உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / கருப்பாயூரணியில் ஒரு கவிதாயினி

கருப்பாயூரணியில் ஒரு கவிதாயினி

தாயைப் போல பிள்ளை; நுாலைப் போல சேலை. உடல், உள்ளம், குணம், மணம் எல்லாம் தாயைப் போலத்தான் மகளுக்கும் என எளிதாக புரிய வைக்க, தமிழ் நமக்கு சொலவடையாகச் சொல்லித் தந்துள்ளது. அது எத்தனை உண்மை என்பது மதுரை கருப்பாயூரணியில் ஒரு கவிதாயினியை படித்தால் புரியும்.பி.ஏ., படித்த இல்லத்தரசி திவ்யா. கணவர் முத்துப்பாண்டி சலுான் கடை வைத்துள்ளார். மேலுார் அருகே சிட்டம்பட்டியில் பிறந்து, அரசு பள்ளி, அரசு கல்லுாரியில் படித்துள்ளார். வேறெந்த பெரிய பின்னணியும் இவருக்கு கிடையாது. ஆனால் ஆர்வகோளாறால் இவர் செய்யும் காரியங்கள் ஆய்வு மாணவருக்குக் கூட இருக்காது. இவரது தமிழார்வத்தால் பாவலர் குழு என்ற அமைப்பு உருவாக்கி, புதுக்கவிஞர்களை உருவாக்குகிறார். பலநுாறு கல்லுாரி மாணவர்கள் இதில் இணைய வழியில் இணைந்துள்ளனர். கவிதை போட்டி நடத்தி, அவரவர் திறமையை வெளிக்கொணர தளம் அமைத்துக் கொடுக்கிறார்.அடுத்து 'சாதனை சுடர்கள்' குழு, குழந்தைகளுக்கானது. இதில் குழந்தைகள் முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்கள் அவரவர் வீட்டில் இருந்தவாறு மரம், செடி நடுவதை வீடியோ படமாக அனுப்பலாம். தனித்திறமையை வெளிப்படுத்தியும் வீடியோ படம் அனுப்பலாம்.இத்துடன் பொதுநல சேவை, பட்டிமன்றம், கருத்தரங்கு, கவிதைப் போட்டி என துறுதுறுவென எல்லாவற்றிலும் பங்கெடுக்கிறார். இதற்கு அடித்தளமிட்டது இவரது பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வன் என நன்றி பாராட்டுகிறார்.மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் விருது, கலைஞர் 100 என்ற நுாற்றாண்டு விழாவில் முத்தமிழறிஞர் விருது பெற்றுள்ளார். இதுவரை 250 போட்டிகளில் பங்கேற்பு சான்று, 50 விருதுகள், 50 வெற்றிச் சான்றுகள் பெற்றுள்ளார்.விடியலின் விதைகள் என்ற 50 உலக சாதனையாளர் தொகுப்பில் சாட்டை எடு பெண்ணே என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். பல நுால் தொகுப்புகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி ரிசர்ச் ஓரேசன் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்புக்கு போஸ்ட் கார்டில் குறள், விளக்கம் எழுதி பலரை அனுப்ப வைத்தது, ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 388 பேர் புறநானுாற்றின் 400 பாடல்களை கருத்தரங்கில் தொடர்ந்து 202 மணிநேரம் இணையத்தில் பேசியது உட்பட உலக சாதனைகள் பலவற்றில் பங்கெடுத்துள்ளார். மகளிர் தினமான மார்ச் 8ல் இரவு 8:00 மணிக்கு துவங்கி விடிய விடிய 8 பெண் ஆளுமைகள் குறித்து 8 பெண்களுள் ஒருவராக இவரும் பேசியுள்ளார்.தன்னைப் போலவே, மகள்கள் நாகதனுஷ் 13, நாகசூரியா 10, மதுஸ்ரீ 8 ஆகியோரையும் வளர்த்து வருகிறார். மூத்த மகள் பேச்சுப் போட்டியில் சிறப்பு காட்டுகிறார். 2ம் மகள் ஓவியம் வரைவதில் கெட்டி. பேச்சுப் போட்டி, சிவகங்கையில் நடந்த போட்டியில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றார். சென்னையில் நடந்த பாரதி பேச்சுப் போட்டியில் இளங்கோ விருது பெற்றார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.3வது மகள் மதுஸ்ரீயும் சளைத்தவரில்லை. மாறுவேட போட்டியா, திருக்குறளில் 100 குறள்களை ஒப்பிப்பதில் வல்லவர். பராசக்தி வசனத்தை இப்போதே உச்சரித்து குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ஏழுவயதிலேயே புறநானுாறு கருத்தரங்கில் பேசியுள்ளார்.இல்லத்தரசியாக இப்படியும் சாதிக்கலாம் என்று உணர்த்திய இவரை பாராட்ட: 95142 68032.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை