உள்ளூர் செய்திகள்

தெய்வீக கதைகள் - 7

பாத காணிக்கைமன்னர் தலைமையில் சபை கூடிய போது நீதி கேட்டு இரண்டு பெண்கள் வந்தனர். ஒரே குழந்தையை 'இது என் குழந்தை' என இருவரும் உரிமை கொண்டாடினர். ஒருத்தி தானே குழந்தைக்கு தாயாக இருக்க முடியும்? ''இந்த வழக்கில் நல்ல தீர்ப்பளிக்க வேண்டும்'' என மன்னர் மனதிற்குள் கடவுளை பிரார்த்தித்தார். “ இந்த குழந்தை என்னுடையது'' என இருவரும் அழுதனர். “குழந்தைக்கு ஒரு தாய்தானே இருக்க முடியும். ஆனால் இருவருமே உரிமை கொண்டாடுவதால் குழந்தையை ஆளுக்கு பாதியாக அறுக்கப் போகிறேன்'' என்றார் மன்னர். ஒரு பெண் அவசரப்பட்டவளாக, 'அப்படியே ஆகட்டும் மன்னா' என தலையாட்டினாள். மற்றொரு பெண்ணோ அழுதபடியே, “வேண்டாம்... என் குழந்தை எங்கு இருந்தாலும் உயிருடன் இருக்கட்டும். அதனால் எனக்குத் தர வேண்டாம்'' என்றாள். இவளே உண்மையான தாய் என்பதை உணர்ந்து குழந்தையை அவளிடம் ஒப்படைத்தார் மன்னர். குற்றவாளியை சிறையில் அடைத்தார். இதைப் போலவே பக்தன் ஒருவனிடம் பகவான் கண்ணன் திருவிளையாடல் நிகழ்த்தினார். ஏன் தெரியுமா... தொடந்து படித்தால் உண்மை புரியும். பாண்டவரில் ஒருவனான அர்ஜுனன் தானே சிறந்த பக்தன் என ஆணவம் கொண்டிருந்தான். “ கண்ணனுக்கு என்னை விட நெருக்கமானவர் யாரும் கிடையாது. என் உடம்பில் உள்ள ஒரு உறுப்பைக் கேட்டாலும் கண்ணனுக்காக கொடுப்பேன்'' என பெருமை பேசினான். இதைக் கேட்டதும் கோபம் கொண்ட கண்ணன், அவனை ஒரு ஏழையின் குடிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுவன் ஒருவனும், அவனது பெற்றோரும் இருந்தனர்.கண்ணனைக் கண்ட அவர்கள், “கண்ணா... உன்னை தரிசிக்கும் பேறு பெற்ற நாங்கள் பாக்கியசாலிகள். ஆனால் காணிக்கையாகத் தர உயர்ந்த பொருள் எங்களிடம் ஏதும் இல்லையே! இருந்தாலும் இங்குள்ள எதாவது ஒன்றை கேட்டால் தருகிறோம்” என்றார் தந்தை. “விலை மதிப்பற்ற ஒரு பொருள் இருக்கிறதே'' என்றான் கண்ணன்.“புரியவில்லையே'' என விழித்தார் தந்தை. “இதோ இருக்கிறானே உன் மகன்! இவன் விலை மதிப்பு இல்லாதவன். இவனை கொடுங்கள்'' என்றான் இயல்பாக. ''இதோ தருகிறேன்'' என கண்ணனின் பாதத்தில் காணிக்கையாக பெற்றோர் அர்ப்பணித்தார்.“இப்படி தரக் கூடாது. பெற்றோர் இருவரும் இவனது உடம்பை வாளால் அறுத்து வலது பாகத்தை மட்டும் தர வேண்டும். அதிலும் ஒரு நிபந்தனை'' என சொல்லி முடிப்பதற்குள் 'நிச்சயம் தருகிறோம்' என்றார் தந்தை. “உடலை அறுக்கும் போது சிறுவன் உள்பட மூவருக்கும் கண்ணீர் வரக் கூடாது” என்றான் கண்ணன்.தாமதிக்காமல் உடனடியாக செயலிலும் இறங்கினர். மகனின் தலை அறுபட்ட பிறகும் பெற்றோரின் மனம் கலங்கவில்லை. ஆனால் சிறுவனின் இடக்கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.இதைக் கண்ட கண்ணன், “நிறுத்துங்கள்! கண்ணீர் சிந்துகிறான் இவன். யாரும் கண்ணீர் விடக் கூடாது என்பது தானே நிபந்தனை! காணிக்கையை ஏற்க மாட்டேன்'' என்றான் கண்ணன்.“இடக்கண்ணில் இருந்து கண்ணீர் வருவது ஏன் என தங்களுக்கு புரியவில்லையா... பகவானுக்கு காணிக்கையாகும் பாக்கியம் வலது பாகத்திற்கு மட்டும் தானே கிடைத்தது. தனக்கு அதில் பங்கு இல்லையே என இடப்பாகம் வருந்துகிறது'' என்றார் தந்தை. இத்துடன் திருவிளையாடலை நிறுத்திக் கொண்டு கண்ணன் அமைதியானான். இதை பார்த்த அர்ஜுனன், ''பேச்சளவில் இருக்கும் நான் எங்கே? உண்மையான இந்த பக்தர்கள் எங்கே? இவர்களின் பக்திக்கு முன் அற்பமாகி விட்டேனே'' என வருந்தினான் அர்ஜுனன். அவனது ஆணவ எண்ணம் அழிந்தது. கண்ணனின் அருளால் சிறுவன் உயிர் பெற்றான். பெற்றோரும் மகிழ்ந்தனர்.-தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com