உள்ளூர் செய்திகள்

பிரம்மாண்டத்தின் மறுபெயர் கந்திக்கோட்டா!

''சுற்றி பெரிய மலைகள்; இடையில் பெரிய பள்ளத்தாக்கு; அதில் ஒரு பெரிய ஆறு ரொம்ப அழகா ஓடுது. மலைக்கு மேல பெரிய கோட்டை; அங்கங்க கோவில்கள், ஒரு மசூதி. இப்படி ஓரிடத்தை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. அமெரிக்காவுல இப்படி ஓர் இடம் இருக்காம்”. சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் வெள்ளந்தியாகச் சொல்கிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது, ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் பெண்ணாற்றாங்கரையில் இருக்கும் 'கந்திக்கோட்டா'வைப் பற்றித்தான். சமீபத்தில் இவர்கள் கந்திக்கோட்டாவுக்குப் போனபோது ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார்கள். கந்திக்கோட்டாவுக்குச் சென்றுவந்த கவிஞர் மகுடேஸ்வரனின் அனுபவம் இது:“கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக கந்திக்கோட்டாவிற்குச் சென்றேன். அதன் பிறகு மூன்று முறை சென்றுவிட்டேன். அவ்வளவு அருமையான இடம். பயணம்சென்னையிலிருந்து கந்திக்கோட்டா செல்வதற்கு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா, ராஜம்பேட்டை வழியாக கடப்பா செல்லும் வழியைப் பிடிக்க வேண்டும். கடப்பாவின் புறச்சுற்று சாலை வழியாக 'புரடொத்தூர்' சென்று 'ஜெம்மலமடுகு' என்னும் பெண்ணாற்றங்கரையில் உள்ள ஊரை அடையவேண்டும். புரடொத்தூரிலோ ஜெம்மலமடுகிலோ தங்கிக்கொள்வதற்கு நல்ல விடுதிகள் இருக்கின்றன. ஜெம்மலமடுகிலிருந்து 30 கி.மீ. வெட்டவெளிச் செம்மண் நிலத்தில் மேடு பள்ளம் கடந்து சென்றால் கந்திக்கோட்டாவை அடையலாம். பார்க்க வேண்டியவை?பிரம்மாண்டமான மலைச்சுவர்களுக்கு இடையே ஆழத்தில் அமைந்திருக்கும் இடுங்கிய பள்ளத்தாக்கு; அதில் பாயும் பெண்ணாறு. மலைமேல் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோட்டை; கோட்டைக்குள் இருக்கும் சிற்றூர், கோவில்கள், மசூதி. கந்திக்கோட்டாவிற்கு அதிகாலையிலேயோ அல்லது வெய்யில் தணிந்த பிறகோ செல்லலாம். அப்போதுதான் கோட்டைப் பெரும்பரப்புக்குள் களைப்பின்றி அலையலாம். கோட்டை 5 மைல் சுற்றளவு கொண்டது. ஜெம்மலமடுகிலேயே உணவு அருந்திவிட்டுச் செல்வது நன்று. தண்ணீர்க் குடுவைகள், சிற்றுண்டிகள் ஆகியவற்றைக் கையோடு கொண்டு சென்றால் கோட்டைக்குள் நெடுநேரம் செலவிடலாம். நான் சென்றபோது தண்ணீர் எடுத்துச் செல்லத் தவறிவிட்டேன். அதனால், நண்பகல் வெய்யிலில் நீர்விடாயால் தவித்துப் போய்விட்டேன். கோட்டை முகப்புக்கு வந்து குளிர்ந்த நீர் வாங்கிக் குடித்த பின்னரே நீர்விடாய் தணிந்தது. கோட்டையின் நுழைவாயில் யாரும் எளிதில் நுழையாதபடி வளைந்து வளைந்து செல்லும்படி