உள்ளூர் செய்திகள்

கால் பதிப்பான் கண்ணன் (10)

''கண்ணன்... இந்தச் சொல் ஓர் அமுதம். யாரெல்லாம் அன்புடன் அழைக்கிறார்களோ, அங்கெல்லாம் ஓடிச் சென்று அருள்வதில் மன்னன் அவன். அன்பால் உருக, எண்ணம் எல்லாம் அவனாகவே ஆகிட வேண்டும். பக்தனான எனக்கு என்ன வேண்டும் என்பது உனக்கு தெரியும். ஆகையால் அதனை உன் பொறுப்பிலேயே விட்டு விடுகிறேன். எனக்கு வேண்டியதெல்லாம் உன் மீது இடையறாத அன்பு... உன் நாமம் சொல்லும் போது உருகும் மனம்... கண்களில் பெருகும் கண்ணீர்... இவைகளே வேண்டும் என்பர் ஞானம் உடையோர்'' என்கிறார் பாரதியார். இன்று கோயில்களில் பெருங்கூட்டம். ஆயிரக்கணக்கான தலைகள் அலைமோதுகின்றன. இந்த சுவாமியைக் கும்பிட்டால் எல்லாம் கிடைக்கும் என சொன்னால் போதும்... உடனே ஓடுகிறோம்.கடவுள் என்ன டிபார்ட்மென்டல் ஸ்டோரா நடத்துகிறார்? இது வேண்டும்... அது வேண்டும்... என்று இடையறாது கேட்டுக் கொண்டேயிருக்க...? கேட்ட வரம் கிடைக்காவிட்டால் வேறு கோயிலையோ, கடவுளையோ நாடுகிறோம். பிறக்கும் முன்னரே நமக்காக தாய்ப்பாலைச் சுரக்கச் செய்த கடவுள் நமக்காக என்ன தான் செய்ய மாட்டார்? என்பார் மகாகவி தாகூர். எனவே கடவுள் எனக்கானதை அவசியம் தருவார் என்பதில் தெளிவு வேண்டும். அதற்கு மேலாக பொறுமை வேண்டும். ஒருவர் நம்முடன் பேச வேண்டுமானால் இருவருக்கும் இடையே அன்பு வேண்டும். அவரது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புன்னகை மாறாத பாசம் வேண்டும். இவ்வாறு இருவருக்கும் இடையே அன்பு பிணைப்பு உருவாகும். நாளாக, நாளாக அவரே நம்மைத் தேடி நம் வீட்டுக்கு வரத் தொடங்குவார். அவர் உயர் பதவி வகிப்பவராக இருந்தால், அவரைச் சார்ந்த நன்மைகள் எல்லாம் நம்மைத் தேடி வரும்.உலகில் வாழும் மனிதர்களுக்கே இத்தனை செல்வாக்கு என்றால், உலகையே கட்டியாளும் கண்ணன் அந்த நபராக இருந்தால்...ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் கண்ணின் பிஞ்சுப் பாதங்கள் நம் வீட்டிற்குள் வருமாறு வரைந்து வரவேற்போம். அவன் வந்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என மகாகவி பாரதியார் பட்டியல் இடுகிறார். 'கண்ணன் என் அகத்தே கால் வைத்த நாள் முதலாய்...' எனத் தொடங்குகிறார் 'அகம்' என்பதற்கு 'வீட்டிற்குள்' ' மனத்திற்குள்' என பொருள் உண்டு. மகாத்மா விதுரர் வீட்டிற்குள் நுழைந்ததைப் போல தவத்தில் சிறந்த ஞானிகள், யோகிகள், சித்தர்கள் மனதிற்குள் அவனே விரும்பிச் செல்வான்அவன் நுழைந்தால் குசேலனுக்கு வழங்கியது போல கேட்காமலேயே அனைத்து நலன்களும் தருவான். கண்ணன் நுழைந்தது முதலாக என் எண்ணம், ஆராய்ச்சி எல்லாம் அவனைப் பற்றியதாக ஆகி விட்டது. கோபியருக்குள் ஒருத்தியாகவே நானும் ஆகிவிட்டேன் என்கிறார்.எல்லாம் கண்ணனின் பொறுப்பு என சரணடைந்து விட்டதால் அருளை வாரி வழங்குகிறான். செல்வம், இளமை, மாண்பு, சீர், நற்புகழ், கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், சிவஞானம் என்றும் ஒளி சேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன என்றும் சொல்கிறார்.'ஒளி சேர் நலம் அனைத்தும்' என்றால் நேர்மையான வழியில் நன்மை பெருகும் என நம்பிக்கை ஊட்டுகிறார். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? பெற்றோர், மனைவி, கணவன், குழந்தைகள், உறவினர், நண்பர் ஆகியோர் மீது காட்டும் அன்பு போல கண்ணனிடம் அன்பு செலுத்தினால் போதும். நம் அகத்துள்ளும் கால் பதிப்பான் கண்ணன். கண்ணன் என தகத்தே கால் வைத்த நாள் முதலாய் எண்ணம், விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இள மாண்பு, சீர் சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்தெளிவே வடிவாஞ் சிவஞானம் என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்தொடரும்அலைபேசி: 94869 65655இலக்கியமேகம் என். ஸ்ரீநிவாஸன்