உள்ளூர் செய்திகள்

பாரதியாரின் ஆத்திசூடி - 24

நேரத்தை வீணாக்காதேநேர நிர்வாகம் என்பது ஒரு கருத்து அல்ல. நல்ல பண்புகளை இணைக்கும் மையம் அது. நேர நிர்வாகம் என்பது தன்னைத் தானே நிர்வகிப்பதாகும். முக்கிய விஷயங்களுக்கு முதலிடம் கொடுத்து ஒழுங்குபடுத்தும் வாழ்க்கை முறை. குறிப்பிட்ட வேலைக்கு குறித்த நேரத்தைக் கடைப்பிடிப்பது என்பது அனைவருக்கும் தேவையான குணம். மனிதர்கள் பிறக்கும் போது வேறுபாடான பின்னணியில்தான் பிறக்கிறார்கள். ஒவ்வொருவரின் பிறப்பு, அவர்களின் குடும்பம், பொருளாதாரம் என வித்தியாசமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் கடவுள் அனைவருக்கும் ஒரே மாதிரி கொடுத்தது நேரம் மட்டுமே. பிரதமர், ஜனாதிபதி, தொழிலதிபர்கள் என அனைவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான். நேரத்தை சரியாக பயன்படுத்தினால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். இதற்கு பல தலைவர்கள் உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளனர். நேர மேலாண்மை குறித்து 'காலமறிதல்' என்ற அதிகாரத்தில் திருக்குறள் பல கருத்துக்களைக் கூறுகிறது. செயலைச் செய்வதற்குச் சரியான நேரத்தைக் கணித்து, கொக்கு மீனைப் பிடிப்பது போல் தாமதிக்காமல் விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. சரியான நேரத்தை அறிதல்: ஒரு செயலை செய்வதற்குச் சரியான நேரம் வரும் வரை காத்திருந்து, அது வந்தவுடன் தாமதிக்காமல், துல்லியமாகச் செய்ய வேண்டும்.தாமதமின்மை: செயல்கள் தாமதப்படுத்தப்படாமல், சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது.அதிகாரமும் நேரமும்: காலமறிதல் என்ற அதிகாரத்தில், காலத்தை உணர்ந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். குறிக்கோளில் கவனம் இருக்கவேண்டும் என்பதைத்தான், 'நெருங்கின பொருள் கைப் பட வேண்டும்' என்ற மந்திரத்தின் மூலம், மனதிலுள்ள லட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் மகாகவி பாரதியார். மேலும் அவர், எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் என்கிறார். யாரும் நுாறாண்டு வாழ்வதில்லை அப்படி வாழ்ந்தாலும் உடல் நலமின்மை, உறவுகளின் ஆதரவின்மை என பல பிரச்னைகள் இருக்கின்றன.எனவேதான் ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில்பாலஸ்தாவத் க்ரீடா சக்த:தருணஸ்தாவத் தருணீ சக்த:வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:(பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூடமதே)பொருள்: சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கி விடுகின்றனர். பருவ வயதிலோ மனம் இனக்கவர்ச்சியிலேயே ஈடுபாடு கொள்கிறது. முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள். ஐயோ! கடவுளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் வாழ்வில் நேரமே இல்லையே? கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள் என்கிறார். ஒரு உதாரணத்தை பார்த்தால் நேரத்தின் அருமை புரியும். தினமும் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 86,400 வரவு வைக்கப்படுகிறது. ஆனால் ஒரு நிபந்தனை. இந்த பணம் அடுத்த நாளைக்கு கொண்டு செல்ல முடியாது. அன்றன்றே அதை செலவழிக்க வேண்டும் என்பது நிபந்தனை. எல்லோராலும் முடியாத செயல் இது. ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் தினமும் 86,400 விநாடிகள் வரவு வைக்கப்படுகிறது. அதன் பெயர் மணி (நேரம்). 24 மணி x 60 நிமிடம் x 60 விநாடி என கணக்கு பார்த்தால் இந்த எண் வரும். காலம் பொன்னானது எனச் சொல்வதால் என்ன பயன்? அதை மதிக்கிறோமா? நிகழ்ச்சி ஒன்றிற்கு அமைச்சர் வருகிறார் என்றால் காலத்திற்கு மதிப்பு கொடுத்து, சரியான நேரத்திற்கு அவர் வர வேண்டும், அரசியல்வாதிகள் அனைவருக்கும் இது பொருந்தும். அமைச்சரின் தாமதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. குடி குடியை கெடுக்கும். -வீட்டையும், நாட்டையும் கெடுக்கும் என எழுதி விட்டு அரசே மது விற்பனை செய்வதை நாம் கண்டு கொள்கிறோமா அது போலத் தான் இதுவும்...