உள்ளூர் செய்திகள்

வேலையில் முதன்மையாளராக...

சூரியன் சிவபூஜை செய்த தலங்களில் முதன்மையானது காசி. சூரியனுடைய 108 பெயர்களில் ஆதித்தியர் என்றொரு பெயரும் உண்டு. இவர்கள் காசி மாநகரில் 12 இடங்களில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார்கள் என்கிறது காசிகாண்டம். அவர்களுடைய பெயர் வருமாறு 1. லோலார்க்கர், 2. உத்ரார்க்கர், 3. ஸம்பாதித்யன், 4. திரவுபதி ஆதித்யன், 5. மயூகாதித்யன், 6. கஷோல்காதித்யர், 7. அருணாதித்யர், 8. விருத்தாதித்யர், 9. கேசவாதித்யர், 10. விமலாதித்யர், 11. கங்காதித்யர், 12. யம ஆதித்யர் என்போர். ஒருமுறை இவர்களுக்கிடையே, தங்களில் யார் உலகில் பணி செய்வது என்று போட்டி போட்டுக் கொண்டனர். அவர்களில் நிலையறிந்த பிரம்மா, சித்திரை மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவராக பணி செய்யும்படி கட்டளையிட்டார். அப்படி, அவர்கள் பணிசெய்யும் காலத்தில் அசுரர்களால் தடையும் இடையூறும் ஏற்பட்டன.மீண்டும் பிரம்மாவை சரண் அடைந்தனர் ஆதித்யர்கள். அவரின் அறிவுரைப்படி, பூலோகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் தலத்தை அடைந்து அங்கு அருள் செய்யும் சிவபெருமானை வழிபட்டு, தடை நீங்கப் பெற்றனர். இதனால் இத்தலத்திற்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி என்ற சிறப்பு பெயரும் உண்டானது. சூரிய பகவானுக்கு உகந்த ஆவணி, தை மாதங்கள், சப்தமி திதி, ஞாயிறு, கார்த்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திர நாட்களில் கழுகுன்றநாதரை வழிபடுபவர்களுக்கு துன்பத்தை துடைத்தெறிவான் என்பது சைவ ஆசிரியர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் வாக்கு. 12 ஆதித்யரும் வழிபட்ட கழுக்குன்றநாதரை வழிபடுவோம். பணியில் முதன்மையாளாராக திகழ்வோம்.