ராதையின் நெஞ்சமே
பாண்டுரங்கனின் பக்தை ராதை. அவளது கணவர் கண்ணன் விவசாயி. அவன் எப்போது வீடு திரும்பினாலும் மனைவி கோயிலுக்கு சென்றிருப்பாள். 'நான் வரும் நேரத்தில் வீட்டில் இல்லையே' என சலித்துக் கொள்வான். அவளுடன் சண்டை இட்டால் அவளது அம்மா வீட்டுக்கு சென்று விடுவாள். சமைக்க தெரியாத நமக்கு சாப்பாட்டுக்கு திண்டாட்டம் என வாயை பொத்திக் கொண்டான். இவள் அடிக்கடி கோயிலுக்கு செல்வதால் கடவுள் மீது கோபப்பட்டான் கண்ணன். மறுநாள் கோயிலுக்குச் சென்றான். அங்கே சன்னதியில் பாண்டுரங்கன் தன் மனைவி ரகுமாயியுடன் நின்றிருந்தார்.''பாண்டுரங்கா... நீ மட்டும் உன் மனைவியுடன் சந்தோஷமா இருக்கியே! என் மனைவி மட்டும் இப்படி இருக்கிறாளே! நியாயமா! ரகுமாயி தாயே! உன்னை கருணை மிக்கவள் என்கிறார்களே! நீயாச்சும் பாண்டு ரங்கனிடம் சொல்லக் கூடாதா'' என அழுதான். பின் மனதிற்குள், ''நான் ஒரு பைத்தியக்காரன்! தானாக பேசிக் கொண்டிருந்தால் என்ன நடக்கப் போகிறது'' என சொல்லி விட்டு புறப்பட்டான். அவன் போனதும் ரகுமாயி, ''சுவாமி! அவன் சொல்வது நியாயம் தானே! அவன் வரும் போது வீட்டில் மனைவி இருந்தால் தானே நல்லது'' என்றாள். சிரித்த பாண்டுரங்கன், '' இனி மேல் நடப்பதை கவனி'' என்றார். மறுநாள் ராதை கோயிலுக்கு கிளம்பினாள். செல்லும் வழியில் சூறைக் காற்றுடன் மழை வந்தது. மரக்கிளை ஒன்று ஒடிந்து ராதையின் மீது விழுந்தது. அப்போது அவ்வழியாக வந்த கண்ணன் தன் மனைவியை துாக்கி கொண்டு மருத்துவரிடம் ஓடினான். எலும்பு முறிந்ததால் மாவுக்கட்டு போட நேர்ந்தது. மூன்று வாரமாக மனைவியை கவனித்தான். அப்போது ராதையின் மனதிற்குள், ''இவரிடம் ஒரு நாளும் நான் அன்பு காட்டவில்லையே. இவரோ என்னை இப்படி கவனித்துக் கொள்கிறாரே! தப்பு பண்ணிட்டேனே'' என அழுதாள். பாண்டுரங்கனும், ரகுமாயியும் அவர்களுக்கு ஆசியளித்தனர்.