தந்தை சொன்ன மந்திரம்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகப்பிரம்மம். ஒருநாள் தனது தந்தை ராம பிரம்மத்திடம், ''அப்பா நம் குலதெய்வமாகிய ஸ்ரீராமபிரானை தரிசிக்க வேண்டும் என விரும்புகிறேன். தாங்கள் தான் என் குரு. நீங்களும் என்னுடன் வந்தால் குருவின் அருளால் திருவாகிய ஸ்ரீராமபிரானை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்'' என வேண்டினார். அதற்கு ராம பிரம்மம், ''மகனே... என் உடல்நிலை சரியில்லை. அநேகமாக இன்னும் சிறிது நாளில் ஸ்ரீராமபிரானின் திருவடியை அடைவேன் என உணர்கிறேன்'' என்றார். தியாகப்பிரம்மம் கண்ணீருடன், ''என்னப்பா.. இப்படி சொல்கிறீர்கள். இனி எப்படி குருவருள், திருவருளையும் பெறுவது'' என வருந்தினார். ''கவலைப்படாதே. ராம நாமத்தை ஜபம் செய்து கொண்டே இரு. ஒருநாள் அந்த பகவான் ஸ்ரீராமரே உன் முன் காட்சியளிப்பார்'' என சொல்லி தான் ஜபம் செய்து வந்த மாலையை அவரிடம் கொடுத்தார் ராம பிரம்மம். சிறிது நாளில் அவரது உயிரும் பிரிந்தது. தியாகப் பிரம்மமும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப தினமும் ராமநாமத்தை ஜபித்து வந்தார். ஒருநாள் ஸ்ரீராமர், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயரை தரிசனமும் செய்தார். நாரதரும் சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனம் கொடுத்துள்ளார். அதோடு ஸ்வரார்ணம் என்ற பெயருடைய சங்கீத நுாலையும் கொடுத்தார். அதை வைத்து பல கீர்த்தனைகளை இயற்றினார் தியாகப் பிரம்மம். அதனால் 'இசை உலகின் பிதாமகர்' என்ற புகழையும் பெற்றார்.