நான் யார்?
சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப் போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னால் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தேன். பத்து வயதில் அம்மாவையும் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தேன். சிறு வயதில் இருந்தே அநீதிகளைக் கண்டால் எனக்கு கோபம் வந்துவிடும். அதனால்தான் நேர்மையையும் உண்மையையும் இறுதிவரை கடைப்பிடித்தேன்.பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் பூனா, டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877ல் பி.ஏ. கணிதம் பட்டம் பெற்று, பின்னர் சட்டம் பயின்றேன். ஆனாலும் கணித ஆசிரியராக முடிவுசெய்து, பூனாவில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்தேன். அப்போதைய மேற்கத்தியக் கல்வி முறை, இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாழ்படுத்துவதாக இருந்தது. அதைப் பார்த்தே தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்டு மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினேன். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினேன். உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மாவை என் எழுத்துகள் தட்டி எழுப்பின. என் முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் பரவியது. இதனால், ஆங்கிலேய அரசு 1897ல் சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குக் கேடு விளைவிப்பதாகவும் கூறி என்னைச் சிறையில் அடைத்தது. சிறை சென்ற எனக்கு 'லோகமான்ய' (மக்களால் விரும்பப்படும் தலைவர்) என்னும் அடைமொழி கிடைத்தது. அதன் பின்னர் 1905ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்தேன்.தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் என்னை 1906ல் பர்மாவில் உள்ள 'மண்டலே' சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. அங்குதான் 'கீதா ரகஸ்யா' என்னும் நூலை எழுதினேன். 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என முழங்கியதும் நான்தான்! பால கங்காதர திலகர் பிறப்பு: ஜூலை 23, 1856மறைவு: ஆகஸ்ட் 1, 1920