தும்பிக்கை மான்
சாய்காஆங்கிலப் பெயர்: 'சாய்கா அன்டிலோப்' (Saiga Antelope)உயிரியல் பெயர்: 'சாய்கா டாடாரிகா' (Saiga Tatarica)உயரம்: 2 முதல் 3 அடி வரைநீளம்: 3 முதல் 5 அடி வரைஎடை: 35 முதல் 65 கிலோ வரைகொம்பின் நீளம்: 1.5 அடிஆயுட்காலம்: 6 முதல் 10 ஆண்டுகள்புள்ளி மான், கொம்பு மான், கொம்பு இல்லாத மான் என, பல வகை மான்களை நமக்குத் தெரியும். ஆனால் யானையின் மூக்கு போன்ற வித்தியாசமான தோற்றம்கொண்ட மான் ஒன்று உண்டு. அதுதான் 'சாய்கா அன்டிலோப்'. இது 'போவிடே' (Bovidae) உயிரின குடும்பத்தைச் சேர்ந்தது. மங்கோலியா, வட அமெரிக்கப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த மான்கள், தற்போது ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மங்கோலியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. நீண்ட கொம்புகளையும், மாடுகளைப் போன்ற காதுகளையும், நீண்டு வளைந்த மூக்கையும் உடையவை. உடல் செம்பழுப்பு நிறத்திலும், கழுத்து, வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும். கூர்மையான வலுவான கொம்புகளை உடையவை. ஆண் மான்களுக்கு மட்டும் கொம்பு இருக்கும். கொம்புப் பகுதி வளையம் வளையமாகச் சேர்ந்து காணப்படும். வெயில் காலத்தில் மண்ணுக்குள் தனது மூக்கை அடிக்கடி புதைத்து வைத்து, சூட்டைத் தணித்துக் கொள்ளும். இதன் வளைந்த மூக்கு தூசியைத் தடுக்க உதவும். இலை, தழை, புற்கள் போன்றவையே இவற்றின் உணவு. பெண்ணை விட, ஆண்மான்கள் பெரியதாக இருக்கும். பொதுவாக ஒரே இடத்தில் வாழ்ந்தாலும், கோடைக்காலங்களில் இடம் பெயரும். புலம் பெயரும்போது, ஆற்றை நீந்திக் கடந்தும் செல்லும். குழுவாக வாழும் இயல்புடையவை, இந்த மானின் கொம்புகள் சீனர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுகின்றன. கொம்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. வேட்டையாடப்படுவதால் இவை வேகமாக அழிந்து வருகின்றன. இதன் காரணமாக கஜகஸ்தானில் சாய்கா மான்களை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின், அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இந்த மான்கள் இடம்பெற்றுள்ளன.- கி.சாந்தா