உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் ஆத்திசூடி - 3

உடலினை உறுதி செய் 'சுவரை வைத்துதான் சித்திரம்' என்பது பழமொழி. பாரதியாரும் அதையே 'உடலினை உறுதி செய்' என ஆத்திசூடியில் பாடுகிறார். உடலினைக் காப்பது எவ்வளவு முக்கியம் என்பதை திருமந்திரத்தில் திருமூலர், உடம்பார் அழியின் உயிரார் அழிவர்திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனேஉடம்பார்: உடல் (physical body)அழியின்: அழிய (decay or destruction)உயிரார் : உயிர் (soul or life)அழிவர் : அழிவர் (die or perish)எனவே உடம்பை வளர்த்தால் உயிரையும் வளர்க்கலாம். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் உயிரும் நீண்ட காலம் நிலைக்கும் என்கிறார் திருமூலர். விடுதலைப் போராட்ட வீரரும் இலக்கியவாதியுமான வ.வே.சு.ஐயர், 'உடல் பலம் பெற்றிருந்தால் தான் உள்ளம் உறுதியாக இருக்கும்' என்கிறார். தினமும் உடற்பயிற்சி செய்ததோடு தன்னுடன் பழகும் அனைவரையும் உடற்பயிற்சி செய்யவும் அறிவுறுத்துவார். ஒருமுறை இளைஞனான சாமிநாத சர்மாவிடம், '25 வயதில் இருக்கும் உடம்பா இது... ஏன் உடற்பயிற்சி செய்யவில்லை' என வருத்தமுடன் வ.வே.சு. ஐயர் கேட்டார். 'நான் கண்ட நால்வர்' என்ற புத்தகத்தில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார் சர்மா. மனஉறுதியும் உடல் வலிமையும் இருந்ததால் தான், லண்டனில் இருந்து மாறுவேடங்களில் ஆங்கிலேய அரசின் கண்களில் மண்ணைத் துாவி விட்டு தாய்நாடான இந்தியாவுக்கு வந்தார். மல்யுத்தம், சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதால், 'பழவங்காடி பயில்வான்' என அழைக்கப்பட்டவர் சுதந்திர போராட்ட வீரரான சுப்ரமணியசிவா. 'உடல் உறுதியாக இருந்தால் மட்டுமே மூர்க்கத்தனமாக வருபவர்களைக் கூட எதிர் கொள்ள முடியும்' எனக் குறிப்பிடுவார். இந்திய விடுதலைக்காக பாடுபட்ட வீரர்கள் உடலின் அவசியத்தை போற்றியுள்ளனர். மகாகவி பாரதியார் தோளை வலி உடையதாக்கி உடற்சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டுமாறா உடல் உறுதி தந்து என உடல் வலிமை பற்றி பாடியுள்ளார். 'கோயிலுக்கு செல்வதைப் போல உடற்பயிற்சியும், விளையாட்டும் மிக அவசியம்' என்கிறார் விவேகானந்தர். மருத்துவமனை சென்றால் மட்டுமே உடல் என்ற ஒன்று இருக்கிறது என பலருக்கும் நினைக்கின்றனர். நோய் குணமானதும், 'பழைய குருடி கதவைத் திறடி' என சோம்பேறியாக மாறி விடுகின்றனர். உடல் உறுதியாக தேவை உடற்பயிற்சி. இன்னொன்று உணவு. உடல் நமக்கு கட்டளையிடும்; எச்சரிக்கும். ஆனால் நாக்கு ருசிக்காக கண்டதையும் தேடும். திருவள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.சாப்பிட்ட உணவு செரிப்பதற்கான இடைவெளியைத் தந்த பிறகு, உணவு சாப்பிடுபவருக்கு மருந்து எதுவும் தேவையில்லை. அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.உணவு செரித்த பிறகு அளவு அறிந்து உண்பதே நீண்ட காலம் வாழும் வழி. 'உணவும் மனத்துாய்மையும்' என்ற புத்தகத்தில் சிருங்கேரி ஜகத்குரு 'சாப்பிடும் உணவு, உடலுக்கு பலம், மனதிற்கு திருப்தி, சிந்திக்கும் திறனை தருவதாக இருக்க வேண்டும். 'அன்னமயம் ஹி சோம்ய மன:' என்கிறது சாஸ்திரம்' எனக் குறிப்பிடுகிறார். கட்டுப்பாடில்லாத உணவுப் பழக்கத்தால் தன் ஆரோக்கியம் கெட்டதாக சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன். 'பறப்பதில் ஆகாய விமானம், ஊர்வதில் வாகனங்கள் தவிர அனைத்து அசைவ உணவுகளையும் சாப்பிட்டவன் நான். கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்கள் அப்போது சாப்பிட சுவையாக இருக்கும். இவை எல்லாவற்றையும் வேளை கெட்ட வேளைகளில் சாப்பிட்டு நான் பட்ட வயிற்று நோவுகள் கொஞ்சமல்ல. உணவே மருந்து என வாழாதவர்கள் வாழ்வில் மருந்தே உணவாகும் என்பதற்கு நான் ஒரு உதாரணம். நான் சாப்பிடுவது மாத்திரைகள் அல்ல - மாத்திரைகளே எனக்கு உணவாகி விட்டது'' என தன்னைப் பற்றி சொல்கிறார். இன்றைய வாழ்வில் நடைப்பயிற்சி குறைந்து விட்டது. காலம் தவறி உண்பது என்பது நடைமுறையாகி விட்டது. அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருக்கும். கோயில், கடை, ஆற்றங்கரை என எல்லா இடத்திற்கும் நடந்தே செல்வது வழக்கம். 30 ஆண்டுக்கு முன்பு சைக்கிள் என்பதே கார் போல பெருமையாக பார்க்கப்பட்டது. இன்று எல்லா வேலைகளுக்கும் கருவிகள் வந்துவிட்டன. எண்பது வயது பெரியவருக்கு இதயத்தில் ஆப்பரேஷன் நடந்தது. நல்லபடியாக முடிந்த பின் அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்கான பில்லை மருத்துவமனையில் கொடுத்தனர். அதை பார்த்ததும் கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை பார்த்த மருத்துவர், 'அழாதீர்கள். என்னால் முடிந்தளவு கட்டணத்தை குறைக்கிறேன்' என்றார். அவர் சொன்ன பதில் தான் நம் வாழ்வின் வேதம். 'எனக்கு அது பிரச்னையில்லை. பில் 10 லட்சமாக இருந்தாலும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் 80 வருடமாக எந்த பிரச்னையும் இல்லாமல் என் இதயத்தை பாதுகாத்த கடவுள் ஒரு ரூபாய் கூட கேட்கவில்லையே. இவ்வளவு நாள், என் உடல் பற்றி சிந்திக்கவே இல்லை, இப்போது அதை நினைத்ததும் கண்ணீர் வழிகிறது. எட்டு மணி நேரம் மட்டும் பாதுகாத்ததற்கு எட்டு லட்சத்திற்கு பில் வந்துள்ளது. கடவுளின் கருணையை நினைத்து அழுது விட்டேன்' என்றார். கடவுளின் அருட்கொடைக்கு நிகர் அவரே. நாம் தான் நன்றி கெட்டவர்களாக வாழ்கிறோம். நமக்குக் கிடைத்த திடமான உடலும், வாழ்வும் பலருக்குக் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தால் தினமும் நன்றி சொல்வதற்காக கோயிலுக்கு செல்வோம்.- ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010