பிடிசோறு போதும்
உலகின் செல்வந்தன் நானே என தற்பெருமை கொண்டான் குபேரன். அதை நிலைநாட்ட கைலாயம் சென்ற அவன், சிவபெருமானைத் தன் அரண்மனைக்கு விருந்துண்ண அழைத்தான். அவனது எண்ணம் அறிந்த சிவன் ''இப்போது என்னால் வர இயலாது. என் மூத்தபிள்ளை விநாயகரை உன்னுடன் அழைத்துச் செல். அவன் திருப்தி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே'' என்றார். விநாயகரும் குபேரனுடன் புறப்பட்டார். அங்கு இலையில் பரிமாறிய உணவை எல்லாம் விருப்பமுடன் சாப்பிட்டார். ஆனால் அவருக்கு வயிறு நிரம்பவில்லை. அரண்மனையில் உள்ளவர்களுக்காக இருந்த உணவும் கூட காலியானது. அப்போதும் பசி அடங்கவில்லை. இப்படியே போனால் எதுவும் மிஞ்சாது என்ற நிலையில் விநாயகர், ''என்னை திருப்திப்படுத்தினால் தான் என் தந்தை மகிழ்வேன் என்றாரே... ஆனால் எனக்கோ பசி தீர்ந்தபாடில்லை. அதனால் உன்னையே கொன்று தின்னப் போகிறேன்'' என துதிக்கையை நீட்டினார். பயத்தில் முகம் வெளிறிய குபேரன் கைலாயம் நோக்கி ஓடினான். சிவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவன் '' பயப்படாதே... உன் ஆணவத்தை கைவிட்டு கைப்பிடி சோறு கொடுத்தாலும் போதும். விநாயகரின் பசியடங்கி விடும்'' என்றார். தவறை உணர்ந்த குபேரன் கை குவித்து வணங்கினான். பணிவுடன் பிடி சோற்றை விநாயகருக்கு அளித்ததும் அவரது பசியடங்கியது.