சித்தர்களின் விளையாட்டு - 2
அகத்தியர்பார்வதியிடம் ''நாம் சித்தர்களை பற்றி பேச வேண்டுமானால் முதல் சித்தரான அகத்தியரில் இருந்தே தொடங்க வேண்டும். எளிமையாக காட்சியளித்தாலும் குணத்திலும், அறிவிலும் மிக உயர்ந்தவர் அவர். வேதியியல், மருத்துவம், மந்திரம், ஜோதிடம், வானியல், கணிதம், தத்துவம் என அகத்தியர் தொடாத துறைகளே இல்லை. எல்லா சித்தருக்கும் தலைவர் அவரே. எட்டு வித்தைகளை அறிந்தவர். 12,000 ஆண்டு காலம் வாழ்ந்தவர். சித்த மருத்துவம், வேதம், சித்து விளையாட்டு, பேச்சில் திறமை, யோகாசனத்தில் தேர்ச்சி, பழுத்த ஞானம் என அவரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 27 நட்சத்திரங்களில் ஒன்றான அகஸ்திய நட்சத்திரமே மண்ணில் முனிவராக பிறந்தது. குறுமுனி, தமிழ்முனி, குடமுனி, பொதிகை முனி, அமரமுனி என்றும் இவருக்கு பெயர் உண்டு. பொதிகைமலை அகத்தியர் உள்ளிட்ட 37 அகத்தியர்கள் இருக்கிறார்கள். பரத கண்டம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அகத்தியர் வழிபடப்படுகிறார். இன்றும் வானில் அகத்திய நட்சத்திரமாக இருக்கும் இவரது வரலாறு சுவாரஸ்யமானது. ''என்ன ஆச்சரியம்! பழமையான அகஸ்திய நட்சத்திரத்திற்கு இணையானவரா அகத்தியர்?'' எனத் தெரியாதது போல கேட்டாள் பார்வதி. ''ஆம்... இந்த நட்சத்திரம் மிதுன ராசியில் தோன்றும் போது பூமியின் ஈர்ப்புவிசை மாறி கடல்நீரும் வற்றும். இதுவே அகத்தியர் கடல் நீரை குடித்த திருவிளையாடல். வான சாஸ்திரங்களில் அகத்தியர் பற்றிய செய்தி நிறைய உண்டு. நம் திருமணத்தைக் காண கைலாய மலையில் தேவர்கள் கூடிய போது பாரம் தாங்காமல் நிலம் வடக்கில் தாழ்ந்தும், தெற்கில் உயர்ந்தும் போனது. அதைச் சமப்படுத்த பொதிகை மலைக்குச் சென்றவர் அகத்தியர் தான். அவருக்காக மணக்கோலத்தில் பொதிகை மலையில் நாம் காட்சியளித்தது நினைவிருக்கிறதா? குமரிக்கண்டத்தில் இவர் செய்த சித்து விளையாட்டு பற்றி உனக்கு சொல்கிறேன். கேட்கிறாயா...மதுரையை ஆட்சி செய்த பாண்டியனின் அவையில் தலைமைப் புலவரான திரணாக்கிய முனிவர் தலைவலியால் சிரமப்பட்டார். அவையில் இருந்த புலவர்கள் அனைவரும் மன்னரிடம் முறையிட்டனர்.தொல்காப்பியம் தந்த தலைமைப் புலவனுக்கே இந்த நிலையா என வருந்திய மன்னர், பல வைத்தியர்களை வரவழைத்தார். ஆனால் தலைவலி தீரவில்லை. அவரைக் காணச் சகிக்காமல், “ அகத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரால் மட்டுமே தலைவலியை தீர்க்க முடியும்” என்றார் மன்னர். திரணாக்கிய முனிவரோ, “என்னால் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு என் உடல் மோசமாக உள்ளது. அகத்தியரிடம் சொல்லுங்கள்” எனக் கண்ணீர் சிந்தினார்.அகத்தியரை தேடிக் கண்டுபிடித்து, “உங்கள் சீடன் திரணாக்கியர் தலைவலியால் அவதிப்படுகிறார். உங்களைத் தான் நம்பி இருக்கிறோம். தங்களை அழைக்க மன்னரே வருவதாகச் சொன்னார். ஆனால் திரணாக்கியருக்கு துணையாக அவர் அங்கே இருப்பதால் வர முடியவில்லை” என்றனர். அகத்தியரும் தாமதிக்காமல் சீடர்களுடன் வந்து சேர்ந்தார். படுக்கையில் கிடந்த திரணாக்கியரிடம், “ கவலைப்படாதே! உன்னை இப்போதே குணப்படுத்துகிறேன்” என பரிசோதிக்க தொடங்கினார். தலை, காது, மூக்கு, வாய் என ஒவ்வொரு உறுப்பாக சோதித்த அவர், இறுதியாக ஏதோ விஷ ஜந்து தலைக்குள் இருப்பதாக தோன்றுகிறது. அதுவே தலைவலிக்கு காரணம்'' என்றார். “குருநாதா... நீர்நேத்தி பயிற்சியை தினமும் செய்கிறேன். இப்பயிற்சியால் மூளை, மூக்கு என உள்ளுறுப்புகள் துாய்மையாகி விடும். அப்படி இருக்க எப்படி தலைவலி வரும். இங்குள்ள குளத்து நீரையே பயிற்சிக்கு பயன்படுத்துகிறேன்'' என்றார் திரணாக்கியர். பாசி படர்ந்த அந்தக் குளத்தில் தவளைகள் துள்ளிக் குதிப்பதைக் கண்ட அகத்தியர், “தேரை (தவளைக் குஞ்சு) தான் தலையில் புகுந்திருக்கும். அதை வெளியேற்றினால் தலைவலி போய் விடும்” என்றார்.