சொல்லச் சொல்ல இனிக்குதடா - 40
மலேசியா பத்துமலை முருகன்மலேசியாவில் இருந்து வந்த பாட்டியின் மகனும், மருமகளும் சாப்பிட அமர்ந்தனர். தேவந்தி இட்லி பரிமாறினாள். என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் இட்லிக்கு எதுவும் ஈடாகாது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என பாடியபடி பாட்டியின் அருகில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார் அவரது மகன் பிச்சாண்டி.“இருக்காதா... பின்ன! அந்தந்த மண்ணுக்கே உரிய சில விஷயங்கள் இருக்கத்தானே செய்யும். சரி அங்க பிரபலமா இருக்கிற பத்துமலை முருகன் கோயிலுக்கு போனியே... அதப் பத்தி சொல்லு” என ஆவலை வெளிப்படுத்தினார் பாட்டி.“நிறையவே சொல்றேன் கேளு. பத்துமலை ஒரு குகைக் கோயில். நான் கூட பத்து மலை இருக்கும் போலனு நினைச்சேன். இது அப்படி இல்ல, முழுக்க முழுக்க குகை. அந்த குகையோட அழகை நாம அண்ணாந்து தான் பார்க்க முடியும். அவ்வளவு பிரம்மாண்டம். பல லட்சம் ஆண்டுகள் பின்னணி கொண்டது. மரங்கள் அதிகம் இருக்கும் உயர்ந்த குகை இது. மலாய் மொழியில 'பது கேவ்'ன்னு சொல்லுவாங்க. அப்படின்னா சுண்ணாம்பு குகைன்னு அர்த்தம். அதையே பத்துமலைன்னு ஆக்கிட்டாங்க.”“ஓ! அப்படியா” என்றார் பாட்டி.''கோலா லம்பூரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் தான் புகழ்பெற்ற இந்த முருகன் கோயில் இருக்கும்மா. படி ஏறுவதற்கு முன்பாக 140 அடி உயர தங்க நிற பெரிய முருகன் சிலை நம்மை வரவேற்கும். மலேசியாவில் இருக்கும் பெரிய சிலை இதுதான். ஏதோ மாய உலகத்துக்குள்ள போற மாதிரி என் உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சும்மா” என தன் அனுபவத்தை கொட்டினார் பிச்சாண்டி.இப்போது பாட்டியின் உடம்பு புல்லரிக்கத் தொடங்கி விட்டது. ''ம்... அப்புறம்?”“இந்த பிரம்மாண்ட சிலையை ஒட்டி படிகள் இருக்கு. 272 படிக்கட்டு தான். நாலு வரிசையில வண்ண வண்ண நிறத்தில் பெயின்ட் அடிச்சிருக்காங்க. பார்க்கத்தான் படி நீளமா உயரமா தெரியும். மெதுவா ஏறினா கூட இருபது நிமிஷத்தில ஏறிடலாம். கொஞ்சம் நெட்டு தான். ஏறும் போது படிகளை ஒட்டி செயற்கை அருவி இருக்கிறத பார்க்க ரம்மியமா இருக்கும். குகைக்குள் காலடி எடுத்து வெச்சா அது வேற மாதிரி உலகம். நம்ம மனசை அப்படியே கபளீகரம் செய்திடும். குகையோட வாசல்ல நுழைஞ்சதும் வலது புறமா இடும்பன் சன்னதி இருக்கும். இடும்பன் தானே காவடி எடுக்குற பக்தர்களுக்கு எல்லாம் முன்னோடி! அவரைக் கும்பிட்டு கொஞ்ச துாரம் போனா மூலவர் முருகன் சன்னதியை பார்க்கலாம். இவ்வளவு பெரிய குகைக்குள்ள இன்னும் ஒரு சின்ன குகை இருக்கு. அதுக்குள்ள முருகன் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். உருவத்தில் சின்னதாகவும் பக்தர்களின் மனசுல பெரியவராகவும் முழுக்க முழுக்க வெள்ளியால் ஆன விக்ரஹமா இன்னமும் என் கண்ணுக்கு உள்ளேயே நிக்கிறார். அவருடைய திருவடிக்கு அருகிலுள்ள வேலுக்கு தான் அபிஷேகம் செய்றாங்க. அங்கே போய் நின்னதும் என் உடம்பு சிலிர்த்து போச்சு. இந்த முருகனை வேண்டிக்கிட்டா கேட்டது கிடைக்கும். மூலவரான முருகப்பெருமான் நின்றபடி காட்சி தருகிறார். சிலைக்கு முன்பு இருக்கும் இன்னொரு முருகன் சிலைக்கு தான் பால் அபிஷேகம் செய்யப்படுது. இதுக்கும் மேல ஏறிப் போனால் உயரமான இடத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் அற்புதமாக அருள்பாலிக்கிறார். குகையோட இன்னொரு பகுதியில தண்டாயுதபாணி சன்னதி இருக்கு”மகன் சொல்ல சொல்ல அப்படியே உள்வாங்கிக் கொண்டு தன் மணக்கண்ணில் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார் பாட்டி.