நம்மவர்
முன்பு திருக்கோவிலுாரை தலைமையாகக் கொண்டு சேதி நாடு என்ற சிற்றரசு இருந்தது. இந்நாட்டை ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார். சிவபெருமானே உண்மையான மெய்ப்பொருள் எனக் கருதி வாழ்ந்த இவர் திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்த அனைவரையும் உறவினராக போற்றினார். இப்படிப்பட்டவருக்கு சோதனைக் காலம் வந்தது. இவருடன் பலமுறை போரிட்டு தோற்ற மன்னன் முத்தநாதன். இவன் மெய்ப்பொருள் நாயனாரை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவனடியார் போல வேடமிட்டு வந்தான். கையில் ஓலைச்சுவடியும், அதில் வாள் ஒன்றையும் மறைத்து வைத்திருந்தான். முத்தநாதர் வரும் போது மெய்ப்பொருள்நாயனார் துாங்கிக் கொண்டிருந்தார். அதனால் மெய்க்காப்பாளனான தத்தன் தடுத்தான். ஆனாலும் தடையை மீறி, 'சிவாயநம' என சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான். கண்விழித்ததும் சிவனடியாராக நின்ற முத்தநாதனை வணங்கினார் மன்னர். ''சிவபெருமான் அருளிய ஆகமம் (நுால்) என்னிடம் உள்ளது. அதன் விளக்கம் கேட்டால் உமக்கு மோட்சம் கிடைக்கும். இதைக் கேட்க நீங்கள் மட்டும் தனித்திருக்க வேண்டும்'' என்றார் அடியார். இதைக் கேட்ட மன்னர் ஆர்வமுடன், ' சுவாமி... அடியேனுக்கு அருள்புரிய வேண்டும்' என வணங்கினார். எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கிடைத்தது என சுவடிக்குள் மறைத்திருந்த வாளை எடுத்து மன்னரை குத்தினான் முத்தநாதன். இந்த இடத்தில் மற்றொரு சிவனடியாரை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவரே பெரியபுராணத்தின் ஆசிரியர் சேக்கிழார். சிவனடியார்களின் வரலாற்றை கூறும் நுால் இது. இதில் மெய்ப்பொருள் நாயனார் வாளால் குத்தப்பட்டார் என சொல்ல அவர் விரும்பவில்லை. அதற்கு பதிலாக அவர் என்ன சொல்லியுள்ளார் தெரியுமா... 'முத்தநாதன் நினைத்த அப்பரிசே செய்ய' என்கிறார். அதாவது முத்தநாதன் தான் நினைத்த பரிசை கொடுத்தான் என்கிறார். மெய்ப்பொருள் நாயனார் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையிலும், 'மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்' எனக் கூறி எதிரியான முத்தநாதனை வணங்கினார். சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன் தத்தன், அவனைக் கொல்ல வாளை உருவிய போது மன்னர் தடுத்து, ''தத்தா! இவர் நம்மவர்(நம்மைச் சேர்ந்தவர்). இந்த அடியாருக்கு துன்பம் நேராதபடி நாட்டின் எல்லை வரைக் கொண்டு போய் விடு'' எனக் கட்டளையிட்டார். இச்செய்தி நாடெங்கும் பரவியது. உடனடியாக மன்னரின் ஆணையை நிறைவேற்றி அரண்மனைக்கு திரும்பினான் தத்தன். அவன் வரும் வரை உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருந்த மன்னர், “எனக்கு நீ பேருதவி செய்துள்ளாய்'' என நன்றி தெரிவித்தபோது அரண்மனையில் பேரொளி பரவியது. ரிஷப வாகனத்தில் பார்வதியுடன் எழுந்தருளினார் சிவபெருமான். மீண்டும் மன்னரை உயிர் பெறச் செய்தருளினார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனாரின் திருவடியை போற்றுவோம்.