மேலும் மன்னரை நோக்கி, “நீர்நேத்தி பயிற்சியில் ஈடுபட்ட போது மூக்கின் வழியாக நுழைந்த தேரை, எலும்பை துளைத்து மூளைக்குள் சென்று விட்டது. இப்போது வளர்ந்து விட்டதால் வெளியே வர துடிக்கிறது. அதனால் ஏற்பட்டது தான் தலைவலி. மண்டையோட்டை பிளந்து தேரையை வெளியேற்றுவது சற்று சிக்கலான விஷயம். ஆனால் சிவன் அருளால் எல்லாம் நன்மையாக முடியும்'' என்றார். “உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். தாங்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்” என்றார் மன்னர். அகத்தியரும் ஆயுதங்களால் மண்டை ஓட்டை பிளந்தார். உள்ளே இருக்கும் மூளை அப்பட்டமாக தெரிந்தது. அகத்தியர் கணித்தது போலவே இடது பக்க மூளைக்கும், வலது பக்க மூளைக்கும் நடுவில் தேரை எட்டிப் பார்த்தது. சீடனிடம் இருந்த இரும்பு குறடை வாங்கிய அகத்தியர், தேரையை இழுக்க முயன்றார். ஆனால் அவனோ அவரை தடுத்து, “குருவே! பொறுமையாக இருங்கள். தேரை தன் கால்களால் மூளையை இறுகப் பிடித்திருக்கிறது. தாக்க வருவதாக எண்ணி, உள்ளே ஓடி விடும். அதன் பாதம் பட்டு மூளையும் சேதமாகி விடும். சற்று பொறுங்கள்” என்றான் சீடன். அகத்தியரும் சம்மதித்தார். அதன் பிறகு சீடன் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி தேரையின் அருகே கொண்டு சென்றான். தேரையை கவரும் விதமாக கையால் அசைத்து 'சலசல' என சத்தத்தை உண்டாக்கினான். அவ்வளவுதான் பாத்திரத்தில் உள்ள நீரை பார்த்தவுடன் தேரை தாவிக் குதித்தது. உடனே பிளந்திருந்த மண்டை ஓட்டை எடுத்து வைத்து ரத்தம் கசியாமல் தையல் போட்டார் அகத்தியர். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்தது. தலைவலி மறைந்ததாக திரணாக்கியர் சொன்னார். அருகில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர். “மன்னா... இந்த அற்புதம் நடக்க என் சீடன் பொன்னரங்கனே காரணம். இன்று முதல் 'தேரையன்' என அவனை அழைப்போம்'' என்றார். அத்துடன் சீடனுக்கு மருத்துவப்பள்ளி ஒன்றை உருவாக்கும்படி மன்னரைக் கேட்டுக் கொண்டார். மேலும், ''பொன்னரங்கா... நல்ல மருத்துவனாக இரு'' என வாழ்த்தினார் அகத்தியர். நயனவிதி, கன்ம காண்டம், ஆயுள் வேதம், குணவாகடம் போன்ற நுாற்றுக்கும் மேற்பட்ட நுால்களை அகத்தியர் எழுதினார். அவரின் விளையாட்டை விவரிக்க காலமோ, நேரமோ போதாது. 'நமச்சிவாயா...' என அழைத்து இடைமறித்த நாரதர் “வானுலக தேவர்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழ்வது இயல்பு. ஆனால் பூவுலக மனிதரான அகத்தியரும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துள்ளாரே எப்படி... கடலை கும்பத்தில் அடக்கியது, மண்டை ஓட்டை வெட்டி அறுவை சிகிச்சை செய்தது என அற்புதங்களும் நிகழ்த்தி உள்ளாரே... இதை என்னால் நம்ப முடியவில்லையே” என்றார் நாரதர்.“உங்களின் வேலையை காட்டி விட்டீரே நாரதரே... ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் இன்னும் எத்தனையோ உள்ளன. சற்று பொறுமையாக கேளுங்கள்” என்றார் பரமேஸ்வரன். “நாரதரே... சித்தர்களின் விளையாட்டை தொடர வேண்டுமானால் சற்று அமைதியாக இருங்கள். தேரையனை பற்றி அறிய ஆவலாக நான் இருக்கிறேன்” என்றாள் பார்வதி.--விளையாட்டு தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்90030 00250