உள்ளூர் செய்திகள்

மதிப்பு வாய்ந்தது எது

'இந்த உலகில் மதிப்பு வாய்ந்தது எது' என்ற கேள்விக்கு தக்க பதில் அளிப்பவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என அறிவித்தார் செல்வந்தர் ஒருவர். அதற்காக அவர் வீட்டிற்கு பலரும் படையெடுத்தனர். 'உயிர், அறிவு, அன்பு, பொறுமை, சூரியன்' என பலவிதமான பதில்களைச் சொல்லி விளக்கம் அளித்தனர். எந்த பதிலிலும் அவருக்கு திருப்தி இல்லை.இதையெல்லாம் கவனித்த வீட்டு பணியாளர் ஒருவர், ''ஐயா... என் அறிவுக்கு எட்டிய பதிலைச் சொல்லட்டுமா...'' எனக் கேட்டான். அவரும் சம்மதித்தார். 'காலம்தான் மதிப்பு மிக்கது. ஏற்கனவே சொல்லிய பதில்கள் அனைத்தும் இதில் அடங்கி விடும்'' என்றான் அவன். அறிவித்தபடி லட்ச ரூபாயை தர முன்வந்த போது, ஐவருக்கும் பிரித்து கொடுங்கள் என்றார் பணியாளர். காரணம் கேட்ட போது, 'அவர்களின் பதில்களைக் கேட்டே இந்த முடிவுக்கு வந்தேன்' என்றார். அதைக் கேட்ட செல்வந்தர், 'இவனைப் போல் மதிப்பு மிக்க பணியாளர் கிடைப்பது அரிது'' என மகிழ்ந்தார்.