சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* பகலும் இரவும் சேரும் நேரம் (சூரிய அஸ்தமனம்), இரவும் பகலும் சேரும் நேரம் (சூரிய உதயம்) ஸந்தியா காலம் எனப்படும். ஸந்த்யா என்றால் சேர்க்கை எனப்பொருள். இந்நேரம் மஹாலட்சுமிக்கு உரியது என்பதால், இதில் விஷ்ணு, லலிதா ஸஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களை சொல்லலாம். * அந்தணர்கள் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினமும் சிறிதளவாவது சொல்வதற்கு பிரம்ம யக்ஞம் என்று பெயர். * வீட்டு வாசல் (நிலை)படி, பிரதானமான வாசல் கதவு, கூரை இல்லாமலும், வாஸ்து முதலான தேவதைகளுக்கு பலியிடாமலும், உறவினர்களை அழைத்து விருந்து அளிக்காமலும் கிரஹ பிரவேசம் செய்யக்கூடாது. * விரதம் இருக்க முடியாதவர்கள், தர்மம் செய்ய இயலாதவர்கள் காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு செல்லலாம். * மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டது காயத்ரி மந்திரம். 'மந்திரங்களில் நான் காயத்ரி' என கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். இதை ஜபித்தால் நல்ல அறிவு உண்டாகும். * உபநயனம் ஆகாத (பூணுால் போடாத) பிரம்மச்சாரி பையனுக்கும், திருமணம் ஆகாத பெண் குழந்தைகளுக்கும் ஒருபோதும் எந்தத் தீட்டும் கிடையாது. * வெவ்வேறு நட்சத்திரங்களை கொண்டவர்கள் திருமணம் செய்வது சிறப்பு. இருந்தாலும் ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், பூசம், திருவோணம், ரேவதி, உத்திரட்டாதி ஆகிய எட்டு நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் என இருவரும் திருமணம் செய்யலாம். * புண்ணிய நதிகளில் நீராடிய பிறகு வீட்டிற்கு வந்து குளிக்கக் கூடாது. அப்படி செய்தால் புண்ணியபலன் முழுமையாக கிடைக்காது.