தாய்மை உள்ளம்
கறாரான தலைமை ஆசிரியையான அமலியை யாருக்கும் பிடிக்காது. ஒருநாள் மதிய உணவின் போது அவளைப் பற்றிய பேச்சு, நிர்மலா டீச்சர் தலைமையில் நடந்தது. 'நம்மை விட இளையவள். திருமணமும் ஆகவில்லை. ஆனால் எப்படியோ இளம்வயதிலேயே இப்பதவிக்கு வந்து விட்டோம் என மமதையோடு திரிகிறாள் என அவர்கள் பேசிக் கொண்டனர். மறுநாள் பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அதைக் கண்காணித்து கொண்டே வந்தாள் அமலி.ஓர் அறையில் கர்ப்பிணியான நிர்மலா சிரமத்துடன் நின்றிருப்பதை பார்த்தும் பார்க்காதது போல் சென்றாள். ஓய்வு அறையில் இருந்த ஆசிரியைகளிடம் சென்று, ''நீங்கள் எல்லாம் குழந்தை பெற்றவர்கள் தானே. நிர்மலா டீச்சரின் கஷ்டம் புரியவில்லையா. அவளுக்கு ஓய்வு தேவை. லீவு எடுத்துக் கொள்ளட்டும். நான் சொன்னதாக காட்டிக்கொள்ள வேண்டாம்'' என சொல்லி விட்டு நகர்ந்தாள் அமலி. ஆசிரியைகள் மனதில் உயர்ந்து நின்றாள் திருமணமாகாத அமலி.