சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 7
சந்திரசேகர ஆசாத்உத்தர பிரதேச மாநிலம் பதர்க்காவில் சீதாராம் திவாரி - ஜக்ராணி தேவி தம்பதிக்கு ஜூலை 23, 1906ல் பிறந்தவர் சந்திர சேகர ஆசாத். தந்தையாரின் பணிமாற்றல் காரணமாக இவர் மத்திய பிரதேசத்திலுள்ள ஜபுவா மாவட்டத்தில் தன் இளமைப் பருவத்தை செலவிட நேர்ந்தது. அங்கே பில் என்னும் பழங்குடி மக்களுடன் அவர் இயல்பாகப் பழகினார். அவர்களிடமிருந்து முறையாக வில்வித்தையைப் பயின்றார். காடுகளில் மரம், செடி, கொடிகளுக்கிடையே மறைந்திருந்து எதிரிகளைத் தாக்குவது, நேருக்கு நேர் போர் என்றால், அடுத்தடுத்து அம்பு தொடுத்து பகைவரை எப்படி ஓட ஓட விரட்டுவது என்றெல்லாம் துல்லியமாகத் தெரிந்து கொண்டார். இந்தப் பயிற்சி இவருக்கு இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரிதும் உதவியாக இருந்தது. அதற்கு முன்பாகவே தாயாரின் அறிவுரையால் உயர்ஜாதி மக்களுக்கானது என்று தவறாக சொல்லப்பட்ட சமஸ்கிருத மொழியைகாசியிலிருந்த வித்யா பீடத்தில் படித்தார். இதன் மூலம் நம் இதிகாசம், புராணங்களை புரிந்து கொள்ள முடியும் என்பது தாயாரின் எண்ணமாக இருந்தது. அதன்படியே படித்த அவர் ராமர், கிருஷ்ணரின் உயர்ந்த பண்புகளால் ஈர்க்கப்பட்டார். அதர்மத்துக்கு எதிராகப் போராடுவது என முடிவு செய்தார். காந்திஜியின் கோட்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த ஆசாத், ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 15 வயது! விசாரணையின் போது ஆங்கிலேய நீதிபதி, அவரது பெயர், தந்தையின் பெயர், முகவரி என்று விவரங்களைக் கேட்டபோது, கொஞ்சமும் அஞ்சாமல், 'விடுதலை', 'சுதந்திரம்', 'சிறை' என்று ஒற்றை வார்த்தையால் மூன்று கேள்விகளுக்கும் பதிலளித்து நீதிமன்றத்தையே அலற வைத்தார். ''உனக்கு சிறைத் தண்டனை விதிக்கிறேன்'' என்று நீதிபதி தீர்ப்பளிக்க, ''நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்று எதிர்பார்த்தே நான் அப்படி ஒரு பதிலைச் சொன்னேன்'' என்று ஆசாத் கூறினார். உடனே அனைவரும் சிரித்தனர். இதனால் கோபமுற்ற நீதிபதி, ''இப்போதே, இங்கேயே 15 பிரம்படி கொடுங்கள்'' என உத்தரவிட்டார். ஆனால் ஒவ்வொரு அடிக்கும் 'பாரத் மாதாகீ ஜே' என்று உரத்து ஒலியெழுப்பித் தன் வலியைப் பொறுத்துக் கொண்டார் ஆசாத். அடுத்தடுத்து எதிர்ப்புத் திட்டம் தீட்டுவதற்காகத்தான் ஜான்ஸி நகருக்கு அருகிலிருந்த அனுமன் கோயிலில் முகாம் அமைத்துக் கொண்டார். ஆனால் ககோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டதற்காக சக போராளிகளுடன் ஆசாத்தும் சிறைக்குச் சென்றார். பிப்.27, 1931 அன்று அலகாபாத் ஆல்பர்ட் பூங்காவில் தன் இயக்கத்தின் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த போது காவலர்கள் சுற்றி வளைத்தனர். உடனே நண்பர் சுக்தேவைத் தப்பியோடச் செய்துவிட்டு தான் தனியாளாக போலீசாருடன் போராடினார். கைத்துப்பாக்கியால் சுட்டு சில காவலர்களைக் காயப்படுத்தினார். ஆனால் காலில் குண்டடி பட்டதால் துவண்டு விழுந்தார். இவர்களிடம் பிடிபடக் கூடாது எனத் தீர்மானித்த ஆசாத் தன்னைத் தானே சுட்டு உயிர் நீத்தார். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ளது. அவர் உயிர் நீத்த ஆல்பிரட் பூங்கா இப்போது சந்திரசேகர ஆசாத் பூங்கா என அழைக்கப்படுகிறது. வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு இடது கையால் தன் வலது பக்க மீசையை முறுக்கியபடி கம்பீரமாகக் இங்கே இவரது சிலை வீரத்தின் சின்னமாக நிற்கிறது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லுாரிகள், பொதுநல அமைப்புகள் எல்லாம் உருவாயின. பல வீதிகள் இவருடைய பெயரைத் தாங்கி நிற்கின்றன. இவற்றோடு அவர் முகாம் அமைத்துக் கொண்ட தர்மபுரம் என்னும் இப்பகுதி 'ஆசாத்புரம்' என மாற்றப்பட்டு தியாகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. -தொடரும்பிரபு சங்கர்72999 68695