சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 30
பத்மாசனி அம்மையார்சுய பொருளாதாரத்தை உயர்த்துவது ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான நடவடிக்கை என்பதில் நம்பிக்கை வைத்திருந்த ஒரு பெண் மதுரை பத்மாசனி அம்மையார். அதற்கான அப்போதைய ஒரே வாய்ப்பு, கதராடை உற்பத்தியைப் பெருக்குவதுதான். ஆகவே பத்மாசனி கதராடை பிரசாரத்திலும், உற்பத்தியிலும், விற்பனையிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதன் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு நஷ்டத்தை உருவாக்க முடியும் என தீர்மானித்தார். மதுரை சோழவந்தானில் 1897ல் பிறந்தவர் இவர். தந்தையார் ஸ்ரீவில்லிபுத்துார் சுந்தர்ராஜ ஐயங்கார்.கல்வியறிவு மேம்பட தந்தையார் உதவ, தன் ஆறாம் வயதில் ஊரே அதிசயமாகப் பார்க்க, பள்ளிக்கூடம் சென்றார் பத்மாசனி. இதனால் பாரதியாரின் பாடல்களை மனப்பாடம் செய்து, தெருவெங்கும் உற்சாகமாகப் பாடி தேசியத்தை வளர்த்தார். ஒரு இளம் பெண் இவ்வாறு விடுதலை ஆர்வம் கொண்டு தொண்டாற்றுவதைக் கண்ட பெண்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். மதுரை தமிழ் பண்டிதர் ஸ்ரீநிவாச வரதனை மணாளனாக அடைந்தார். குடும்பத்தாரும், வம்பு குணம் கொண்ட சுற்றத்தாரும் பத்மாசனியின் தேசிய விடுதலை செயல்பாடுகளை கேலி பேசினாலும், அதற்காக வருத்தப்படாமல், மனைவியை இலக்கு நோக்கிப் பயணிக்க வழித்துணை யாக அமைந்தார் கணவர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதோடு, போராளிகளுக்குத் தலைமை யேற்று பாரதியாரின் விடுதலைப் பாடல்களை பாடிச் சென்ற கணவரை, ஆங்கிலேயர் கைது செய்து சிறையிட்டபோது, இன்முகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தார் பத்மாசனி அம்மையார். அதே சமயம், கணவரின் பொறுப்புகளைத் தான் மேற்கொண்டார். கணவர் விடுதலையாகி வரும் வரை நகை அணியாமல் விரதம் இருந்தார். சாப்பாடும் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான். இதற்குக்கூட தான் சம்பாதித்த வருமானத்தில் இருந்தே செலவும் செய்தார். என்ன வருமானம்?குடும்ப பொருளாதாரம் பலமாக இருந்தாலும், கதர் ஆடை தயாரிப்பு மூலம் பொருளீட்டி, அதையே சாப்பாட்டுக்கு செலவு செய்தார். வீடு வீடாகப் போய் கதராடைகளை விற்று வருவார். அவ்வாறு விற்கும்போதே, தேசிய உணர்வைப் பரப்புவார். அதோடு கணவர் துவக்கிய 'பாரத ஆசிரமத்தை' வெகு சிறப்பாக நடத்தினார். இந்த ஆசிரமம், பத்மாசனி அம்மையாருக்குச் சொந்தமான, மூணாம்பட்டி என்ற இடத்தில் 10 ஏக்கர் பரப்பில் அமைந்திருந்தது. இதன் மூலம் இந்திய விடுதலையில் பேரார்வம் கொண்டிருந்தவர்களின் மனக் கனலை, தீப்பிழம்பாக மாற்றினார். மகாகவி பாரதியாருக்கு தேவையான போதெல்லாம் நிதி உதவி செய்தவர் ஸ்ரீநிவாச வரதன்.கணவரின் விடுதலைக்குப் பிறகு இத்தம்பதி, மிகுந்த ஈடுபாட்டுடன் விடுதலைக்கான பணிகளில் உறுதியுடன் ஈடுபட்டனர். இவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து, அவையும் ஓராண்டுக்குள் இறந்தன. ஆனாலும் வேதனையில் ஆழ்ந்து விடவில்லை. கதராடை உற்பத்தி, தேசிய உணர்வு பொங்கும் சொற்பொழிவு என தீவிரமாக செயல்பட்டார். ஒரு தாய்க்கு ஏற்படக்கூடாத சோகம் பத்மாசனியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து உண்டாயிற்று. ஆமாம், மூன்றாம் முறையாக கருத்தரித்திருந்த போது கதர் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே பெண் என பார்க்காமல் காவலர்கள் அவரை அடித்து துன்புறுத்தியதில் கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து தியாகி சுப்ரமணிய சிவாவின் தலைமையில் காவிரிக் கரையோரமாக ஆங்கிலேய எதிர்ப்பு ஊர்வலத்தில் ஆவேசமாக கோஷமிட்டபடி சென்றார். அப்போது நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு, வழியில் பாப்பரப்பட்டி என்ற ஊரில் குழந்தை பிறந்தது; ஆனால் அதுவும் அப்போதே இறந்தது!