உள்ளூர் செய்திகள்

பேசும் தெய்வம்

அனுமனின் அம்சம் கொண்டவர் துறவி ராமதாசர். அவருக்கு ஒருநாள் தாயாரின் நினைவு வரவே வீட்டிற்கு தேடி வந்தார். வாசலில் நின்று, “ஜய ஜய ரகுவீர ஸமர்த்த” என குரல் கொடுத்தார். திண்ணையில் உட்கார்ந்திருந்த ராமதாசரின் தாயார் யாரோ பிச்சை கேட்டு வந்திருப்பதாக கருதி வீட்டாரிடம் உணவு தரச் சொன்னார். “அம்மா! நான் தான் உங்கள் நாரோபா வந்திருக்கேன். (ராமதாசரின் தாயார் இப்படித்தான் செல்லமாக அழைப்பார்.) உங்களைப் பார்க்க வேண்டும் என்றே இங்கு வந்தேன்” என்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்ற மகன் திடீரென வந்திருப்பதை அறிந்த தாய் மகிழ்ந்தாள். தட்டுத் தடுமாறியபடி வந்தாள். ''என் கண்ணே! நாரோபா! உன்னைக் காண எனக்குக் கொடுத்து வைக்க வில்லையே? பார்வை இல்லாத பாவியாகி விட்டேனே” எனக் கதறினாள். அதைக் கேட்ட ராமதாசரின் மனம் துடித்தது. தன் இஷ்ட தெய்வமான ரகுவீரரை பிரார்த்தித்தபடி தாயின் கண்களைத் தொட்டார். அடுத்த நிமிடமே தாயாருக்கு கண் பார்வை வந்தது. ராமதாசரைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தாள். சில நாட்கள் தாயாருடன் இருந்த அவர் பக்தி, தர்மத்தைப் பரப்பவும், நீதியை நிலைநாட்டவும் வீட்டை விட்டு கிளம்பினார். மகனைப் பிரிய மனம் இல்லாமல் அழுத தாயிடம், “உன் இறுதிக் காலத்தில் மீண்டும் வருவேன்” என வாக்களித்தார் ராமதாசர். அதை நிறைவேற்றியும் வைத்தார். சாஸ்திரங்களை கற்ற பண்டிதராக இருந்தாலும், எல்லாம் அறிந்த துறவியாக இருந்தாலும் அவர்களும் தாயின் அன்புக்கு கட்டுப்பட்ட மகன் தானே. துறவியான ஆதிசங்கரர், பட்டினத்தார் போன்றவர்கள் தாயாருக்கு மகனாக இருந்து செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்தார்கள். பேய் உருவம் கொண்டு தலையால் நடந்து கைலாயத்தை அடைந்த கரைக்கால் அம்மையாரைக் கண்டதும் 'எம்மை பெற்ற அம்மையே' என வாயார அழைத்தார் சிவபெருமான். தாயும், தந்தையும் இல்லாத சிவபெருமானுக்கே தாயின் அன்பு தேவைப்படும் போது மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?அம்மா என்றழைக்காத உயிரில்லையே; அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே... நேரில் நின்று பேசும் தெய்வம் தாய். அவரின் அன்புக்கு இணை ஏதுமில்லை