உள்ளூர் செய்திகள்

நீந்தும் பூனை

மீன்பிடி பூனைஆங்கிலப் பெயர் : 'ஃபிஷ்ஷிங் கேட்' (Fishing Cat)உயிரியல் பெயர் : 'பிரியானய்லரஸ் விவேரினஸ்' (Prionailurus Viverrinus)வேறு பெயர் : கொடுப்புலிபூனைகளுக்கு மீன்களை உண்ணப் பிடிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், மீன்பிடி பூனைகள் நீருக்குள் இருக்கும் மீனை மூழ்கிப் பிடிக்கும் திறன் பெற்றவை. 'ஃபெலிடே' (Felidae) உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பூனை, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. ஈரநில வனப்பகுதி, நதிக்கரை, சதுப்பு நிலம், மாங்குரோவ் காடு ஆகிய பகுதிகளே இதன் வசிப்பிடம். வீட்டுப் பூனைகளைவிட அளவில் சற்று பெரியதாக இருக்கும். நீர்நிலைகளை ஒட்டிய தாவரங்கள் அடர்ந்த பகுதியில் மறைந்திருந்து நீரில் பாய்ந்து மீன்களைப் பிடித்து உண்ணும். அடர்த்தியான ரோமம் போர்த்திய உடல், குட்டையான கால்கள், சிறிய வால் என இதன் தோற்றம் இருக்கும். உடல் சாம்பல், பழுப்பு நிறத்தில், கருப்புப் புள்ளிகளுடன் காணப்படும். கன்னத்திலும், நெற்றிப் பகுதியிலும் உள்ள கறுப்பு, வெள்ளை நிறக் கோடுகள் இதன் தனித்த அடையாளம். கூர்மையான பற்களை உடையது. கால் பாதங்களில் உள்ள நகங்களின் அமைப்பு, இது நன்கு நீந்த உதவுகிறது. பகல் பொழுது மட்டுமன்றி, இரவுப்பொழுதிலும் நீரில் குதித்து மீன்களை வேட்டையாடும். ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இதன் இனப்பெருக்க காலம். சுமார் 70 நாட்களில் 1 முதல் 4 குட்டிகளைப் போடும். பிறக்கும்போது குட்டி 150 கிராம் எடையே இருக்கும். தாய்ப் பூனையிடம் பால் குடித்து வளரும் குட்டிப்பூனை, 50 நாட்களில் நீரில் இறங்கி மீனைப்பிடிக்கத் தயாராகிவிடும். மழையின்மை, நீர் வளம் குறைதல், வனங்கள் அழிக்கப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் பூனை இனம் தற்போது அழிந்து வருகிறது. இதன் காரணமாக, அருகிவரும் உயிரினமாகப் பன்னாட்டு இயற்கை சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் மாநில விலங்கு இது. இந்தியாவில் அசாம், மேற்கு வங்கத்தின், சுந்தரவனக்காடுகள், ஒரிசாவில் உள்ள சில்கா ஏரி, கேரளத்தில் உள்ள உப்பங்கழிக்காயல் ஆகிய இடங்களில் இதைக் காணலாம்.நீளம்: 3 அடிஎடை: 8 கிலோஆயுட்காலம்: 12 ஆண்டுகள்ஓடும் வேகம்: மணிக்கு 55 கி.மீ.- ப.கோபாலகிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !