவார். ஊர்தோறும் பயணித்து, தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து, அதைப் பதிப்பித்து வந்த தாத்தாவின் அரிய பணியை சேதுபதி அறிவார். அந்தக் காலத்தில் நூல்களைப் பதிப்பிப்பது எவ்வளவு கடினம் என்பதையும் உணர்ந்திருந்தார். மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவர், பாஸ்கர சேதுபதியின் நண்பர். பாண்டித்துரைத் தேவரின் வீட்டில் தமிழ்த் தாத்தா தங்கி இருப்பதை அறிந்து, தன் நண்பரை அழைத்தார் பாஸ்கர சேதுபதி.''நான் சாமிநாதையருக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிக்க எண்ணி இருக்கிறேன். அந்த ஊரின் நிலத்தில் இருந்து வரும் வருவாய், அவரின் பணிகளுக்கு உதவிடும். நான் கொடுத்தால் அவர் மறுக்கக்கூடும். நீங்கள்தான் அவரிடம் சொல்லிப் புரியவைக்க வேண்டும். அவர் வாங்க மறுத்தால், அவரின் மகன் பெயரிலாவது எழுதி வைத்து விடலாம்'' என்றார் பாஸ்கர சேதுபதி. பாண்டித்துரைத் தேவரும் தமிழ்த் தாத்தாவிடம் செய்தியைத் தெரிவித்தார். தமிழ்த் தாத்தா பதிலேதும் சொல்லாமல், மன்னர் பாஸ்கர சேதுபதியை சந்திக்கச் சென்றார். தன் விருப்பத்தை ஏற்று நன்றி சொல்வதற்குத்தான் தமிழ்த் தாத்தா வந்திருக்கிறார் என்று எண்ணினார் மன்னர்.ஆனால், தாத்தாவோ, ''நான் உங்களின் உதவியை மறுக்கிறேன் என்று எண்ணக்கூடாது. நீங்கள் எத்தனையோ வழிகளில் எனக்கு உதவி புரிந்திருக்கிறீர்கள். நானும் ஏற்றிருக்கிறேன். ஆனால் தற்போது சமஸ்தானம் கடனில் மூழ்கி இருக்கிறது. அந்த நிலையிலும் எனக்கு உதவிசெய்ய முன் வந்த உங்கள் எண்ணத்திற்கு நன்றி சொல்வதற்கே நான் வந்தேன். தயவு செய்து. என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்'' என்றார்.அவரின் கூற்றைக் கேட்ட மன்னர், ''நீங்கள் இப்படிக் கூறுவது மேலும் என்னைக் கடனாளி ஆக்கியது போன்ற உணர்வையே தருகிறது'' என்றார் வருத்தத்துடன்.கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு உதாரணம் மன்னர், பாஸ்கர சேதுபதி. ஓர் ஊரே பரிசாகக் கிடைக்க இருந்தும் அதை மறுத்த தமிழ்த் தாத்தாவின் எண்ணம் அதைவிடச் சிறப்பானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !