வேறு என்ன வேண்டும்? இது போதுமே...
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளிக்கொடுப்பதில் மிக முக்கியமானது, பழங்கள். பழங்கள் என்றதும் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? பழங்களில், ஸ்ட்ராபெர்ரி பலருக்கும் பிடித்த ஒன்று. பழமாகச் சாப்பிடவில்லை என்றாலும் கேக், ஷேக், ஐஸ்கிரீம் என, பலவிதமாக இதைச் சுவைத்து இருப்போம். இதன் தாயகம், வட அமெரிக்கா. பெர்ரி என்று முடிந்திருப்பதால், பலரும் இதை பெர்ரி வகையைச் சேர்ந்தது என நினைப்பார்கள். இது பழவகையைச் சேர்ந்ததுதான். இந்தப் பழம் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதேபோல், ஒவ்வொரு பகுதியின் பருவநிலைக்கு ஏற்றவாறு இதன் நிறம் மாறும். குறிப்பாக குளிர் பிரதேசங்களின் மண்ணைப் பொறுத்து இதன் நிறம் அமையும். இது விலையுயர்ந்த பழமாகும். இந்தப் பழத்தில் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். சாறும் அதிகம். இதைச் சரியாக மென்று சாப்பிட்டால்தான் பழத்தின் சுவையை முழுவதுமாக உணர முடியும். இந்தப் பழத்தின் சிறப்பு என்னவென்றால், தோலுரித்தல், கத்தியால் வெட்டுதல் என, எந்தவித வேலையும் இல்லை. நன்றாகக் கழுவி, திராட்சைப் பழத்தைச் சாப்பிடுவதுபோல் நேரடியாகச் சாப்பிடலாம். இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவிலுள்ள மலைப்பிரதேசங்களில் ஸ்ட்ராபெர்ரியை விளைவிக்கின்றனர். இந்தப் பழத்திற்கான தேவை அதிகரித்திருப்பதால், பல இடங்களில் ஸ்ட்ராபெர்ரி விளைச்சலைக் காணலாம். சரி, இந்தப் பழத்தில் இருந்து நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்ன தெரியுமா? மில்க் ஷேக். பாலுடன் இந்த இனிப்பான ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்துச் சாப்பிட்டால், வேறு என்ன வேண்டும் என்று சொல்லத்தோன்றும். - கொக்கோ