சிறந்த பேச்சாளராக உருவான பத்மாசனி அம்மையார், 1857 முதல் ஆங்கிலேய அரசுக்கு எதிராக களம் இறங்கிய புரட்சி வீரர்களின் சரித்திரங்களை மனமுருகச் சொல்லி, கேட்போரை கண்ணீர் சிந்த வைப்பார். அவ்வாறு சிந்தும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரிலும் பாரதத் தாயை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மக்களிடையே சுடர் விட்டது. இந்த தொடர்பு மூலம் 500 பெண்களை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஆக்கினார்.திருமதி டி.வி.எஸ். சவுந்தரம் அம்மையார், '1857 - இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு' என்ற வீர சாவர்க்கரால் எழுதப்பட்ட ஆங்கில நுாலை தமிழில் மொழி பெயர்த்தவர். பாண்டிச்சேரியில் இருந்து (அங்கே அப்போது பிரெஞ்சு ஆதிக்கம் என்பதால், புத்தகத்திற்குத் தடை இல்லை) மதுரைக்குக் கொண்டு வந்து தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். இந்தப் புத்தகப் பிரதிகளை வாங்கி ரகசியமாக, சுதந்திர வேட்கை கொண்டவர்களிடையே பத்மாசனி அம்மையார் விநியோகித்தார். அதைப் படித்தவர்கள் உண்மையான தேசிய விடுதலைப் போராட்டங்களைப் புரிந்து கொண்டு, தம்மைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி, நுாற்றுக்கணக்கான புதுப்புது போராளிகளை உருவாக்கினர். அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தபடி, கொடுங்கோலனாக விளங்கிய நீல் என்பவனுக்கு சென்னையில் அங்கீகார சிலை வைக்கப்பட்டிருப்பதை அறிந்த பல பெண்கள் நேரே சென்னைக்குச் சென்று அந்தச் சிலையை உடைத்து ஆத்திரத்தைத் தீர்க்க விரும்பினர். இந்த நடவடிக்கையும் ஆங்கிலேயருக்கான எதிர்ப்புதான் என்பதை உணர்த்த பத்மாசனி, ராமநாதபுரம் முகமது சாலியா மற்றும் திருநெல்வேலி சுப்பராயலு நாயுடுவின் தலைமையில் போராளிகளை அனுப்பத் திட்டமிட்டார். அவர்களின் செலவுக்காக தன் நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்தனுப்பினார். அது மட்டுமல்ல உளி, கோடாரி, ஏணி, தேசியக் கொடியை கொடுத்தார்.இந்த சிலை உடைப்புப் போராட்டத்தில் தான் அஞ்சலை அம்மையார், அவரது கணவர், மகள் அம்மாக்கண்ணு ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். 1924ல் கதர் தயாரிப்பை மேம்படுத்தி, விரிவுபடுத்தும் எண்ணத்துடன் 'சகோதரிகள் சங்கம்' என்ற அமைப்பை பத்மாசனி அம்மையார் உருவாக்கினார். இவருடன் தாயம்மாள், திருமதி ஜோசப், திருமதி சுந்தரம் ஐயங்கார், சுப்புலட்சுமி அம்மையார், டிவிஎஸ். சவுந்தரம் ஆகியோரும் இணைந்தனர். இச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை தோறும் முப்பது பெண்கள் ராட்டையில் நுால் நுாற்றுக் குவிப்பார்கள். இவர்களுக்காக பஞ்சு, ராட்டைகளை தேசிய பள்ளிக்கூடம் வழங்கியது. அவ்வாறு வரும் பெண்களுக்குக் கல்வியும், தேசியமும் போதிக்கப்பட்டன. இந்த சேவையை தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சை முத்து அம்மையார் ஆகியோர் மேற்கொண்டனர். அதிகளவில் கதராடை தயாரித்தவர்கள் என இந்தக் குழு பெயர் பெற்றது. இதனால் பல தமிழர்களின் அந்நிய துணி மோகத்தை அழிக்க முடிந்தது. இந்த வகையில் ஆங்கிலேய அரசுக்கு வருமானத்தை ஓரளவு குறைக்கவும் முடிந்தது.இப்படி பிரபலமான பத்மாசனி அம்மையார், கர்நாடக மாநிலம் பெல்காமில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக உரையாற்றினார். அதோடு மக்களிடையே பாரபட்சம் காட்டிய அநாகரிகத்துக்கு எதிராக போராடினார். அதை நிலைநாட்ட மானாமதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரத்யேக பள்ளியை உருவாக்கினார். பெண் என்ற அளவில் அடுத்தடுத்து குழந்தைகள் இறந்ததையும் மறந்து விடுதலைக்காக பாடுபட்ட பத்மாசனி அம்மையார், 1936ல் இந்திய சுதந்திரத்தைக் காணாமலேயே உடல்நலக் குறைவால் காலமானார். - அடுத்த இதழில்: தீரர் சத்தியமூர்த்திபிரபு சங்கர்72999 68695