உயிர் உள்ளவரைக்கும் தான்!
ஒருமுறை பக்தர்கள் பின்தொடர காஞ்சி மகாசுவாமிகள் தெருவில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒருவர் பலுான் விற்றபடி நின்றார். எதிரில் ஒரு பெண் குழந்தை கையைப் பிடித்தபடியே வந்தாள். வண்ணங்களில் பறந்த பலுானைக் கண்டதும் குழந்தை குஷியானது. கைகொட்டிச் சிரித்தது. ''அம்மா! எனக்கு பலுான் வாங்கித் தா'' என மழலைக்குரலில் அடம் பிடித்தது. 'சும்மா இருக்க மாட்டியா?' என அதட்டிய அவளுக்கு வாங்கித் தர இஷ்டமில்லை. குழந்தை அழத் தொடங்கியது. அந்த பெண்ணிடம், ''குழந்தை ஆசைப்பட்டுக் கேட்கறது! ஒன்னை வாங்கிக் கொடேன்!' என சிபாரிசு செய்தார் மகாசுவாமிகள். தனக்கு ஆதரவாகப் பேசுவதைக் கேட்ட குழந்தைக்கு சந்தோஷம். சுவாமிகள் சொன்னதும் காசு கொடுத்தாள் அவள். வியாபாரியும் பலுானைக் குழந்தையின் கையில் கொடுத்தார். பலுான் காற்றில் பறப்பதைக் கண்டதும் குழந்தை மனம் சிறகடித்தது. ஒரே உல்லாசம்... உற்சாகம்.... கொண்டாட்டம் தான்! குழந்தையைப் பார்த்து வாய் மலர்ந்து சிரித்தார் மகாசுவாமிகள். பின்னர் பக்தர்களுக்கு உபதேசித்தார். ''இதோ இந்தக் குழந்தையின் சந்தோஷம் எல்லாம் கொஞ்ச நேரம் தான். அதாவது பலுானில் காற்று உள்ள வரைக்கும் தான்! காற்று போய் விட்டால் அவ்வளவு தான். குழந்தை அழத் தொடங்கி விடும். எப்படி சந்தோஷமாக இருக்கிறதோ அதே மாதிரி பலுானில் காற்றுப் போனதும் துக்கப்படும். அந்த பலுான் மாதிரித் தான் நம் உடம்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உடம்பை வைத்து எப்படி நாம் கூத்தடிக்கிறோம். எல்லா விளையாட்டும் விளையாடுகிறோம். அதெல்லாம் மூச்சு உள்ள வரைக்கும் தான். அது போனால் நம்மால் ஒன்றும் முடியாது. ஒரே துக்கம் தான். அதனால் தான் சித்தர்கள் நிலை இல்லாத இந்த வாழ்வை உணர்ந்து 'காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று!' பாடினர். வாழ்வின் நிலையாமை தத்துவத்தை மகாசுவாமிகள் சுட்டிக் காட்டிய நிகழ்ச்சி இது. காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comதிருப்பூர் கிருஷ்ணன்