தம்பிக்கு தங்க மனசு
அப்பாவி இளைஞனான நல்லதம்பி யார் எது சொன்னாலும் நம்பி விடுவான். ஒருநாள் குளக்கரையில் அவன் மாடுகள் மேய்த்த போது பெரியவர் ஒருவர் வந்தார். குளத்தில் நீராடிய பின் வெளியே வந்து மூக்கை பிடித்தபடி சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்து விட்டு புறப்பட்டார். இதைக் கவனித்த நல்லதம்பி, ''ஐயா...'' என ஓடினான். ''என்னப்பா...''''இப்போது என்ன செய்தீர்கள்?” ''பகவான் கிருஷ்ணரை தரிசித்துக் கொண்டிருந்தேன்”''உண்மையாகவா?'' ''ஆமாம் தம்பி'' எனச் சொல்லி விட்டு நடந்தார். அவர் சென்றதும் யோசித்த நல்லதம்பி, படபடவென குளத்தில் இறங்கி குளித்தான். பின் வெளியே வந்து மூக்கை பிடித்து கண் மூடி உட்கார்ந்தான். கிருஷ்ணர் கண்ணுக்குத் தெரியவில்லை.கண்ணை சரியாக மூடவில்லையோ என அழுத்தி மூடினான். அப்போதும் தெரியவில்லை. கிருஷ்ணரை பார்க்கும் வரை மூச்சை விடக் கூடாது என பிடிவாதமாக இருந்தான். மூச்சு திணறியது.''பக்தா...'' என்றொரு குரல் கேட்டது. கண் திறந்த அவன், ''நீ...நீ... நீங்கள் தான் கிருஷ்ணரா...” ''ஆம் பக்தா''''அந்தப் பெரியவருக்கும் நீங்கள்தான் காட்சி கொடுத்தீரா?''''இல்லை... அவர் பொய் சொன்னார்''''விளையாடாதீர்கள். உங்களை பார்த்ததாக சொன்னாரே...?'' என்ற படியே, ஒரு கயிறை எடுத்தான். கிருஷ்ணரை இழுத்து பிடித்து மரத்தில் கட்டினான். அவரும் சிரித்துக் கொண்டே, ''என்னப்பா செய்கிறாய்?'' ''நான் போய் அந்த பெரியவரை அழைத்து வருகிறேன்... அதுவரை காத்திருங்கள்'' என சொல்லி ஓட்டம் பிடித்தான். சென்று கொண்டிருந்த பெரியவரின் முன்னால் மூச்சிறைக்க நின்றான். ''என்னப்பா... என்னாச்சு...?''''ஐயா... என்னோடு வாருங்கள்''''எதுக்குப்பா...''''நான் கிருஷ்ணரை பார்த்தேன். ஆனால் அவர் உங்களுக்கு காட்சி தரவில்லை என்கிறார். எனக்கு குழப்பமாக உள்ளது'' பெரியவர் திருதிருவென விழித்தார். 'இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது' என நினைத்து வர மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தான். மரத்தைக் காட்டி, 'இவர் தானே நீங்கள் பார்த்த கிருஷ்ணர்...?'' என்றான்.''என்னப்பா உளறுகிறாய்... யாரும் தெரியவில்லையே?'' ''அதெப்படி, உங்க கண்ணுக்கு மட்டும் தெரியவில்லை'' என்றான்.பையனுக்கு முற்றி விட்டது என நினைத்த பெரியவர்,'' ஆமாம் தம்பி இவர் தான் நான் பார்த்த கிருஷ்ணர்'' என வெறுமனே கையைக் குவித்து வணங்கினார். ''ஐயா... நீங்களே என் குருநாதர்''என அவரின் காலில் விழுந்தான். அவரும் தலையசைத்து விட்டு நகர்ந்தார். இதையெல்லாம் பார்த்த கிருஷ்ணர் சிரித்தார்.''ஏன் சிரிக்கிறீர்கள்...?''''இப்போதும் அவர் என்னை பார்க்கவில்லை. உன்னிடம் பொய் சொல்லி விட்டு புறப்பட்டார்'' என்றார் கிருஷ்ணர். ஆனால் அவன் அப்போதும், ''பரவாயில்லை சுவாமி. பொய் சொன்னாலும். அவரால் தானே உங்களை பார்க்கும் பாக்கியம் பெற்றேன்'' அதை கேட்டு மகிழ்ந்த கிருஷ்ணர், ''உனக்கு என்ன வரம் வேண்டும்'' என்றார் ''என்னைப் போலவே, என் குருநாதருக்கும் காட்சியளிக்க வேண்டும்'' என்றான்.''ஆகட்டும்! பெயருக்கு ஏற்ப தங்கமனசு கொண்ட நீ நலமாக வாழ்வாய்'' என வரமளித்தார்.