உள்ளூர் செய்திகள்

மானம் முக்கியம்

ஒரு கணவனும் மனைவியும் கயாவுக்குச் சென்று தர்ப்பணம் செய்யும் போது, அங்கிருந்த பண்டா (பூஜாரி), ''ஐயா, கயாவிற்கு வந்தால் விருப்பமானது எதையாவது விட்டுவிட வேண்டுமே... நீங்கள் எதை விட போகிறீர்கள்?'' என்று கேட்டார். கணவன் யோசித்துக் கொண்டே இருந்தார். பண்டா கேட்டார் ''கத்தரிக்காயை விட்டுடறீங்களா?'' ''எனக்கு அது ரொம்ப பிடிக்குமே..''''அப்ப, கேரட்?'' ''அது கண்ணுக்கு நல்லது. வைட்டமின் 'ஏ' நிறைய இருக்கே...'' ''சரி.... தக்காளியை விட்டுடறீங்களா?'' ''தக்காளி தான் விலை ரொம்ப குறைவு. அதுனால அதுவும் வேணும்...'' ''அப்ப, உருளைக்கிழங்கு?'' ''பூரிக்கு மசால் செய்ய வேணுமே...” சலிப்பான பண்டா, ''இப்ப எதைத் தான் விடப் போறீங்க?'' என்று கேட்டார். கணவன் யோசித்து,'காசு பணம் செலவில்லாதது அது ஒண்ணு தான்' என்று நினைத்துக் கொண்டே, ''நான் மானத்தை விட்டுடறேன் சாமி..'' என்றார். பண்டாவுக்கு மானம் என்றால் என்னவென்று தெரியாததால், அவர் சொன்ன படியே சொல்லி தர்ப்பணம் செய்து விட்டார். பின்னர், மனைவியிடம் கேட்டார், ''நீ எதையம்மா விடப் போகிறாய்?'' அவள் கணவனைப் பார்த்து முறைத்தபடி,''நான் இந்த ஆளையே விட்டுடறேன் சாமி” என்றாள். ''ஏம்மா...?'' ''மனுஷன்னா மானம் தான் முக்கியம் அதுவே இல்லாத ஒருத்தனோட எப்படி வாழ முடியும்?'' என்றாள்.மானத்தின் அவசியத்தை சொல்ல இந்த கதையை வாரியார் சொல்வதுண்டு.