உள்ளூர் செய்திகள்

கம்பராமாயணத்தில் பரதன்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய கம்பராமாயணம் படித்துப் படித்து இன்புற வேண்டிய இதிகாசம். இதில் ராமனே நாயகன் என்றாலும் அவரது தம்பி பரதனோ அவரையும் விஞ்சி நிற்கிறார் என்றே சொல்ல வேண்டும். அயோத்தி மன்னர் தசரதர் குழந்தைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பலனாக கோசலையின் மகனாக ராமர் அவதரித்தார். மற்ற மனைவியரான கைகேயிக்கு பரதனும், சுமத்ரைக்கு இலக்குவன், சத்ருக்கனன் பிறந்தனர். பின்னாளில் மூத்த மகனான ராமனுக்கு முடிசூட்ட நினைத்தார் தசரதர். ஆனால் விதியோ சதி செய்தது. கைகேயி பெற்ற வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டு காட்டுக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. பரதனோ நாட்டை ஆளும் கட்டாயத்திற்கு ஆளானார். இதையும் மகிழ்ச்சியுடன் ஏற்ற ராமர் தன் தாய் கோசலையிடம், ''உன் அன்பிற்குரிய மகன் பரதன் முடிசூடப் போகிறான்'' என்றார். நான்கு மகன்களிடமும் பாகுபாடு இன்றி அன்பு செலுத்தும் கோசலை என்ன சொன்னாள் தெரியுமா... ''மூத்தமகன் தான் முடிசூட்ட வேண்டும் என்ற முறை இருந்தாலும், பரதன் உன்னை விட மூன்று மடங்கு நிறை குணத்தவன். அவனே அரசாளட்டும், நீ அவனுக்கு உதவியாக பணியாற்று'' என்றாள். பிறகு ராமன், ''தாயே, மற்றொரு கட்டளையும் உண்டு. அதன்படி நான் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல வேண்டும்'' என்று சொன்ன போது தான் கோசலை துயருற்றாள்.சத்ருக்கனனுடன் கேகய நாட்டிற்குச் சென்றிருந்த பரதன் அயோத்திக்கு திரும்பினான். நடந்ததை அறிந்ததும் தன் தாயார் கைகேயி மீது கடும் கோபம் கொண்டான். பின் கோசலையிடம் சென்று அழுத போது அவள், ''பழமையான நம் குலத்தில் உன்னைப் போன்ற உயர்ந்தவர்கள் யாருமில்லை'' என பாராட்டினாள்.பின்னர் குலகுருவான வசிஷ்டர், ''பரதா! அரசை ஏற்று மக்களைக் காப்பது உன் கடமை'' என்றார். அதற்கு அவன், ''ராமனுக்கு உரிய நாட்டை நான் ஏற்பது தர்மம் ஆகாது'' என ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை. அவனது தன்னலமற்ற மனநிலையை உணர்ந்த வசிஷ்டர், ''அரச குலத்தில் பிறந்த இளவரசர்களில் உன்னைப் போல புகழ் உடையவர் யாருமில்லை. பதினான்கு உலகங்கள் அழிந்தாலும் வாழிய நின் புகழ்'' என வாழ்த்தினார். அதன் பிறகு எப்படியாவது அண்ணன் ராமனை சந்தித்து மன்னராக முடிசூட்ட வேண்டும் என நினைத்து ராமனைத் தேடி காட்டிற்குச் சென்றான் பரதன். கங்கைக் கரையில் படகோட்டி குகனை சந்தித்து விஷயத்தை கூறினான். அதற்கு அவன், ''ஆயிரம் ராமர் தோன்றினாலும், உன் ஒருவனுக்கு ஈடாக மாட்டார்கள்'' என பரதனை போற்றினான். பின்னர் தன் சகோதரர் ராமனை சந்தித்து அழுதான். ஆனால் அவரோ, ''தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவது தான் தர்மம். அதனால் அரசாட்சியை ஏற்க மாட்டேன்'' என மறுத்தார். வேறு வழியின்றி ராமனின் பாதுகைகளைப் பெற்று அவற்றை பக்தியுடன் தன் தலை மீது வைத்துக் கொண்டான் பரதன். ''நீங்கள் காட்டில் வாழும் பதினான்கு ஆண்டு காலம், உன் பிரதிநிதியாக இந்த பாதுகையே அரசாளும்'' என விடைபெற்றான். ஆனால் அயோத்திக்குள் நுழையாமல் நந்திக் கிராமத்திலேயே தங்கி ராமனையே நினைத்து அரசாட்சியை திறம்பட நடத்தினான். ராவண வதம் முடிந்து ராமர் நாட்டுக்கு திரும்பியதும் அவருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது அனுமன் தாங்கிய அரியணையில் சீதையுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தான் ராமன். வசிஷ்டர் முடி சூட, லட்சுமணனும், சத்ருக்கனும் கவரி வீசிட பரதன் வெண்கொற்றக் குடையைப் பிடித்து மகிழ்ந்தான். அப்பேற்பட்ட பாக்கியவான் பரதன்.முத்தையா சுப்பையா