உள்ளூர் செய்திகள்

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 32

தீரர் சத்தியமூர்த்திநாட்டையே ஆக்கிரமித்து நம் வளங்களிலேயே சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு அடிமை போல நடத்திய ஆங்கிலேயர் மீது சினம் கொண்டார் சத்தியமூர்த்தி. குறிப்பாக ஒரே அலுவலகத்தில் ஒரே மாதிரியாக பணிபுரிபவர்களில் வெள்ளையர் என்றால் அதிக சம்பளம், கூடுதல் வசதிகள். ஆனால் இந்தியர் என்றால் குறைந்த சம்பளம், வசதிக் குறைவு என நிலவியதைக் கண்டு மனம் வெதும்பினர். இந்த நிறவெறியை அவர் பொதுக் கூட்டத்தில் பகிரங்கப்படுத்தினார். இதனால் அடங்கிக் கிடந்த அப்பாவிகள் பலர் வீறு கொண்டு எழுந்தனர். அவர்களுடைய மனமாற்றம், தம்மைத் தான் பாதிக்கும் என அஞ்சிய ஆட்சியாளர்கள் சத்திய மூர்த்தியை சிறையிலிட்டனர். 1919ல் ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியாவில் நடத்திய ஜாலியன் வாலாபாக், பஞ்சாப் படுகொலை போன்ற கொடுங்கோல் சம்பவம் மீதான விசாரணையில், ஆங்கிலேயருக்கு எதிராக சாட்சியம் கூற இந்தியக் குழு ஒன்று இங்கிலாந்து சென்றது. அதில் சத்தியமூர்த்தி அங்கம் வகித்தார். அங்கு அவர்களை மிகுந்த ஆவேசத்துடன் விமர்சித்தார். ஆறு மாத காலம் அங்கு தங்கி பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு இந்தியாவில் நடக்கும் ஆங்கிலேய அட்டூழியங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கினார். இது போன்ற ஒரு கூட்டத்தில் ஆங்கிலேயர் ஒருவர், ''உங்கள் நாட்டில் சமூகக் கலவரம் நடக்கிறதாமே?'' என பொடி வைத்துக் கேட்டார். ''சரி, இருக்கட்டும். அதனால் உங்களுக்கென்ன?'' என திருப்பிக் கேட்டார் சத்தியமூர்த்தி. ''கவலைப்படாமல் எப்படி இருப்பது? பிரிட்டிஷ் அரசு அங்கிருந்து வந்துவிட்டால், உங்கள் நாட்டை யார் காப்பாற்றுவார்கள்?''''காப்பாற்றுகிறீர்களா? அத்தனை சமூகக் கலவரங்களுக்கும் மூலகாரணம் நீங்கள்தானே? எங்களுக்குள் சண்டை மூட்டி அதில் குளிர் காய்பவர்தானே நீங்கள்? எங்கள் நாட்டை விட்டு வெளியேறினால் குழப்பம் மறையும். எங்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிம்மதியாக வாழ்வோம்'' என ஆணித்தரமாக பதிலளித்தார் சத்தியமூர்த்தி. இது போன்ற உறுதியான பேச்சால், இந்தியர் மீது அங்கிருந்த ஆங்கிலேயர்களுக்கு அனுதாபம் பிறந்தது. பிரிட்டிஷ் அரசின் அராஜகம் புரிந்தது.விடுதலைப் போராட்டக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக சித்தரஞ்சன் தாஸ் தமிழகம் வந்த போது அவரின் ஆங்கில சொற்பொழிவை எளிமையாக தமிழாக்கம் செய்து மக்களுக்குப் புரிய வைத்தார். ஜாதி தவிர மொழியும் ஒரு பிரச்னையாக இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயர், இப்படி தெளிவாகப் புரிய வைத்த அவர் மீது மேலும் கோபம் கொண்டனர். பொதுவாக ஆங்கிலேய அரசை அசைத்துப் பார்க்க வேண்டுமென்றால், அரசியல் ரீதியாக முயற்சிப்பது சிறந்தது என்ற எண்ணம் கொண்டவர் சத்தியமூர்த்தி. அதனால் கட்சி மூலம் மக்கள் வாக்கெடுப்பால் பதவியில் அமர்ந்து பிரிட்டிஷாருக்கு சவாலாக விளங்க வேண்டும் என தீர்மானித்தார். ஆங்கிலேய அரசும், தேர்தல் மூலமாக சட்ட மன்றத்துக்கு இந்திய பிரதிநிதிகளுக்கு இடம் கொடுத்தது. மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கச் செய்து, பிறகு ஏதேனும் ஆசை காட்டி அவர்களை விலைக்கு வாங்கலாம் என்ற குதர்க்க எண்ணமும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு சட்ட மன்றத்தில் இடம் பெற்ற பிரதிநிதிகளில் பலர், அரசு மூலமாக சேவை ஆற்ற வல்லவர்களாக இருந்தனர். இது ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியின்றி சில அம்சங்களை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர். 1923 முதல் 1943வரை சட்ட மன்றத்தில் உயர் பொறுப்பு வகித்த சத்தியமூர்த்தி ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மன்றத்தில் அராஜக அடக்குமுறையை எதிர்த்தும் இவர் எழுப்பிய கேள்விக் கணைகளின் கூர் முனைகளால் அவர்கள் பெரிதும் தாக்குண்டனர். பாரதியார் பாடல்களைப் போலவே ஆங்கிலேயருக்கு எதிராக 'வீர சிவாஜி' போன்ற நாடகங்களை நடத்தி அனல் கக்கும் வசனங்களைப் பேசிய தியாகி சுப்ரமணிய சிவாவை கைது செய்து வழக்கு தொடர்ந்த போது வாதத் திறமையால் மீட்டவர் சத்தியமூர்த்தி. 