உண்மை, நேர்மை, எளிமை - கக்கன்
கக்கன் | 18.6.1908 - 23.12.1981 | தும்பைப்பட்டி, மேலூர், மதுரை.எத்தனை தலைவர்கள் வந்தாலும் போனாலும், ஒரு சிலரை மட்டுமே இந்த வரலாறு நினைவில் வைத்திருக்கும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைவர்களில் கக்கனும் ஒருவர். காலம் பல கடந்தும், இவர் மீது அளவில்லாத மதிப்பும், மரியாதையும் இருக்கக் காரணம் அவரது எளிமையான பண்பு நலன்கள்தான். சாதாரண மனிதராக இருந்ததுடன், சாதனை மனிதராகவும் இருந்தார்.பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வி படித்து, 12வது வயதில் படிப்பைத் தொடர முடியாமல் ஒரு பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு, மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று, பல கொடுமைகளையும் அனுபவித்தார். 1946ல் அரசியலமைப்புச் சபை தொடங்கப்பட்டபோது, அதன் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். ராஜாஜி பதவி விலகிய பின், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு கக்கனைத் தேடி வந்தது. 1957ல், சட்டமன்ற உறுப்பினராகி, காமராஜரின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவருடைய பதவிக் காலத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துகளின் முன்னேற்றத்துக்காக, 'அரிசன சேவா சங்கம்' உருவாக்கப்பட்டது. இரண்டு விவசாயப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ், ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டுவசதி வாரியம் அமைத்தும் உதவினார்.அமைச்சரான பிறகும், தன் மகளை மாநகராட்சிப் பள்ளியில்தான் படிக்க வைத்தார். அரசாங்கத்தின் பல பொறுப்புகளில் இருந்தபோதும், தனக்கென வாழாமல் நேர்மையாக இருந்தார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தபோது, அங்கு பணம் செலுத்த முடியாமல், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.தன் வாழ்நாள் இறுதி வரை குடிசையிலும், வாழும்போது வறுமையிலும் வாடி, மக்கள் நலனுக்காகப் பல நல்ல காரியங்கள் செய்த கக்கன் அரிதினும் அரிதான தலைவர்!