இங்கே அமைச்சர் 2 மணி நேரம் தாமதமாக வருகிறார் என்றால், நாம் எல்லோரும் 2 மணி நேரம் தாமதமாகி விட்டது என அதை கடந்து செல்கிறோம். ஆராய்ந்து பார்த்தால், அவருக்காக காத்துக் இருக்கும் அதிகாரிகள், அலுவலர்கள், தொழிலதிபர்கள், மக்கள் என 100 பேர் இருந்தால், மொத்த கால விரயம் என்பது 100 x 2 = 200 மணி. அதாவது 8.33 நாள் (எட்டரை நாள்). இந்த சிந்தனை என்றைக்கு நம் மனதில் உண்டாகிறதோ அன்றுதான் இந்த நாடு வளர்ச்சி அடையும்.நம்முடைய இலக்கியங்கள், சாஸ்திரங்கள், சான்றோர்களின் வாழ்க்கை - இவை யாவும் காலத்தின் அருமையை எடுத்துச் சொல்கிறது. கையில் எப்போதும் கீதைப் புத்தகம், ஒரு பாக்கெட் கடிகாரத்தை வைத்திருப்பார் காந்தி. திலகர், பாரதியார், வ.உ. சி, ராஜாஜி, காமராஜர் என எல்லோரும் நேரத்தையும், மக்களையும் மதித்தனர். நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் (Discovery of India) நேரத்தின் முக்கியத்துவம், கடமையின் முக்கியம் பற்றி எழுதும் போது, குறிப்பிட்ட பணியை முடிக்க இயலாத போது, என் நேரத்தை திருடிக்கொண்டு அதை முடிப்பேன் என்கிறார். நேரத்தைத் திருட முடியுமா? அதாவது - சாப்பிடும், உறங்கும், பேசும் நேரத்தை குறைத்து, அதை முக்கியப் பணியை முடிக்க பயன்படுத்துவேன் என்கிறார் நேரு. டாக்டர் ராதாகிருஷ்ணன், லால் பகதுார் சாஸ்திரி, இந்திரா, வாஜ்பாய், இப்போதைய பிரதமர் மோடி உட்பட பலரும் நேரத்தை மதித்து வாழ்வில் முன்னேறியவர்களே. கவிஞர் கண்ணதாசனுக்கும் நேரம் தவறாமைக்கும் பெரிய இடைவெளி எப்போதும் உண்டு. முக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் ஒருமுறை தாமதமாக சென்றார். நிகழ்ச்சி நடத்துபவர்கள் முணுமுணுத்தனர். 'ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எத்தனையோ மதங்கள் உள்ளன. என்னுடைய ஒரே மதம் தாமதம்... அதை யாரும் பின்பற்ற வேண்டாம்' என கண்ணதாசன் சொல்ல சபையே ஆர்ப்பரித்தது. இதற்கு நேர் எதிரானவர் நடிகர் சிவாஜி. அவர் படப்பிடிப்பிற்கோ, வேறு எந்த நிகழ்ச்சிக்கோ தாமதமாகப் போக மாட்டார். இதற்கு தேவை நேர்மறை எண்ணம். காலம் வீணாக்கியதால் பலர் வாய்ப்பு, பணம், பதவிகளை இழந்திருக்கிறார்கள். கடந்து விட்ட காலம் இழந்து விட்ட வாய்ப்பு உதிர்ந்து விட்ட சொல்மீண்டும் பெற முடியாதவை.முக்கியம் எது அவசரம் எது (Important & urgent) இந்த வேறுபாட்டை ஒருவன் உணர்ந்து செயல்பட்டால் தேவையற்ற குழப்பம், பிரச்னை பெரிய அளவில் ஏற்படாது. ஒலிம்பிக் போட்டியில் சில நொடி வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி பெறுபவர்களுக்கு காலத்தின் அருமை தெரியும். ஒரு வினாடியின் வித்தியாசத்தில் பதக்கங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.அதே போல வீண் பொழுதுபோக்கு, தவறான பழக்க வழக்கம், வீண்பேச்சு இவை காலத்தைக் கொன்று விடும்.அதுவும் இந்த நவீன யுகத்தில் தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் இன்டர்நெட் மூலமாகவும் பேக்ஸ் மூலமாகவும் பரவும் போது குறித்த நேரம் என்பது மிக அர்த்தம் உள்ளதாக ஆகிறது. போட்டி மயமான உலகில் முந்தியவருக்கே முதலிடம் என்ற நிலையில் குறித்த நேரத்தைக் கடைபிடிக்காதவருக்கு பண இழப்பும், தோல்வியும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வெற்றிகரமான வியாபாரத்தின் ஆத்மாவே குறித்த நேரம் தான். கட்டபொம்மனுக்கு துாக்கு தண்டனையை நிறுத்த சொல்லி வந்த தந்தி தாமதமாக தரப்பட்டதாகவும், உரிய நேரத்தில் வந்திருந்தால் தண்டனை ரத்தாகி இருக்கும் என்று ஒரு செய்தி இன்றும் பேசப்படுகிறது. தேடிச் சோறுநிதந் தின்று — பலசின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்வாடித் துன்பமிக உழன்று — பிறர்வாடப் பலசெயல்கள் செய்து — நரைகூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பலவேடிக்கை மனிதரைப் போலே — நான்வீழ்வே னன்றுநினைத் தாயோ?என பாரதியார் பாடுவது 'காலம் அழியேல்' (நேரத்தை வீணாக்காதே) என்ற ஆத்திசூடி வரியை மனதில் கொண்டே என்றால் அது மிகையல்ல.-ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்94447 94010