1931ல் சென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு முன்பிருந்த மைதானத்தில் இந்தியக் கொடியை ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரையும் உடன் வந்த 200 தொண்டர்களையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியது அரசு.இதன் எதிரொலியாகத்தான் இன்றளவும் சிதம்பரம் கோயிலில் சுதந்திரத்தன்று தேசியக் கொடி பூஜிக்கப்பட்டு கோபுரத்தின் மீது ஏற்றப்படுகிறது என்கிறார்கள். இதையடுத்து 'அந்நிய துணி நிராகரிப்பு' இயக்கத்திலும் ஈடுபட்டு 6 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றவர் சத்தியமூர்த்தி. சிறையில் இருந்த காலத்திலும் இவர் சும்மா இல்லை. சக கைதிகளுக்காக ராமாயண சொற்பொழிவு நடத்தினார். இந்திய விடுதலையின் அவசியத்தை சாமர்த்தியமாக ராமாயண சம்பவங்கள் மூலமாக குறிப்பாக உணர்த்தினார். சக கைதிகள் பலர் கதைகளின் சுவையோடு ஆழ்மனதில் சுதந்திர வேட்கை தீவிரமடைவதை உணர்ந்தனர். சத்தியமூர்த்தியின் மிகச் சிறப்பான கண்டுபிடிப்பாக கர்மவீரர் என போற்றப்பட்ட காமராஜரைச் சொல்லலாம். மதுரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இருவரும் அறிமுகமாயினர். காங்கிரஸ் கட்சியில் காமராஜரின் போற்றத்தக்க தொண்டு, தேச அபிமானம், எளிமை, மக்கள் நலனை சிந்திக்கும் பண்பு ஆகியவற்றை உணர்ந்து அவருடன் நெருக்கம் கொண்டார் சத்தியமூர்த்தி. இவரை அரசியல் குருவாக ஏற்றார் காமராஜர்.சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பேற்ற சத்தியமூர்த்தி, 1939ல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தினமும் மக்கள் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்து வைத்தார். நல்ல சாலைகள், பிரகாசமான தெரு விளக்குகள், சுகாதாரப் பணிகள் என மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். இதில் குறிப்பிடத்தக்கது சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட போது, இவர் உருவாக்கிய ஏரிதான். சென்னைக்கு அருகிலுள்ள பூண்டியில் ஓடும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டி பிரமாண்ட நீர்த்தேக்கத்துக்கு திட்டமிட்டு, ஆங்கிலேய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தார். ஒரு ஆண்டே வகிக்கக் கூடியதுதான் மேயர் பதவி. அதற்குள்ளாக திட்டம் நிறைவேற்றப்பட வில்லை என்றால், அடுத்த மேயர் அதைத் துாக்கிப் பரணில் போட்டு விடும் ஆபத்தும் இருந்தது. ஆனால் பலவித விவாதங்களின் முடிவில் எட்டு மாதத்திற்குள் நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் 1944ல் அந்த ஏரி பயன்பாட்டுக்கு வந்தபோது அதைக் காண முடியாதபடி சத்தியமூர்த்தி 56வது வயதில் காலமானார். இன்றைய சென்னை நகரின் குடிநீர் தேவையைத் தீர்த்து வைக்க நகரில் முதலில் உருவானது இந்த ஏரி. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1948 ஜனவரியில் அந்த ஏரிக்கு, 'சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம்' என பெயரிட்டவர், அவரை அரசியல் குருவாக ஏற்ற கர்மவீரர் காமராஜர்தான். ஏற்கனவே 1940ல் சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டதாலும், 1942ல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதாலும் சிறை தண்டனை அனுபவித்தவர் சத்தியமூர்த்தி. இவ்வாறு அடுத்தடுத்து தொடர்ந்த சிறைவாசத்தால் முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டு, உடல் நலம் குன்றி, அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணம் பெறாமல் உயிர் நீத்தார்.1963ல் ஜனவரி 14ல் சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கு முன் சத்தியமூர்த்தியின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சிலையை உருவாக்கியவர் யார் தெரியுமா? சென்னை கோட்டையில் இந்தியக் கொடியைப் பறக்க விட்டாரே, அதே ஆர்யா என்ற பாஷ்யம் ஐயங்கார்தான்!-முற்றும்பிரபு சங்கர்72999 68695இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.