உள்ளூர் செய்திகள்

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 25

லாலா லஜபதி ராய்சிறு குழந்தையாகத் தன் தாயாரிடம் ஆன்மிகப் பயிற்சி பெற்ற போதே லாலா லஜபதி ராயின் மனசுக்குள் ஓர் எண்ணம் குறுகுறுத்தது. ''அம்மா, நீங்கள் சொல்லிக் கொடுத்த ஸ்லோகத்தை என் தோழர்கள் முன் சொன்ன போது அதிசயமாகப் பார்த்தனர். ஆனால் அவர்கள் ஏன் ஸ்லோகம் சொல்வதில்லை?'' எனக் கேட்டார். அந்தக் கால மூட சம்பிரதாயத்தை அறிந்தாலும், வெளிக்காட்ட துணிவில்லாமல் தாய், ''சொல்லிக் கொடுத்தால் அவர்களும் சொல்வார்களே ?'' என பூடகமாக சொன்னார். அதன் அர்த்தம் அப்போதைக்கு புரியாவிட்டாலும், பின்னாளில் தன் தோழர்களும் அந்த வாய்ப்பை அடைய வேண்டும் என விரும்பினார் லஜபதி. அவர் மனசுக்குள் தோன்றிய இந்தச் சிறு பொறி, விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட போது ஜுவாலையாக வளர்ந்தது. ஆன்மிக உணர்வு இருப்பவரிடம் தான் தேசப்பற்றும் இருக்கும் என்பதை பூரணமாக நம்பினார். ஆன்மிக பயிற்சி மறுக்கப்பட்டவர்கள், அதற்கு பழி வாங்கும் எண்ணத்திலேயே தேசியத்திலும் அக்கறையின்றி இருக்கிறார்களோ என்றும் யோசித்தார். அதன் விளைவாக, வேதம் முதலான மந்திரங்கள் அனைவருக்கும் பொது, அதைக் கற்பதற்கோ, அதை உணர்ந்து ஓதுவதற்கோ ஜாதி தடை இல்லை என நினைத்து, ஆன்மிகப் பாதையில் இந்தியர்கள் அனைவரையும் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார்.'பஞ்சாப் கேசரி (சிங்கம்)' என அழைக்கப்பட்ட லஜபதி ராய், 1865 ஜன.28, 1865ல் முன்ஷி ராதா கிரிஷன் அகர்வால், குலாப் தேவி தம்பதிக்கு, பஞ்சாப் மாநிலம் லுாதியானா மாவட்டம் ஜாக்ரான் கிராமத்தில் பிறந்தார். இவர் தமது கட்டுரைகளால் மதம், இந்திய ஆன்மிகக் கொள்கைகளை சீர்திருத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். 'நம் மக்களை நாமே பாதுகாக்காமல், சம்பந்தம் இல்லாத இன்னொருவர் அந்தப் பொறுப்பை மேற்கொள்ள அனுமதிப்பது தேசிய அவமானம் எனக் கருதினார். ஆங்கிலேயர் உருவாக்கிய மிஷினரி எனப்படும் மக்கள் நல அமைப்புகள், இந்த வகையிலும் இந்திய மக்களை அடிமைப்படுத்துவதைக் கண்டு மனம் வெதும்பினார். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் முதலான அடிப்படைத் தேவைகளை அவை அளிக்கின்றன என்றாலும், அவற்றுக்கு ஈடாக, ஆங்கிலேயர் தங்களுடைய அரசியல், ஆன்மிக சட்டதிட்டங்களுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்ற பிரதிபலனை எதிர்பார்ப்பதையும் அவர் அறிந்தார். 'நமக்கு நாமே' என்பது போல, நம் மக்களை நாமே பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 1894ல் ஹிந்து ஆதரவற்றோர் நிவாரண இயக்கத்தை லஜபதி ராய் ஆரம்பித்தார். 1877ல், ஹிந்து மத சீர்திருத்தத்தில் பெரிதும் ஈடுபட்ட தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் சொற்பொழிவு இவரைப் பெரிதும் ஈர்த்தது. அதனால் ஆர்ய சமாஜம் இயக்கத்தில் உறுப்பினர் ஆனார். 'ஆர்யா கெஜட்' என்ற பத்திரிகையின் நிறுவனர், ஆசிரியராக இவர் ஆனதும் அதன் விளைவே! அதோடு ஆங்கிலேயர் கல்வி நிறுவனங்களுக்கு சவாலாக, லாகூரில் தேசியக் கல்லுாரி ஒன்றையும் நிறுவினார். இங்கு பட்டம் பெற்றவர்களில் பகத்சிங்கும் ஒருவர்.இது ஒரு பக்கம் இருக்க, கூடவே இந்திய அடிமைத்தளையை உடைத்தெறியும் முயற்சியையும் மேற்கொண்டார். கட்டுரைகள், சொற்பொழிவுகள், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை நடவடிக்கைகளால் இந்தியா எங்கும் இளைஞர்களை தேசிய உணர்வு கொள்ள வைத்தார். ஹிந்து மத சம்பிரதாயங்களில் ஊறிப் போனதால் வன்முறையற்ற போராட்டங்களில் ஈடுபட விரும்பினார். இந்திய அரசியல் கொள்கைகளை வடிவமைக்கும் வகையில் 'தி ட்ரிப்யூன்' பத்திரிகையில் கட்டுரை எழுதி ஆங்கிலேயரைக் கலங்கடித்தார். வழக்கறிஞரான லஜபதி ராய் 1914ல் அந்தத் தொழிலில் இருந்து விலகி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்தார். 