மனதை மாற்றிய லட்டு
காஞ்சிப்பெரியவர் முகாமிட்டிருந்த மண்டபத்தின் துாண் ஒன்றில் சாய்ந்தபடி ஒரு ஆள் அமர்ந்திருந்தான். முரட்டு மீசையுடன் இருந்த அவனை பார்த்தால் அடாவடி பேர்வழி போல தெரிந்தான். சாப்பாட்டு நேரத்தில் வெளியே போய் சாப்பிட்டு வருவான். மற்றபடி யாரிடமும் பேச மாட்டான். காஞ்சிப்பெரியவரை பார்த்தபடியே இருப்பான். இரவானவுடன் கிளம்பிச் செல்வான், மறுநாள் மறுபடியும் வருவான். இதுவே தொடர்கதையானது. வம்பு செய்யத் திட்டமிடுகிறானோ என பக்தர்கள் கலங்கினர். ஆனால் யாரும் கேட்கத் துணியவில்லை. ஒருநாள் காஞ்சிப்பெரியவர் அவனை அழைக்கவே, பவ்யமாக கைகட்டி நின்றான். ''இதோ பார். அடாவடித்தனமான செயல்களில் நீ ஈடுபட்டிருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலரும் பயப்படுகிறார்கள். அதை திருத்திக் கொள்ளவும் உன்னால் முடியவில்லை. இது தானே பிரச்னை?'அவனது கண்களில் கண்ணீர். மேலும் தொடர்ந்தார் காஞ்சிப்பெரியவர். ''என்னை தரிசிக்கத் தானே வந்திருக்கிறாய். ஆனால் அதற்கான தகுதியில்லை எனத் தவறாக கருதுகிறாய். அதனால் ஓரமாக அமர்ந்து கொண்டாய். நீயும் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே ஊர் ஊராக நான் சுற்றுகிறேன். பழசையெல்லாம் மறந்து விடு. செய்த தப்புக்களால் 'உன்னை நீயே பாவி' என எண்ணி வருந்தாதே. 'ராம... ராம' என்ற நாமத்தை பக்தியுடன் சொல். பாவம் பறந்தோடும். இனி தப்பு செய்வதில்லை என்ற உறுதியுடன் செயல்படு. அப்போது அதிசயம் உனக்குள் நிகழ்வதைக் காண்பாய். ஒதுக்கியவர் கூட நெருங்கி வந்து அன்பு காட்டுவர். அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய். இந்தா... லட்டு பிரசாதம் வாங்கிக் கொள். இந்த லட்டு போல உன் வாழ்வும் இனிக்கும். காஞ்சி காமாட்சியருளால் வரும் நாளெல்லாம் நல்ல நாளாக அமையும்'' என்றார். நம்பிக்கையுடன் புறப்பட்டான் அவன்.தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்