தெய்வீக கதைகள் - 23
எல்லாம் அறிந்தவர் யாருமில்லைகற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவென்(று)உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்தவெறும் பந்தயங் கூற வேண்டாம் புலவீர்எறும்புந் தன்கையால் எண்சாண் என்கிறார் அவ்வையார். ''கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு. கலைமகளும் தான் தினமும் படித்துக் கொண்டிருக்கிறாள். நான் ரொம்பக் கற்றவனா, நீ ரொம்பக் கற்றவனா என்று விவாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச்சாண் உயரம் இருக்கும்'' என்பது இதன் கருத்து. இப்படி தற்பெருமையுடன் கல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் என்ன நேரும் என்பதை கீழ்க்கண்ட கதை தெரிவிக்கிறது.நதிக்கரை ஒன்றில் அழகான ஊர் ஒன்று இருந்தது. அங்கிருந்து அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டுமானால் நதியைக் கடந்து தான் செல்ல வேண்டும். கங்கை, காவிரியைப் போல அந்த நதியின் வேகமும் ஆழமும் அதிகமாக இருந்தது. அதனால் படகோ அல்லது பரிசலோ அவசியம் வேண்டும்.அப்படித்தான் அந்த நதியை கடப்பதற்காக ஒரு ஓடக்காரன் தினமும் காலையில் இருந்து மாலை வரை பயணிகளை அக்கரைக்குக் கொண்டு விடுவதும், அங்கிருந்து அழைத்துக் கொண்டு வருவதுமாக பணியாற்றிக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதற்குத் தேவையான பணம் அதன் மூலம் கிடைத்தது. படகுகள் பல இருந்தாலும் இவனது படகில் ஏறுவதில் ஊராருக்கு திருப்தி.அவ்வாறு ஒருநாள் கடவுளை வேண்டியபடி பணியைத் தொடங்கினான். பயணிகளை ஒவ்வொருவராக படகில் ஏற்றிக் கொண்டு அக்கரைக்கு செல்லத் தொடங்கினான் ஓடக்காரன். கூட்டமாக இருந்ததால் அத்தனை பேரையும் பாதுகாப்பாக அக்கரையில் சேர்க்கும் பொறுப்பு அவனுடையதாக இருந்தது. அன்று விதவிதமான பயணிகளை சந்திக்க நேர்ந்தது. பயணிகளில் பண்டிதர் ஒருவர் இருந்தார். தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி இல்லை. தான் எல்லாவற்றையும் கற்றுவிட்டோம் என்ற கர்வத்துடன் இருந்தார். தன்னுடைய புலமையும், பெருமையும் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என நினைத்தார். ஓடக்காரனிடம் தன்னைப் பற்றி பறைசாற்றத் தொடங்கினார்.மரியாதை இல்லாமல், ''ஏய் ஓடக்காரா! இப்படி அழுக்கு வேட்டியும் சட்டையும் அணிந்து ஒன்றும் தெரியாமல் தற்குறியாக இருக்கிறாயே? பகவத்கீதை பற்றி உனக்கு தெரியுமா இல்லையா'' என ஏளனமாகக் கேட்டார். 'ஐயா, சாமி. அப்படியென்றால் என்ன? எனக்குத் தெரியாதே' என்றான் ஓடக்காரன்.“ஓ... அப்படியா? உன் வாழ்நாளில் கால்பங்கு வீணாகிப் போச்சே” என்றார் பண்டிதர். “சரி! அது போகட்டும்! உலகம் போற்றும் ஒண்ணே முக்கால் அடி திருக்குறளையாவது நீ படித்திருக்கிறாயா? அதை யார் எழுதினார்கள் என உனக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. படித்திருக்கிறாயா? இல்லையா சொல்?” எனக் கேட்டார். அதற்கு அந்த ஓடக்காரன் “திருக்குறளா? என்ன ஐயா சொல்கிறீர்கள்?”என வெட்கத்துடன் சொன்னான். “இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே! நீ எல்லாம் எதற்கப்பா இருக்கிறாய்? அது போகட்டும்! பாகவதம் படித்ததுண்டா' ? என்று கேட்டார். அக்கறையுடன் படகு செலுத்திய ஓடக்காரன், ''படிக்கவில்லையே'' என தலைகுனிந்து நின்றான். அவனுக்கு தான் இதையெல்லாம் படிக்கவில்லையே என்ற வருத்தம் தான், இருந்தாலும் இந்த தொழிலையாவது உண்மையுடன் செய்வதை எண்ணி சமாதானம் அடைந்தான்.“போச்சு! அதுவும் இல்லையா? ஏனப்பா! படிக்கத்தான் முடியவில்லை, பாகவதத்தை சொற்பொழிவு செய்கிறார்களே! அதையும் கேட்டதில்லையா? என்னத்தைச் சொல்ல? நீ எதற்கும் தகுதி இல்லை. உன் வாழ்வில் முக்கால்வாசி காலத்தை வீணாக்கி விட்டாய். எனக்கு உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இனி மீதி காலத்தில் என்ன செய்யப் போகிறாய்? கடவுளுக்குத் தான் வெளிச்சம்” என விமர்சித்தார் பண்டிதர். திடீரென காற்று பலமாக வீசியது. படகு நிலையின்றி தவித்தது. படகோட்டி பதட்டமுடன், “போதும் ஐயா! வீண் பேச்சை நிறுத்தி விட்டு கரை சேரும் வழியைப் பார்ப்போம்'' என்றான். அவன் சொல்லி முடித்தது தான் தாமதம்... கரை புரளும் வெள்ளம் வந்தது. அலைகள் ஒன்றோடொன்று மோதி படகு கவிழும் நிலைக்கு வந்தது. கடைசியாக ஓடக்காரன், “ஐயா... நான் சொல்வதைக் கேளுங்க! இத்தனை நேரம் நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு வந்தேன். இப்போது நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். தண்ணீரில் குதித்தால் உயிர் தப்பலாம். இல்லாவிட்டால் படகு கவிழ்ந்து மூழ்க வேண்டியது தான்'' என ஓடக்காரன் எச்சரித்தான்.“ஐயோ! என்ன சொல்கிறாய்? எல்லாம் தெரியும் என பெருமை பேசிய எனக்கு நீச்சல் தெரியாதே'' என்றார். பண்டிதரிடம், ''கடவுள் புண்ணியத்தில் நீச்சல் நன்றாகத் தெரியும். என்னை வாழ்வின் முக்கால் பங்கை வீணாக்கியதாக கூறினீர்களே! எல்லாம் தெரிந்த நீங்கள் இப்போது முழு வாழ்க்கையையும் இழக்கப் போகிறீர்களே! மிகவும் வருத்தமாக இருக்கு. உங்களைக் கடவுள் காப்பாற்றட்டும்'' என்று சொல்லி ஆற்றில் குதித்து நீச்சல் அடித்தான். பண்டிதர் பரிதவிப்பதை பார்க்கப் பாவமாக இருந்தது. உலகில் எல்லாம் அறிந்தவர் யாருமில்லை.-பக்தி தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com