இருக்கும். நான்கைந்து முறை இடம்வலமாகத் திரும்பினால் கோட்டைக்குள் செல்ல முடியும். பெரும்பரப்பிலான கோட்டைதான் என்றாலும் உள்ளே நுழைந்ததும் நமக்குக் கோட்டையின் முழு அமைப்பும் தெரிய வந்துவிடும். ஏதேனும் உயர்ந்த பகுதியில் ஏறிப் பார்த்தால் கோட்டைப் பகுதிகளில் உலவும் பலரையும் பார்க்க முடியும். அதனால் கோட்டைக்குள் இருக்கும்வரை நாம் பாதுகாப்பாகவே இருப்போம். கந்திக்கோட்டாவிற்குள் 50 குடியிருப்புகளாலான சிற்றூர் இருக்கிறது. தொன்மைக் காலத்திலிருந்து கோட்டைப் பணியாளர்களாக இருந்தவர்களின் வழித்தோன்றல்கள் அங்கே வாழ்கிறார்கள். கோட்டைக்குள் கட்டடங்கள் போக மீதமுள்ள நிலப்பரப்பில் அங்குள்ள மக்கள் பயிர்த்தொழில் செய்கிறார்கள். கரடாக உள்ள பகுதிகளில் ஆடு மாடுகளை மேய்க்கிறார்கள். கோட்டையின் மேற்கிலும், வடக்கிலும் ஆழமான பள்ளத்தாக்கை ஏற்படுத்தியபடி பெண்ணாறு பாய்கிறது. முற்காலத்தில் கந்திக்கோட்டாவைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தன; காடுகளிலிருந்து பெருகிய சுனைகள் பள்ளத்தாக்குச் சுவர்களில் ஆங்காங்கே அருவியாய்க் கொட்டிக்கொண்டிருக்குமாம். அந்தக் காட்சிகள் இன்று இல்லை என்றாலும், இன்றைக்கும் பிரம்மாண்டத்துக்குக் குறைவில்லை. மலைமீதுள்ள சமதளப் பரப்பில் கோட்டையின் கிழக்கு, வடக்குப் பகுதிகள் வருகின்றன. கோட்டையின் சுற்று மதில்கள் பற்பல அடுக்குகளைக்கொண்டது. யாரும் இறங்குவதற்கு அச்சமூட்டும் பெண்ணையாற்றுப் படுகையை ஒட்டியவாறும் பெருமதில்கள் உள்ளன. ஆர்வ மிகுதியால் கோட்டைச் சுவர் விளிம்புகளை அடையவும், பெண்ணையாற்றுப் பள்ளத்திற்குள் இறங்கவும் முயலக் கூடாது. கோட்டை கட்டப்பட்ட காலத்திலேயே அதற்குரிய வழி எதுவும் விடப்படவில்லை. காண்பதோடு நம் ஆர்வத்தைக் கட்டுப்பட்டுத்திக்கொள்ள வேண்டும்.நீர் வற்றா இடம்கோட்டைப் பகுதியின் முன்னும் பின்னும் கந்திக்கோட்டா அணை, மயிலாவரம் அணை ஆகிய இரண்டு அணைகள் இருக்கின்றன; இதனால் பள்ளத்தாக்கில் பெண்ணாறு நீர் நிரம்பிய நிலையிலேயே இருக்கும். கோட்டையிலுள்ள குளமும் கிணறுகளும் தண்ணீர் வற்றாதவை.இந்தியாவின் கிராண்ட் கேன்யன் கோட்டையின் மேற்கு வடக்கு மதிலில் உள்ள காவல் கோபுரங்கள் மலைவிளிம்பின் உச்சியில் இருக்கின்றன. மலையேற்றத்தின் இடர்களை எதிர்கொண்டு இந்த இடத்தை அடையலாம். அங்கிருந்து பெண்ணாற்றுப் பள்ளத்தாக்கைக் கண்டால், அது அமெரிக்காவின் 'கிராண்ட் கேன்யன்' பெரும்பள்ளத்தாக்கை நினைவூட்டும்.ஆயிரமாண்டுக் கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான அரசர்களின் வாழ்விடத்திற்குள் நம் வாழ்நாளில் ஒருநாள் சுற்றிக் களிக்க வாய்ப்பது நம் பெரும்பேறன்றி வேறென்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !