உள்ளூர் செய்திகள்

வேண்டும் சமயோஜிதம்

காட்டு வழியே சென்ற இளைஞனுக்கு பசியெடுத்தது. ஒரு மரத்தில் பழங்கள் தொங்குவதைக் கண்டான். பழத்தினை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வமுடன் மரத்தின் மீதேறி கிளையின் நுனிக்கே சென்றான். பாரம் தாங்காமல் கிளை முறிந்து தொங்கு கொப்பாக நின்றது. அங்கிருந்து கீழே பார்த்த அவனுக்கு தரை துாரமாக இருந்தது. 'காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்' என அலறினான். அந்த பக்கம் வந்த முதியவர் ஒருவர் அவனது நிலை அறிந்து அவன் மீது சிறு கல்லை எறிந்தார். அவனோ கிளையின் நுனியில் இருந்து அடிமரத்தை பிடித்து நகர்ந்தான். மீண்டும் அவர் கல்லெறிய மேலும் நகர்ந்தான். அப்போது கோபப்பட்ட அவன், 'மரத்தில் இருந்து இறங்கி வந்தால் உம்மை சும்மா விட மாட்டேன்' எனக் கத்தினான். அந்த நேரத்திலும் முதியவர் சிறு கல்லை அவன் மீது வீசினார். அவன் வேகமாக முன்னேறி தரையில் இறங்கினான். 'முதலில் உன்னை பார்க்கும் போது மூளை உறைந்து பயத்தில் என்ன செய்வதென தெரியாமல் இருந்தாய். கல்லெறியும் போது எப்படி தப்பிப்பது என சமயோஜிதமாக யோசித்தாய். பயத்தில் இருந்து விடுவிக்கவே அப்படி செய்தேன்' என சொல்லிவிட்டு நகர்ந்தார் முதியவர்.