உள்ளூர் செய்திகள்

உத்தரவின்றி உள்ளே வா

சிறிய நகரத்தின் கோட்டைவாசல் பூட்டியிருந்தது. இரு பணியாளர்கள் காவலுக்கு நின்றனர். அதில் வயதில் மூத்த காவலாளியிடம், வெளியூரை சேர்ந்த இளைஞன் ஒருவன், 'ஐயா இந்த நகரவாசிகள் எப்படிப்பட்டவர்கள்?'' என கேட்டான்.''ஏன் தம்பி ? இங்கு குடிவரப் போகிறாயா?'' எனக் கேட்டார். ''ஆமாம்... ஐயா.. நான் வாழும் ஊர் மோசமானது. எதற்கெடுத்தாலும் மக்கள் சண்டைக்கு வருவாங்க. ஒருவரைப் பற்றி ஒருவர் தப்பாக பேசி வம்புக்கு இழுப்பாங்க. அந்த ஊரை விட்டு வெளியேற விரும்புகிறேன்'' என்றான்.''அதை ஏன் கேட்கிறாய். உங்கள் ஊரை விட இது ரொம்ப மோசம். நீயோ நிம்மதியைத் தேடி வருகிறாய். உனக்கு இந்த நகரம் சரிப்படாது தம்பி'' என கூறி இளைஞனை திசை திருப்பினார். உடனிருந்த காவலாளிக்கு மூத்த காவலாளியின் மீது வருத்தம் உண்டானது. இருந்தாலும் ஏதும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து, ஒரு வியாபாரி துணி மூட்டையுடன் அங்கு வந்தான். அவனும், ''ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்ய விரும்புகிறேன். இந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள்?'' என கேட்டான். மூத்த காவலாளி சிரித்தபடி, ''என்னப்பா.. உனக்கு திருமணம் ஆகி விட்டதா?'' என கேட்டார். தலையசைத்தபடி இளைஞனும், ''ஆமாம்.. ஐயா.. இரு பெண் குழந்தைகள் இருக்குதுங்க'' என்றான். ''சரி... ஏன்? இங்கு வருகிறாய்... உங்கள் ஊரிலேயே வியாபாரம் பண்ணலாமே?'' என்றார் காவலாளி.''எங்க ஊரில் எல்லோரும் பாசக்கார மக்கள். அவர்களிடம் என்னால் கறாராக நடக்க முடியவில்லை. சொற்ப லாபத்திற்கு விற்பதால், வீட்டுச் செலவுக்கு பற்றாக்குறையாகி விடுகிறது. இன்னும் லாபம் சம்பாதிக்க விரும்புவதால், இங்கு வர விரும்புகிறேன். வியாபாரம் முடிந்ததும், என் ஊருக்கே திரும்பிச் செல்வேன்'' என்றான் வியாபாரி. ''நல்லது தம்பி.... உன் ஊர் போல, இங்கும் மக்கள் நல்லவர்கள். நம்பிக்கையா நீ வியாபாரம் நடத்தி லாபம் சம்பாதிக்கலாம்'' என்ற மூத்த காவலாளி கதவுகளைத் திறந்து உள்ளே அனுமதித்தார். மூத்த காவலாளியின் பேச்சைக் கேட்ட மற்றொரு காவலாளி குழம்பினார். 'முதலில் வந்த இளைஞரிடம் மக்கள் பொல்லாதவர்கள் என்றீர்கள். ஆனால் வியாபாரியிடமோ மக்கள் நல்லவர்கள் என்றீர்கள். ஏன் ஐயா இந்த முரண்பாடு?' என கேட்டார்.மூத்த காவலாளி, ''இந்த உலகம் கண்ணாடி போன்றது. நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே அது பிரதிபலிக்கும். முதலில் வந்தவன் வம்பு சண்டைக்காரன். அவனை அனுமதித்தால் நகரில் அமைதி கெடும். ஆனால் வியாபாரியோ அன்பு மனம் கொண்டவன். அவனால் நமக்கு நன்மையே உண்டாகும். அதனால் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமலேயே நகரத்திற்குள் அனுமதித்தேன்'' என்றார்.