'மக்கள் சமூகத்தின் சேவகர்கள்' (ஸர்வன்ட்ஸ் ஆப் பீபிள் சொசைட்டி) என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு இந்தியா முழுவதிலும் கிளைகள் தோன்றச் செய்தார். இது லாப நோக்கமற்ற, பொதுநலனுக்காகப் பாடுபடும் இயக்கமாகும். இதன் மூலம் அனைத்து மக்களையும், இந்திய சுதந்திரம் என்ற இலக்கு நோக்கிப் பயணிக்கும் வகையில் அவர்களைத் தயார்படுத்த முனைந்தார். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பஞ்சாபில் ஆங்கிலேயர் எதிர்ப்புக் கிளர்ச்சியில் பங்கேற்ற இவரை கைது செய்து, மாண்டலே சிறைச்சாலைக்கு அனுப்பியது. ஆனால் அவர் மீதான 'குற்றம்' நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.சிறையில் இருந்து மீண்ட பிறகு, இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் இந்தியாவின் உண்மை நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கு அடிமைகளாக இந்தியர்கள் படும் வேதனைகளையும், ஆங்கிலேயர்களின் அராஜகத்தையும் விளக்கிச் சொன்னார். குறிப்பாக அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்த சீக்கிய சமூகத்தவர்களையும், அலபாமா டஸ்கேகி பல்கலைக் கழக மாணவர்களையும், பிலிப்பைன்சில் உள்ள தொழிலாளர்களையும் சந்தித்து இந்திய நிலைமையை விவரித்தார். அதோடு அமெரிக்க காங்கிரஸ் செனட் வெளியுறவுக் குழுவினரிடம், ஆங்கிலேயரின் கொடுமையில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, உலக நாடுகள் அனைவரிடமிருந்தும் தார்மிக உதவியைக் கோரினார். ஆனால், நேரடியாக எந்த வன்முறைப் போராட்டத்திலும் ஈடுபடாத அவரை எப்படி கைது செய்வது என புரியாமல் குழம்பித் தவித்தது ஆங்கிலேய அரசு. 'பாம்பு என அடிக்கவும் முடியவில்லை; பழுது என தாண்டிப் போகவும் முடியவில்லை' என்பார்களே அதுபோல தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர் ஆட்சியாளர்கள். ஆனால் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது வெளிநாடுகளுக்கு லஜபதி ராய் சென்ற சமயத்தில் முதல் உலகப் போர் மூண்டது. அதனால் வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் நாடு திரும்பக் கூடாது என தடை விதித்தனர். அத்துடன் லஜபதி ராயை தீவிரவாதி என்றும் அறிவித்தனர். போர் அபாய நிலை சற்று சீரானதும் தாயகம் திரும்பிய லஜபதி ராய், 1928ல் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட போராளிகளுக்குத் தலைமை தாங்கி, 'சைமன் கமிஷனை' எதிர்த்தார். இந்திய அரசியல் நிலைமையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது அந்தக் குழுவின் பொறுப்பு. ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட அந்தக் குழு எத்தகைய அறிக்கையை சமர்ப்பிக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்தது ஒன்று தான்! ஆகவே அதில் நடுநிலைமை இருக்காது என்ற அவநம்பிக்கையில் இந்தியர்கள் எதிர்ப்பு காட்டியதும் சரிதானே? 'சைமன் கோ பேக்' என்ற முழக்கத்துடன், வன்முறையற்ற பேரணிக்குத் தலைமை தாங்கினார் லஜபதி ராய். நல்ல வாய்ப்பை நழுவ விடுமா கொடுங்கோல் அரசு? உடனே போராளிகள் மீது காவலர்கள் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். லஜபதி ராய் படுகாயம் அடைந்தார். ஆனாலும் எல்லா அடிகளையும் தாங்கிக் கொண்டு, ஓரளவு தற்காத்துக் கொள்ள முயன்றாரே தவிர, திருப்பித் தாக்கவில்லை. ஆனால், ''என் மீது விழும் ஒவ்வொரு அடியும், இந்த ஆங்கிலேயர் ஆட்சியின் சவப் பெட்டியில் அடிக்கப்படும் ஆணிகள்'' எனக் கோஷமிட்டார் அவர். அத்தனை ஆண்டுகள் காத்திருந்து காட்டிய பயங்கர தாக்குதல் என்பதால் காயங்கள் குணமாகாமலேயே நவம்பர் 17, 1928ல் பாரதத் தாயின் திருவடியை அடைந்தார். அவர் மரணத்துக்குத் தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லை என ஆங்கிலேய அரசு வழக்கை முடித்தாலும் சம்பவத்தை உடனிருந்து பார்த்த பகத் சிங், வேதனையுடன் 'இதற்கு காரணமாக இருந்த அதிகாரியைக் கொல்வேன்' என சபதம் செய்தார். -அடுத்த வாரம்: மதுரை வைத்தியநாத ஐயர்பிரபு சங்கர்72999 68695