சுறா மீனை காப்பாற்றிய பெண்
சுறா மீனிடமிருந்து காப்பாற்றிய என்பதைத் தவறாகப் படித்துவிட்டோமோ என்று எண்ண வேண்டாம். நிஜமாகவே ஒரு சுறாமீனைக் காப்பாற்றி, கடலில் சேர்த்துள்ளார் ஒரு பெண். கடலில் இருந்து பெரிய அலைகளின் காரணமாக அருகிலிருந்த நீச்சல் குளத்திற்குள் வந்து விழுந்து மாட்டிக்கொண்ட சுறா மீன் ஒன்றை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துப் பெண்மணி ஒருவர், வெறும் கைகளால் தூக்கி மீண்டும் கடலில் சேர்த்தார். கடந்த அக்டோபர் 9ம் தேதி சிட்னி நகரின் க்ரொனுலா (Cronulla) பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்குள் போர்ட் ஜாக்சன் (Port Jackson) எனும் வகையைச் சேர்ந்த சுறா மீன் மாட்டிக்கொண்டது. நீச்சல் குளத்தில் இருந்தவர்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியேறிவிட அப்போது, அங்கே குளிக்க வந்த மெலிசா ஹத்ஹையர் (Melissa Hatheier) என்ற பெண்மணி, நீச்சல் குளத்தினுள் குதித்து, அந்த மீனை ஒரு குழந்தையைப் போல வெற்றுக் கைகளால் தூக்கிச் சென்று கடலுக்குள் விட்டார். கடலினுள் விட்டபின் அது மிகவும் வேகமாக நீந்திச் சென்றதாகவும் மெலிசா தெரிவிக்கிறார். அவரது சாகசத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட, அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.