“அந்தக் குகையில முருகனை தரிசிக்கிற வரைக்கும் எனக்கு வேற சிந்தனையே இல்ல. அவனைப் பார்த்து முடிச்ச பிறகு தான் மற்ற பிரம்மாண்டம் எல்லாம் என் கண்ணை ஈர்த்துச்சு. அழகே வடிவான அந்த குகைக்குள் நிமிர்ந்து மேல பார்த்தா அப்படி ஒரு விஸ்வரூப காட்சி. என் வாழ்விலேயே இப்படி காட்சிகளை பார்த்ததே இல்லை. நேரில் பார்த்து அனுபவிக்கிற உணர்வை சொல்ல வார்த்தை கிடையாது. மலேசியாவில் வானளாவிய எத்தனையோ கோபுரங்களை கார்ல வரும் போது பாத்துட்டே வந்தேன். ஆனா இந்த இயற்கை குகைக்கு முன் அதெல்லாம் சும்மான்னு தான் சொல்லணும். இது சுண்ணாம்பு குகை இல்லையா... அதனால மேலே இருந்து சுண்ணாம்புத் தண்ணி சொட்டு சொட்டா விழும். அதன் மீது நம்ம கால் பட்டா வழுக்கும். அதனால முருகன் சன்னதியில் தண்ணிய பீச்சு அடிச்சு சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க”''சரி இந்த கோயிலில் எப்ப இருந்து வழிபாடு தொடங்குச்சு” என கேட்டார் பாட்டி.“இந்த குகை பல லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கோலாலம்பூர் தம்பு சாமிப்பிள்ளையின் கனவில் முருகன் தோன்றி தன் அருட்சக்தி குறிப்பிட்ட இடத்தில் இருக்குன்னு உணர்த்தினார். அப்போ மலேசியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களிடம் அனுமதி பெற்று 1891ல் கோயிலை அமைச்சு வழிபடத் தொடங்கினாங்க. அன்று முதல் இன்று வரை பக்தர்களோட மனக்குறையை போக்கி அருள் செய்றாரு முருகப்பெருமான். மலைக்கு அடிவாரத்தில் உள்ள தங்க வண்ண சிலைக்கு 2006 தைப்பூசத்தன்று திறப்பு விழா செய்தாங்க. தமிழக சிற்பிகள் தான் மூணு வருஷமா உழைச்சு சிலையை நிர்மாணிச்சாங்க. இந்த பத்து மலை முருகன் கோயிலில் தைப்பூசம் ரொம்ப விசேஷம். கார்த்திகை, கந்தசஷ்டியை விட தைப்பூச விழா பிரசித்தம். மலேசியாவில் பத்து மலையில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுது. விரதம் இருக்குறவங்க மஞ்சள் ஆடை உடுத்திக்கிட்டு பால் குடங்களை ஏந்தி காவடிகளை துாக்கி, நாக்கில் வேல் குத்திக்கிட்டு கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து மலையேறி வழிபடுறாங்க. சீனர்கள், மலாய் மக்கள், தமிழர்கள் என மூன்று பிரிவு மக்களும் ஒன்னா வாழ்றாங்க. நாடு, மொழி, இனம் கடந்து மக்கள் பத்துமலை முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்றாங்க. தைப்பூசத்தன்று சீனர், மலாய் மக்களும் வேல், அலகு குத்திட்டு நேர்த்திக்கடன் செய்றாங்க. மலேசியாவில் அன்று பொது விடுமுறைன்னா பார்த்துகோயேன். இப்படி மலேசியாவில் தவிர்க்க முடியாத சக்தியா முருகன் உயர்ந்த இடத்தில் இருக்காரு. தமிழர்களான நமக்கும் இது பெருமை. பத்துமலை முருகனை பார்த்ததும் ஏதோ நம்ம மண்ணுக்குள்ள இருக்கிற மாதிரி பெருமிதம் உண்டாச்சும்மா”“சரிப்பா நீங்க பார்த்துட்டீங்க... நானும் யுகனும் தேவந்தியும் போயிட்டு வரோம்”“ அட பாட்டி! இது என்ன பக்கத்திலயா இருக்கு... மலேசியா! நாடு விட்டு நாடு போகணும். ஏரோபிளேன்ல தான் போகணும். அப்படி போகணும்னா பாஸ்போர்ட் வேணும். உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா?”“சரிடா பாஸ்போர்ட் எடுத்துட்டா போச்சு. உடனடியா பாஸ்போர்ட் எடுக்கிற வழியைப் பாரு. இன்னைக்கே போய் வேலைய ஆரம்பி'' என்றார் பாட்டி தீர்மானமாக.'திரு திரு' என விழித்த யுகன் பத்துமலை முருகன் கோயிலில் வெளியே உள்ளேன்னு 300 படிகள் கிட்ட இருக்கும். உன்னால ஏற முடியுமா?”“முருகன நினைச்சுட்டு கால வச்சா அவனே மலை மீது கூட்டிட்டு போவான். என் உடம்பு நல்லா தான் இருக்கு. நீ தான் பாக்குறியே. இந்த பத்துமலையில என்னால ஏற முடியும்” என்றார் பாட்டி.மகிழ்ச்சியுடன் பிச்சாண்டி, “ அம்மாவுக்கு இல்லாததா யுகா, போய் இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணு” என்றார்.“பாட்டி... பாஸ்போர்ட் எடுக்க உன் பேர முதல்ல சொல்லு” என்றான் யுகன் கையில் பேனாவுடன்.“ என் பேரு தெரியாதா உனக்கு? ம்... மயூர வள்ளி” என கம்பீரமாக முடித்தார் பாட்டி.-முற்றும்இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.பவித்ரா நந்தகுமார்94430 06882