| ADDED : ஏப் 28, 2024 11:02 AM
சாதனைகளுக்கு எல்லை இல்லை என்ற வரிகளை பல இடங்களில் படித்திருப்போம். ஆனால் நம்மை வியக்க வைக்கும் சாதனையை நாம் கண்முன் பார்த்து சிலிர்த்து பரவசப்படுவது எப்போதாவது தான் நடக்கும். அந்த 'எப்போதாவது' என்பதை ஆயிரக்கணக்கான முறைகளுக்கும் மேல் நடத்திக்கொண்டு வியப்பின் விஸ்வரூபமாக வலம் வருகின்றனர், சென்னையை சேர்ந்த 'குவிஸ் மாஸ்டர்கள்' அரவிந்த், ஷ்வரன்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்களில் ஒருவர் சி.எஸ்., (கம்பெனி செகரட்டரிஷிப்), மற்றொருவர் சி.ஏ., (சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்) படித்த ஆடிட்டர்கள் என்பது தான். ஆடிட்டர் என்பதை தாண்டி 'குவிஸ்' மீதான அவர்களின் ஆர்வம் அலாதியானது. 'எக்ஸ் குவிஸ் இட்' என்ற நிறுவனத்தை துவக்கி தலைப்புகளுக்கு ஏற்ப லட்சக்கணக்கான கேள்விகளை உருவாக்கி நிகழ்ச்சிகள் நடத்தி வரும் அவர்கள் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்...பள்ளிக்கால நண்பர்கள் நாங்கள். வேறு பள்ளிகள் என்றாலும் நட்பு எங்களை இணைத்தே அழைத்து சென்றது. ஆரம்பத்தில் விளையாட்டாக கேள்வி கேட்டு நண்பர்களிடமிருந்து பதில் கேட்டு விளையாடுவோம். பின் நிகழ்ச்சிகளில் இடையே குவிஸ் நடத்தினோம். தனியாக 'கிளப்' துவக்கி குவிஸ் நிகழ்ச்சியை எப்படி மேம்படுத்தலாம் என திட்டமிட்டு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கும் குவிஸ் நடத்தும் அளவிற்கு வந்துள்ளோம்.'எக்ஸ் குவிஸ் இட்' செயல்பாடு 2015க்கு பின் நாடுகளை கடந்து சென்றது. சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். அமெரிக்காவில் தமிழ் மாணவர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. பள்ளி கல்லுாரிகளில் மாணவர்களுக்காகவும், என்.ஜி.ஓ.,க்களுக்கு கேன்சர், சுற்றுச்சூழல், பசுமை பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட விழிப்புணர்வுக்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களில் திறன் மேம்பாட்டிற்காகவும் என பல தலைப்புகளில் வினாக்கள் தயாரிக்கிறோம். போட்டிகளை சுவாரசிய தலைப்புகளிட்டு, அறிவுசார் விஷயங்களை சுவையாக கொண்டுசெல்வதே எங்களின் தனித்திறன்.இதுதவிர 'நீங்களும் வெல்லலாம் ரூ. ஒரு கோடி', 'தி வால்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் வினாக்கள் தயாரித்து கொடுத்துள்ளோம். ஐ.பி.எல்., நிகழ்ச்சிக்கும் எங்கள் வினாக்கள் கொடுத்துள்ளோம். வினாக்கள் தயாரிக்க 10 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர் குழு உள்ளது. எந்த தலைப்பு கொடுத்தாலும் 2 நாட்களில் வினாக்கள் தயாராகி விடும். தெரியாத தலைப்புகளுக்காக வல்லுநர்கள் உதவியை நாடுவோம். 'கோவிட்' தொற்று நேரத்தில் ஆன்லைனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டிகளை நடத்தியுள்ளோம்.தற்போது மாணவர்களுக்கு கவனிப்பு திறன் குறைந்துள்ளது. இதுபோன்ற குவிஸ் போட்டிகள் அக்குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது. பள்ளிகளில் திறன்மேம்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அதிக அழைப்புகள் வருகின்றன.நாங்கள் மதிக்கும் தினமலர் பட்டம் வினாடிவினா விருதுக்கான நிகழ்வை தொடர்ந்து நடத்துகிறோம். துார்தர்ஷன் தமிழில் 75வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு 13 வார வினாடி வினா நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். இதன் மூலம் பலதரப்பு வாடிக்கையாளர்களை எங்கள் நிறுவனம் பெற்றது. அறிவிற்கான தேடல், ஆர்வம், நட்புறவை வளர்ப்பது என எங்கள் பயணங்கள் எப்போதும் முடிவதில்லை என்கின்றனர், இந்த ஆடிட்டர்கள்.இவர்களை 98412 70711 ல் அழைக்கலாம்.